ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (சென்னை – 20.7.2007
நாள்தோறும் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 20.7.2007 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டனவுரையாற்றினோம். நம்முடன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பும் பங்கேற்றது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்.
திராவிடர் கழகத் தோழர்களை நாம் சந்திக்கும் தொடர் கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டச் சுற்றுப் பயணத்தை 21.7.2007 அன்று திருவாரூரில் தொடங்கினோம். திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களின் தோழர்கள் பங்கேற்று இருந்தார்கள். அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடந்த நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, காரைக்கால் மாவட்டக் கழகத் தோழர்களின் கலந்துரையாடல் முடிந்த பின், இரவு நாகை அவுரி திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றினோம். மறுநாள் (22.7.2007) காலை அரியலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மாலை குறிஞ்சிப்பாடியில் சிதம்பரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்றன. அப்போது குறிஞ்சிப்பாடியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களின் மாமனார் கே.வி.நாராயணசாமி அவர்களின் படத்தினைத் திறந்து வைத்தோம்.

துரை.சந்திரசேகரன் அவர்களின் மாமனார் கே.வி.நாராயணசாமி அவர்களின் படத்தினைத் திறந்து வைக்கும் ஆசிரியர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் 22.7.2007 அன்று வெளிவந்தது. மநுவாத சக்திகளை எதிர்த்து முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் வெற்றி பெற்றார். “பெண்களை இழிவாய் மதித்த மநுதர்மத்தைக் கிழித்தெறிந்து ஒரு பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியே” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பினோம்.
கடவுள் பக்தன்,
கடவுளை வணங்குகிறவன்
அவன் முட்டாளானாலும்
“அறிவாளி” ஆனாலும் வணங்குகிறான்?
என்ன எண்ணத்தில் வணங்குகிறான்?
ஏதோ வேண்டுகோளின் மீதுதானே!
எதையோ எதிர்பார்த்து ஆசைப்பட்டுத்தானே
வணங்குகிறான் ?
கோவைக்கு அருகில் மதுக்கரையை ஒட்டியுள்ள திருமலையம்பாளையத்தில் அஞ்சலகத் தலைமை அதிகாரி சுமதியின் வீட்டில் அஞ்சலகம் செயல்படுகிறது. வீட்டிற்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது. அதுகுறித்து செய்தியை அறிந்தவுடன் நாம் கடும்கண்டனத்தைப் பதிவு செய்து அறிக்கை வெளியிட்டதுடன், ஒன்றிய அஞ்சல்துறை அமைச்சர் ஆ.இராசா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். அவரும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
பேரூர் துணைக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பி.முத்துராஜ், திருமலையம் பாளையம் சென்று விசாரித்ததில், குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்தது. பாலமுருகன் என்பவரின் புகாரின் பேரில் சுமதியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், அதே வீட்டில் குடியிருப்பு இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த அஞ்சல் நிலையம், இப்பொழுது வேறு ஓர் அறைக்கு மாற்றப்பட்டது. “அங்கு அனைவரும் வேறுபாடு இன்றிச் செல்லலாம்” என அஞ்சலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பிரதீபா பாட்டில்
அதன் பிறகு திராவிடர் கழகத் தோழர்களுடனான கலந்துறவாடலின் நான்காம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்கினோம். இந்தப் பயணமும் மிகவும் தெம்பூட்டும் வகையில் அமைந்திருந்தது.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் கலந்துறவாடல் சத்துவாச்சாரியில் 25.7.2007 அன்று முற்பகலிலும்,திருவள்ளூர், ஆவடி மாவட்டங்களின் கலந்துறவாடல் அன்று பிற்பகல் திருத்தணியிலும், விழுப்புரம், கல்லக்குறிச்சி, திண்டிவனம் கழக மாவட்டங்களின் கலந்துறவாடல் நிகழ்ச்சியும், காஞ்சிபுரம், தாம்பரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.7.2007 மாலை காஞ்சிபுரத்திலும், வடசென்னை, தென் சென்னை மாவட்டங்களின் கலந்துரையாடல் 28.7.2007 சனி மாலை சென்னை பெரியார் திடலிலும் எழுச்சியுடன் நடைபெற்றன.

கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவுரையாற்றும் ஆசிரியர்
ஒரு கூட்டத்தை இன்னொரு கூட்டம் விஞ்சியது என்கிற அளவுக்குத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். 55 மாவட்டக் கழகத் தோழர்களைச் சந்திக்கும் – உறவாடும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது.
ஜூலை மாதம் 2ஆம் தேதி குற்றாலத்தில் தொடங்கிய கழகப் பிரச்சாரம் – மாவட்டக் கழக அமைப்புகள் என்ற கழகக் களப்பணிகள் கடந்த 29ஆம் தேதி சென்னை மாவட்டங்களின் கலந்துரையாடல்களோடு நிறைவடைந்தன.

இராமன் பாலம் புரட்டு விளக்க மாநாடுஇராமநாதபுரம், (இராமேஸ்வரம் 1.8.2007) காரைக்குடி சுற்று வட்ட மாவட்டங்கள் சார்பில் பிரச்சார நிதி (இராமேஸ்வரம் 1.8.2007)
மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அனைவருக்குமே தந்தது அப்பணி!
பல்லாயிரம் கழகக் குடும்பங்களைச் சந்தித்து உரையாடியதில், நலம் விசாரித்து மகிழ்ந்ததில், கருத்துகளைப் பரிமாற்றம் செய்துகொண்டதில் எல்லோருடைய பாட்டரிகளையும் ‘ரீ-சார்ஜ்’ செய்ததாக ஆகியது!
இராமநாதபுரத்தில் இராமன் பாலம் புரட்டு விளக்க மாநாடு, திறந்த வெளி மாநாடாக 1.8.2007 அன்று நடைபெற்றது. தோழர்கள் இரவு பகலாக உழைத்து மிகச்சிறப்பான மாநாடாக நடத்திக் காட்டினர். பக்கத்து மாவட்டங்களான மதுரை மாநகர், மதுரை புறநகர், சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய கழக மாவட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு கொள்கைப் பிரவாகம் ஓடுவது கண்டு மகிழ்ந்தனர். மாவட்டத் தலைவர் கே.எம்.சிகாமணி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு அண்ணா ரவி வரவேற்புரையாற்றினார்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். தஞ்சை இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழக சட்டத்துறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் கி.மகேந்திரன், ராமநாதபுரம் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சிவாஜி, அமைச்சர் சுப.தங்கவேலன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

கவிஞர் வேழவேந்தன் எழுதிய ‘அனல்மூச்சு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா (4.8.2007)
இறுதியாக, நாம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம் என்றும், மீனவர்களின் தொழில் வளர்ச்சிக்கான திட்டம் என்றும், நாட்டு மக்களுக்கான தொழில் வளர்ச்சித் திட்டம் என்றும் விளக்கி, தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் நடைபெற்ற போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைத்து இந்தப் பகுதிகளில் அமைதி நிலவவும் ஜாதிக் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தொலைநோக்குத் திட்டங்களைத் தருமாறு கூறியதையும் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தந்த அறிக்கையில் முக்கியமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று கொடுத்ததையும், அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக கலைஞர் இருக்கிறார் என்பதையும் விளக்கி உரையாற்றினோம்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
இந்த நாட்டில் சமூகநீதி சமத்துவ உணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் உயர்ஜாதியினர் உச்சநீதிமன்றத்தில் அதைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தனர்.
தந்தை பெரியாரின் வேண்டுகோளால், டாக்டர் கலைஞர் அவர்களின் முயற்சியால் ஜோலார்பேட்டை வரதராசன் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் முதல் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதியாக நியமிக்கப்பட்டு, அவரே உச்சநீதிமன்றத்திற்கும் முதல் ஒடுக்கப்பட்ட நீதிபதியாகச் சென்றார்.

‘பெரியார்’ திரைப்பட 100ஆம் நாள் விழாவில் இனமுரசு சத்யராஜ் அவர்களுக்கு
பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை முதலமைச்சர் கலைஞர் அணிவித்தார்
அதுபோல் முதல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் இருந்தபோது கூடுதல் நீதிபதியாக இருந்த அசோக்குமார் நிரந்தரமாக்கப்பட்டார். அவரை நிரந்தரமாக்கிடப் பரிந்துரைப்பதற்கு தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இருந்த நிலையில், அதனை அவரிடமிருந்து பறிக்கவும் அவரது முயற்சிகளைத் தடுக்கவும், பொது நல வழக்கு என்ற பெயரில் தந்திரமாக முயன்றனர். அதனை வந்த வேகத்திலேயே நிராகரிக்க வேண்டிய சில உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதனை வாய்ப்பாக வைத்து கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களுக்குத் தொல்லை தந்து தேவையற்ற கேள்விகளைக் கேட்டதைக் கண்டித்து எழுதிய நாம் 03.07.2007 அன்று சென்னை பெரியார் திடலில் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, இவ்வாறு செய்தால் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தோம். மேலும், நீதிபதிகளை நியமிக்க ஒருதனிக் குழுவை அமைக்கவேண்டும் என்றும், அது நிரந்தரமாக்கப் பட்டு, நேஷனல் ஜுடிஷியல் கமிஷனாகச் செயல்படவேண்டும் என்றும், அதில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகளும் இருக்கவேண்டும் என்றும் விளக்கினோம்.

‘பெரியார்’ பட விழாவில் நடிகர் சிவக்குமார் அவர்களுக்கு நினைவுப்பரிசு இனமுரசு சத்தியராஜ் அவர்களுக்கு நினைப்பு பரிசு
மேனாள் அமைச்சர் கா.வேழவேந்தன் எழுதிய “அனல் மூச்சு” என்னும் கவிதைத் தொகுதி, அதன் ஆங்கில மொழியாக்கம், புலவர் தங்கசங்கர பாண்டியன், அவர்களின் ‘வேழவேந்தன் கவிதைகள் – ஒரு மதிப்பீடு’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா 04.08.2007 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கலைஞர் அவர்கள் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம். கவிஞர் வேழவேந்தன் அவர்கள் எங்களோடு மிசாவில் இருந்த சக தோழர். தந்தை பெரியார் அண்ணா வழியில் கலைஞருடன் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டவர். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுப்புகளை எழுதியிருந்தார்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியார்களின் வழக்கைத் துரிதப்படுத்தக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் 5.8.2007 அன்று நடைபெற்றது. திருச்சியில் பங்கேற்று உரையாற்றினோம். தொடர்ந்து நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக கூட்டத்திலும் பங்கேற்றோம். அன்று மாலை மாநில இளைஞரணிக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினோம்.
மறுநாள் 6.8.2007 அன்று தாம்பரம்மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை வீரபத்திரன் அவர்களின் வாழ்விணையர் கஸ்தூரி வீரபத்திரன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த பெரியார் மணியம்மை இலவச நூலகம் – படிப்பகம் திறப்பு விழாவில் பங்கேற்றோம். நிகழ்ச்சியில் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் ‘மந்திரமா – தந்திரமா?’ நிகழ்ச்சியை நடத்தினார். கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்கள் கஸ்தூரி வீரபத்திரன் படத்தினைத் திறந்து வைக்க, நாம் நூலகத்தைத் திறந்து வைத்தோம்.
‘பெரியார்’ திரைப்பட 100ஆம் நாள் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில், ‘பெரியார்’ திரைப்படத்தைத் தயாரித்தலிபர்ட்டி கிரியேஷன்ஸ் இயக்குநர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை வரவேற்புரையுடன் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார். பெரியார் திரைப்படத் தயாரிப்பில் உதவிய இயக்குநர்கள் அமிர்தம், இராம.நாராயணன், தொலைக்காட்சி வீரபாண்டியன், பட விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவின் தொகுப்புரையை, கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் சிவகுமார், படத்தில் பங்கேற்ற நடிகை மனோரமா, குஷ்பு, ‘இனமுரசு’ சத்யராஜ், ஒளிப்பதிவு இயக்குநர் தங்கர்பச்சான், இயக்குநர் ஞான. ராஜசேகரன் ஆகியோர் உரைக்குப்பின், நாம் உரையாற்றினோம். இறுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் எழுச்சியுரையாற்றினார்.
‘பெரியார்’ திரைப்பட நூறாம் நாள் விழாவையொட்டி பெரியார் திடலில் திறக்கப்படவிருக்கும் ‘சத்யராஜ் கூடம்’ (Sathyaraj Block) கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவையும் அடையாளபூர்வமாக கலைவாணர் அரங்கில் கலைஞர் செய்து வைத்தார்.
தந்தை பெரியார் திரைப்படத்தில் பெரியாராகவே மாறி நடித்து வாழ்க்கையிலும் பெரியார் கொள்கைகளை ஏற்று அனைவருடைய பாராட்டுகளையும் பெற்ற சத்யராஜ் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சொத்தான அந்த மோதிரத்தை – விலைக்கு விற்கப்பட்ட மோதிரத்தை – லிபர்ட்டி கிரியேசன் சார்பாக வாங்கி, அனைவருடைய கைதட்டல்களுக்கிடையே முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் நாம் வழங்க, அந்த மோதிரத்தைக் கலைஞர் அவர்கள் ‘இனமுரசு’ நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு (பெரியார் படத்திற்கு ஒரு பைசாகூட சம்பளம் வாங்காமல் நடித்ததால்) அணிவித்தார்.
‘ஆச்சி’ மனோரமா தனது உரையில், “எத்தனையோ படங்களில் நடித்த எனக்கு பெரியார் திரைப்படத்தில் நடித்தது மிகப் பெரிய பாக்கியம்” என்றார்.
ஒளிப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தனது உரையில், “பெரியார் படம் உருவான கதையை நாங்கள் இரண்டு மணி நேரம் தயாரித்து வைத்திருக்கிறோம்” என்றார்.
நடிகை குஷ்பு தனதுரையில், “கடந்த 20 வருடங்களாக 150க்கும் மேற்பட்ட படங்களை நடித்த எனக்கு இந்த பெரியார், படத்தில் நடிக்க மிகவும் கடினமாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்ததால் எனக்கு மிகப் பெரிய பெயரும் கிடைத்தது” என்றார்.
பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரன், இந்தப் படம் உருவான வரலாற்றை விளக்கிய அவர், தனக்கு எந்தவிதத் தடையும் சொல்லாமல் ஊக்கமளித்த தலைவர் வீரமணி, பெரியார் திரைப்படத்திற்கு ரூ. 95 லட்சம் அளித்த முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரபல திரைப்படக் கலைஞர் சிவகுமார் தனது உரையில், “நம் ஆயுள் காலத்தில் பெரியாரைப் போன்று இப்படி ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. பெரியாருடைய வரலாற்றை முழுமையாக எடுக்கமுடியாது. கடல் நீரைக் கலசத்திற்குள் அடைக்கிற மாதிரிதான் பெரியார் படம் எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
அடுத்து ‘இனமுரசு’ நடிகர் சத்யராஜ் தனது நன்றி உரையில், “பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை எனக்கு அணிவித்திருக்கின்றார்கள். இந்த மோதிரத்திற்குரிய மரியாதையைப் பார்த்து, பயந்து என் வாழ்வின் கடைசி வரை மரியாதையைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இறுதியாக உரையாற்றிய கலைஞர் அவர்கள் “பெரியாருக்காகப் படம் எடுத்தோம். அதன் மூலம் நாம் பெற்ற பாடத்தை இந்தப் பார்முழுதும் பரப்புவோம். அந்தப் பாடம் பரவினால்தான் – அந்தப் பகுத்தறிவு ஜோதி பரவினால்தான் மனிதன் மனிதனாக வாழ முடியும் என்பதை மறவாமல் நடைபோடுவோம்” என்று குறிப்பிட்டார்.
(நினைவுகள் நீளும்…)





