Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

டி.எம்.நாயர்- பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்

அங்கிங்கெ னாதபடி எங்கும் பார்ப்பார்

அரசியலில் பணியிடத்தில் நிறைந்தார் முற்றாய்!

இங்குள்ள நிலமைந்தர் வாய்ப்பே யின்றி

இழிநிலையில் கடைநிலையில் தேக்க முற்றார்!

சங்கொலியாய் எதிர்க்குரலை உரத்துக் கூவித்

தராவத்து மாதவனாம் நாயர் வந்தார் !

பங்கெமக்குப் பதவிதனில் வேண்டு மென்றே

படைநடத்திப் போராடி வெற்றி பெற்றார்!

 

தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி னாரே

தமிழ்நாட்டில் அன்னிபெசன்ட் அம்மை யாரே!

இன்னாசெய் பார்ப்பனரை ஆட்சி தன்னில்

இருத்திடத்தான் உதவுமிந்தத் திட்ட மென்றே

கண்துஞ்சாக் கடமையாற்றும் நீதிக் கட்சி

கடுமெதிர்ப்பைக் காட்டியதே தன்னாட் சிக்கு!

“அன்னிபெசன்ட் பார்ப்பனரின் நலனைக் காக்கும்

அயர்லாந்துப் பார்ப்பனரே!” நாயர் சொன்னார்!

 

வருகின்ற ஆபத்தை உணர்ந்த நாயர்

வாதிட்டார் பார்ப்பில்லார் நலனைக் காக்க!

மறுப்பேதும் சொல்லாமல் அமைதி கொண்டால்

மநுக்கூட்டம் ஆட்சிதனில் அமர்வார் என்றே

பொறுப்புள்ள பார்ப்பில்லாத் தலைவர் கூடிப்

புதிதாகப் பார்ப்பில்லார் சங்கம் ஒன்றை

அரும்பணியார் மாதவனார் முன்னே நிற்க

அமைத்திட்டார் தென்னகம்வாழ் பார்ப்பில் லார்க்காய்!

 

பார்ப்பில்லார் நலன்காக்கும் பணியைச் செய்யப்

பத்திரிகை ஏதுமிங்கே இல்லா நேரம்

பார்ப்பில்லா மக்கள்தம் உரிமை பேசப்

படைத்தாரே செய்தித்தாள் மூன்றாய் நன்றே!

ஆர்வமுடன் நாயரவர் பொறுப்பை யேற்றே

ஆங்கிலத்தில் நீதியெனும் ஏட்டைத் தந்தார்!

போர்முரசாய்க் கட்டுரையில் கருத்தைச் சொல்லிப்

போர்வாளாய்க் களம்கண்டார்! நாயர் வாழ்க!

 

பரங்கியரின் ஆட்சியின்கீழ் அடங்கி நின்றே

பாராளும் தன்னாட்சி தருவோ மென்று

பரங்கியராம் மான்டேகு செம்சு போர்டு

பங்கேற்ற குழுவறிக்கை தாக்கல் செய்தார்!

தரக்கேட்டுத் தனித்தொகுதி பார்ப்பில் லார்க்கே

தலைவர்கள் நாயருடன் இலண்டன் சென்றார்!

உரத்தகுரல் தனைக்கேட்ட பரங்கி யர்கள்

உடனமைத்தார் சவுத்பாரோ குழுமந் தன்னை!

 

மறுத்திட்டார் சவுத்பாரோ பார்ப்பில் லார்க்கே

வழங்கிடவே தனித்தொகுதி தேர்தல் தன்னில்!

வருத்துகின்ற உடல்நோயால் வதங்க லுற்றும்

மறுப்பின்றி இலண்டனுக்கு மீண்டும் சென்றார்!

பொறுப்பினிலே உள்ளோரைக் கண்டு பேசிப்

போர்க்குரலைப் பதிவிட்டார் நீதி கேட்டு!

மருத்துவமும் நலங்கூட்டா நிலைமை யாலே

மறைந்தாரே மாதவனார் உரிமைப் போரில்!

 

பின்னாளில் பரங்கியர்கள் பார்ப்பில் லார்க்குப்

பிரித்தளித்தார் தனித்தொகுதி! பெற்றோம் வெற்றி!

பின்னமைந்த ஆட்சிதனை நீதிக் கட்சி

பிடித்ததுவும் இதனால்தான்! நாயர் வாழ்க!

நன்மைதரும் வகுப்புவாரிச் சட்டங் கொண்டு

நம்மவர்க்குப் பணியிடத்தைப் பகிர்ந்தே தந்தார்!.

இன்றுள்ள ஒதுக்கீட்டிற் கிதுவே மூலம்

இத்தனைக்கும் மூலவராம் நாயர் வாழ்க!

 

திராவிடத்தின் லெனினென்று பெரியார் சொன்னார்!

தீரமுடன் போராடும் குணத்தைக் கண்டு!

மருத்துவத்தில் மகத்துவத்தைப் பெற்ற போதும்

மக்களுக்காய்ப் போராடக் களத்தில் நின்றார்!

திருமணமும் செய்யாமல் தனித்தி ருந்தார்!

செருவென்ற சேரலாதன் மாத வர்தான்!

கரம்கூப்பி மாதவனார் கடமை போற்றிக்

காலமெல்லாம் வணங்கிடுவோம்! வாழி எம்மான்!  l