ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரயில் பாலமே உலகின் உயரமான இரயில் பாலம் என்ற பெருமையைப் பெறுகின்றது. பூகம்பம், வெடிகுண்டு ஆகியவற்றின் தாக்குதலைத் தாங்கக் கூடிய, ஈஃபில் கோபுரத்தை விட உயரமான ‘பொறியியல் அதிசயம்’ எனக் கருதப்படும் இந்தப் பாலம் உருவாக்கத்தில் மாதவி லதா என்ற ஒரு பெண் பொறியாளரின் 17 ஆண்டுகள் தொடர் உழைப்பும் பங்களிப்பும் பெரும் பங்கு வகிக்கிறது
என்பது, மிகக் கடினமான பணிகளில் பெண்கள் சிறப்பாகக் கடமையாற்றக் கூடியவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், ஏடுகுண்டலபாடு என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்ற இவருக்கு மருத்துவம் படிக்கும் ஆர்வமே மிகுதி என்றாலும், குடும்பப் பொருளாதார சூழ்நிலை காரணமாக பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தார். தொடர்ந்து எம்.டெக்., முடித்த அவர், சென்னை அய்.அய்.டி.யில் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இஞ்சினீயரிங் துறையில் பணியாற்றி வரும் பொறியாளர் மாதவி லதா இத்துறையின் முதல் பெண் பேராசிரியர் என்ற சிறப்புக்கும் உரியவர்.
2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணியில் தொடக்கத்தில் அதன் உறுதித்தன்மை பற்றிக் கேள்வி எழுந்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர், பாலம் கட்டுவதில் ஈடுபட்டிருந்த நிறுவனம் பொறியாளர் மாதவி லதாவின் ஆலோசனையை நாடியது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப ஆலோசகராகப் பொறுப்பேற்ற அவர் தனது குழுவினருடன் ஆய்வு செய்து பாறை இடுக்குகள்,பிளவுகளை அஸ்திவாரமாகப் பயன்படுத்தி மிகப்பெரிய இரும்புத் தூண்கள் நிறுவி பாலத்தை வடிவமைத்து இன்று வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
முகம் தெரியாத பல்வேறு பணியாளர்களின் பங்களிப்பே இம்மாபெரும் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம் என்பதை வலியுறுத்தும் பொறியாளர் மாதவி லதா கடந்த 17 ஆண்டுகளில் ஊடக வெளிச்சம் தன் மீது விழுவதை கவனமாகத் தவிர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணால் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.





