நூலகம் என்று பெயர் போடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நூலகத்தில் ஒரு நூல் கூட இல்லை. திரும்பி வந்து விளம்பரப் பலகையைப் பார்க்கின்றீர்கள். அதில் மனித நூலகம் என்று போடப்பட்டிருக்கிறது அப்படி என்றால்! என்று வியப்படைந்து அந்த நூலகத்தின் உள்ளே போய் விசாரிக்கிறீர்கள். அங்கிருப்பவர் சொல்கிறார் இது நூலகம்தான்; ஆனால், இது மனித நூலகம். இங்கு நூல்களுக்குப் பதிலாக மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் படிக்கலாம் என்று குறிப்பிடுகிறார். மனிதர்களைப் படிப்பதா? என்று நீங்கள் கேட்டால், ஆமாம் மனிதர்களைப் படிப்பதற்காகத் தான் இந்த நூலகம் என்று சொல்கின்றார்.
குறிப்பாக நூலகத்திற்குள் இருக்கும் நூல்கள் எல்லாம் பெரும்பாலும் எழுதுகிறவர்களின் அனுபவம்தான்,அறிவுத் தொகுப்புதான்.அதிலும் தன் வரலாற்று நூல்கள் பெரும்பாலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை,அவரது போராட்டத்தை,வெற்றியை,அவருக்கு உதவிய சூழல்கள்,உதவிய மனிதர்கள் என்று பல தகவல்களை வாசிப்பவர்களுக்குத் தருகிறது.அய்யா ஆசிரியர் அவர்களின் ‘அய்யாவின் அடிச்சுவட்டில் ‘ என்னும் நூல்கள் ,அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இளமைப்பருவத்து நிகழ்வுகள் முதல் இன்றைய இயக்கத்து நிகழ்வுகள் வரை தொடர்ச்சியாக எடுத்துச்சொல்கிறது.இளமைக்காலத்தில் எப்படி அவர் இயக்கத்திற்கு அவரது ஆசிரியர் திராவிடமணி அவர்களால் அழைத்துவரப்பட்டார் என்பதுவும் அவரது இளமைக்கால நிகழ்வுகளும் நமக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுக்கின்றன.அதுபோலவே டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி ‘ தொகுப்புகள் அவரது இளமைக்காலம் முதல் அவரது ஒவ்வொரு அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள உதவும் காலப்பெட்டகமாக இருக்கிறது.இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.தன் வரலாற்று நூல்கள் நமக்கு மிகப்பெரும் உற்சாகத்தைத் தரும் ஊக்கமருந்துகளாக எப்போதும் இருக்கின்றன.
தன் வரலாற்று நூலுக்குப் பதிலாக ஒரு மனிதரே நூலாக அமர்ந்து இருந்தால், அவர் தன் வாழ்வோடு தொடர்புடைய பல செய்திகளை, தனது போராட்டத்தை,தோல்வியை,சூழலை,வெற்றியைச் சுற்றி அமர்ந்து இருக்கும் பலர் கேட்கக் கேட்க சொல்பவராக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட எண்ணத்தில் தோன்றிய அமைப்புதான் மனித நூலகம் என்னும் அமைப்பாகும். இந்த மனித நூலகம் அமைப்பு ‘மக்கள் வழக்கமாகச் சந்திக்காதவர்களுடன் பேச உதவுவதன் மூலம் மக்கள் மனதில் இருக்கும் தவறான எண்ணங்களைச் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனக் குறிப்பிடுகின்றனர்.
உலகத்தின் முதல் மனித நூலக நிகழ்வு டென்மார்க் நாட்டில் கோபன் ஹேகன் நகரத்தில் 2000ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிகழ்வை ரோனி , டேனி அபெர்கெல், அஸ்மா மவுனா,கிறிஸ்டோஃபர் எரிக்சன் ஆகியோர் இணைந்து நடத்தி இருக்கின்றனர். மனித நூலகம் என்னும் அமைப்பு ஒரு சர்வதேச அமைப்பு. இது சில இடங்களில் நிரந்தர அமைப்பாகவும், சில இடங்களில் தற்காலிமாக ஏற்பாடு செய்து நடத்தப்படுவதாகவும் இருக்கிறது. மக்களிடம் நிலவும் வேற்றுமைகளை,பாகுபாடுகளை எதிர்த்து அறை கூவல் விடும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது உலகில் உள்ள 80 நாடுகளில் இந்த மனித நூலகங்கள் செயல்படுகின்றன என்று குறிப்பிடுகிறார்கள்.
“வழக்கமான நூலகத்தின் கருத்தின் அடிப்படையில்தான் இதுவும் செயல்படுகிறது. ஒரு புத்தகம் எப்படி வாசிக்கப்படுகிறதோ விவாதிக்கப்படுகிறதோ ஒரே கருத்துடைய வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ளப்படுகிறதோ அதே போன்றுதான் மனித நூலகத்தில் மனிதர்கள் உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ அதே மாதிரி இங்கே உரையாடுவதற்கும் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த நூலகப் பட்டியலிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே வாழும் மனிதரை இரண்டு வாசகர்கள் தேர்ந்தெடுப்பது, குழுவாகத் தேர்ந்தெடுப்பது போன்றவையும் சாத்தியம்தான்.
எப்படி வேறுபட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இருக்கின்றனவோ, அதைப்போல வேறுபட்ட பிரச்சனைகள்,தொண்டறப்பணி செய்யும் மனிதர்கள் இங்கு நூல்களாக இருக்கிறார்கள். இது ஒரு புதிய சிந்தனை. மனிதர்களுக்குப் பதிலாக எல்லா இடங்களிலும் இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் நூல்கள் இருக்க வேண்டிய இடத்தில் உயிர் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நூலகங்களை இன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதே!
சில மனிதர்கள் தனித்து இருக்கிறார்கள் மற்றவர்களுக்கு இல்லாத ஏதோ ஒரு பிரச்சனை அவர்களுக்கு உடல் ரீதியாக இருக்கிறது தனித்துப் போய் இருக்கும் அவர்கள், தான் படும் வேதனைகளையும் தனக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் எவரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களும் இந்த மனித நூலகத்தில் நூல்களாக மாறுகிறார்கள். ஒரு நூலகத்தில் ஒரு நூல் இருந்தால் எப்படி அங்கு வந்து செல்லக்கூடிய வாசகர்கள் அந்த நூலை எடுத்துப் படிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதோ அதைப் போல மனித நூலகத்திற்கு வரக்கூடியவர்கள் நூல்களாக இருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றி மேலோட்டமாக முதலில் தெரிந்து கொள்கிறார்கள். நாம் நூலகத்திற்குள் சென்று ஒரு புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு இதைப் படிக்கலாம் என்று முடிவு செய்து நாம் எடுத்துப் படிப்பது போல மனித நூலகத்திற்குள் இருக்கும் மனிதர்களைப் பற்றி மேலோட்டமாக முதலில் தெரிந்து கொள்கிறார்கள் பின்பு அவர்களைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறபோது அந்த நூலக மனிதரை வாசிக்கவும் அவர் சொல்வதைக் கேட்கவும் அந்த மனித நூலகத்தின் அமைப்பாளரிடம் பதிவு செய்து கொள்கிறார்கள் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மனித நூலகத்திற்கும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பக் கூடியவர்களுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள் பின்பு உரையாடல் ஆரம்பிக்கிறது எல்லோரும் மனித நூல்களாக ஆக முடியாது. அதற்குத் தனித்தன்மை இருக்கவேண்டும்.
தேனி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு தோழர்கள் பற்றி அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் ‘தொண்டால் உயர்ந்திடும் தோழர்கள்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டார்கள்.’போடி நாயக்கனூர் நகராட்சி-பெரியார் சமத்துவபுரம் எரிவாயு தகன மயானம்’ என்பதை நம்முடைய திராவிடர் கழகத் தேனி மாவட்ட காப்பாளர் அய்யா ச.இரகுநாகநாதன் அவர்கள் நடத்தும் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. அதில் அய்யா ச.இரகுநாகநாதன், அம்மா பேபி சாந்தா, சா.ர.லெனின், தேனி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் சுருளிராஜன் ஆகியோர் இருக்கிறார்கள். ஒரு முறை சுருளிராஜன் அவர்களோடு ஓர் இரண்டு மணி நேரம் பயணம் செய்தபோது தோழர் சுருளிராஜன் அவர்களுக்கு இந்த எரிவாயுத் தகனம் குறித்துத் தொடர்ச்சியாகத் தொலைப்பேசி அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன.அவர் பதில் சொல்லி வழிகாட்டிக்கொண்டே வந்தார்.நான் பிறகு அவரிடம் அதைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டேன். தோழர் சுருளிராஜன் அவர்களையோ அல்லது அய்யா இரகுநாகநாதன் அவர்களையோ நாம் மனித நூலாக மாற்ற இயலும்.
அதைப்போலத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் ஆண்டிபட்டி ஸ்டார் ச.நாகராஜன் அவர்கள் பல்லாண்டு காலமாகக் குருதிக்கொடை முகாமை நடத்திக்கொண்டு வருகிறார். அய்யா ஆசிரியர் அவர்களும் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் மனதாரப் பாராட்டும் தொண்டறப்பணி அது! வேறுபட்ட அனுபவம் கொண்டது அவரது வாழ்க்கை. இப்படிப்பட்ட நமது பொறுப்பாளர்களை மனித நூல்களாக மாற்றி நாம் ஒரு நிகழ்வை நடத்தலாம். மேற்கண்ட தோழர்கள் மனித நூலகத்தின் நூல்களாக மாறுவார்கள். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இந்த இடத்தில் இவர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்படும். அவர்கள் நூல்களாக மாறித் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். நூலினைப் படிக்கும் வாசகர்கள் போல இந்தச் செயல்பாட்டில் ஆர்வம் உள்ள சிலர் இந்த நூலகத்தில் வந்து தங்கள் கேள்விகளை இவர்கள் முன் வைப்பார்கள்.உரையாடல் குறிப்பிட்ட நேரம் நடக்கும். அடுத்தவர் மனித நூலாக வந்து அமர்வார். அவரிடம் ஒரு அரைமணி நேரமோ,ஒரு மணி நேரமோ கேள்விகள் கேட்பார்கள். அவர்கள் பதில் சொல்வார்கள். இன்னும் பல பகுதிகளில் இருக்கும் நம்முடைய தனித்தன்மை வாய்ந்த தோழர்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். நாம் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்தினால் புதுமையாக இருக்கும்.
இப்போது இந்த மனித நூலகம் அமைப்பிற்குப் பல விதிகளை வைத்திருக்கிறார்கள்.மனித நூலகம் அமைப்பதற்கு ஒரு நகரத்தில் விண்ணப்பிக்கும் பலரில் ஒருவருக்கு மட்டுமே இந்த நூலகம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் சாய்லட்சுமி என்பவர் இந்த மனித நூலக அமைப்பை நடத்துகிறார். அவர் அளித்த பேட்டி தினத்தந்தியில் வெளியாகியிருக்கிறது. “சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் சாய்லட்சுமிதான், தமிழ்நாட்டுக்கு முதன்முதலில் மனித நூலகத்தை அறிமுகப் படுத்தியவர். 2017ஆம் ஆண்டு, 13 மனிதப் புத்தகங்களோடு இவர் தொடங்கிய நூலகம், இன்று 80க்கும் மேற்பட்ட மனிதப் புத்தகங்களோடு பரந்து விரிந்திருக்கிறது. பலருக்குப் பரிட்சயம் இல்லாத நூலகமாக இருந்தாலும், மனித நூலகத்திற்கு எனத் தனி வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகப் புதுப்புது மனிதப் புத்தகங்களோடு, குறிப்பிட்ட இடைவெளியில் மனித நூலகத்தை ஆங்காங்கே நடத்திக் கொண்டிருக்கிறார், சாய்லட்சுமி.” என்று ‘தினத்தந்தி’ அவரின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது.
https://www.dailythanthi.com/News/Sirappu Katturaigal/2019/04/06144750/A-human-library-of-speaking-books.vpf .
சிங்கப்பூர் நாளிதழ் ‘தமிழ் முரசு’, சிங்கப்பூரில் ஜனவரி 2025ஆம் தேதி நடைபெற்ற ‘மனித நூலகம்’ நிகழ்வு பற்றிச் செய்தி வெளியிட்டிருக்கிறது.“வெளியுறவு விவகாரம், ஆசிரியர், மருத்துவம், தற்காப்பு, தொற்றுத் தடுப்பு, தகவல் தொடர்பு, அரசு நீதிமன்றங்கள், சிறைச் சேவை என அரசாங்கப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்கள், ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்’ எனும் நிகழ்ச்சியில் நூல்களாகத் திகழ்ந்து தங்களுடைய பணியிட அனுபவங்களையும் அறிவுரைகளையும் சுமார் 40 பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர். “
https://www.tamilmurasu.com.sg/singapore/human-library-experience-youth
இப்படிப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவில் அய்தராபாத்,விஜயவாடா எனப் பல நகரங்களில் நடைபெறுகின்றன. நாமும் கூட இந்த மனித நூலகம் நிகழ்வில் ஒரு வாசிப்பாளராகப் பங்கேற்கலாம். அது எப்படி நடைபெறுகிறது என்பதைக் கூர்ந்து கவனித்து மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லலாம். l





