Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம் – 2-த.சீ.இளந்திரையன்

சுயமரியாதை இயக்கம் புதுமையிலும் புதுமையான கருத்துகளைத் திராவிட மக்களிடம் விதைத்தது. புரட்சி என்பதைச் சொல்லாக அல்ல, செயலாகச் செய்து முடித்தது. சுயமரியாதை இயக்க வீரர்கள் பரப்புரை செய்யும் வாய்ச் சொல் வீரர்களாய் இல்லை. கொள்கை வழி வாழ்ந்து காட்டிய செயல் வீரர்களாய் இருந்தனர்.

அரசுத் துறையில் இருந்தாலும்,. நுண்மாண்நுழைபுலம் பெற்றிருந்த அறிஞராக இருந்தாலும், பெருஞ்செல்வந்தராய் இருந்தாலும், வறுமைநிலையில் இருந்த தொண்டரானாலும் தந்தை பெரியாரின் கட்டளையை வென்று முடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாய்த்  தொண்டாற்றினர்.  சுயமரியாதை வீரர்களின் தூய தொண்டினால், மடமையில் மண்டிக்
கிடந்த நம் இன மக்கள் மெல்ல மெல்ல விழித்தனர்.  வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்டிட அயராது உழைத்த சுயமரியாதை இயக்க மான மறவர்களின் தீரம் நிறைந்த பணிகளை அசைபோடுவோம். அவர்கள் வழி நடக்க உறுதியேற்போம்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் என் தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன்:

பெல்லாரிச் சிறையில் தந்தை பெரியார் சிறைபடுத்தப்பட்டிருந்தபோது, சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமாநாட்டில், நம் அறிவாசான் அனுப்பிய தலைமை
யுரையைப் படிக்க வந்த ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

“இந்த மாலைக்கு உரியவன் நானல்ல; எனவே, என் தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் தாளுக்கு இடுகிறேன்” என்று பெரியாருக்குச் சிறப்புச் செய்த பெருமகனார் தான் திராவிடர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம்.

யார் இந்த பன்னீர்செல்வம்?

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் இயக்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர் ஏ.டி.பன்னீர்செல்வம் ஆவார்.  இதுமட்டுமன்று, தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர், மாவட்டக் கல்வி மன்றச் செயலாளர், தஞ்சை நகர்மன்றத் தலைவர், சென்னை அரசின் உள்நாட்டு அமைச்சர், இடைக்கால அரசின் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளைப் பயன்படுத்தி திராவிடர் மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, இராசா மடம் போன்ற சத்திரங்களில் பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தங்கி கல்வியும் உணவும் பெற்று வந்த நிலையில்,  பார்ப்பனரல்லாத குழந்தைகளையும் கல்வியுடன் உணவும் பெறும் உரிமையைப் பெற்று வழங்கியதோடு மட்டுமல்லாமல்,  திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரியில் பார்ப்பனர்கள் தவிர மற்ற மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து சமூக மாணவர்களும் கல்வி பயில வழிவகை செய்தார் திராவிடர் தளபதி  பன்னீர்செல்வம்.

உங்களுக்கு வார்தா புனிதமானால்-

எங்களுக்கு ஈரோடு புனிதம்:

திராவிடர் தளபதி பன்னீர்செல்வம் மறைந்தபோது, பெரியார் தீட்டிய இரங்கலுரை படிப்போரை நிலைகுலையச் செய்யும். கண்ணீர் குளமாகும். இதயம் கனக்கும்.

இதோ அந்த இரங்கலுரை:

“என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும், இயற்கைதானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்றுதான் கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20ஆம் வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; கதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும், தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது என்பதாக விரியும் அந்த இரங்கலுரை.

யாருக்காகவும் கண்கலங்காத பெரியார் பன்னீர்செல்வம் அவர்களின் மறைவை ஏற்க முடியாமல் துவண்டு போனார் என்றால் பன்னீர்செல்வம் எத்தகைய சுயமரியாதை வீரர் என்பதை நினைத்து நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

சி.டி.நாயகம் உண்மையில் கண்ணியமானவர்:

அக்டோபர் 7, 1878ஆம் ஆண்டு பிறந்த சி.டி.நாயகம் 1904ஆம் ஆண்டு தனது 26ஆம் அகவையில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். இப்பள்ளியில் மதிய உணவும் வழங்கப்பட்டது. பின்னர், சென்னை தியாகராயர் நகரிலும், சொந்த ஊரிலும் ஆசிரியர் பயிற்சி
பள்ளியைத் தொடங்கி  இலவசக் கல்வியை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர், விதவை ஆகியோரின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்
காற்றிய பெருமைக்குரியவர்தான் செட்டிகுளம் தெய்வநாயகம் எனும் சி.டி.நாயகம்.

இந்தி எதிர்ப்புப் போரின் முதல் சர்வாதிகாரி:

கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் எனும் உயர் பொறுப்பு வகித்த சி.டி.நாயகம் அவர்கள் திராவிட மக்களின் மேன்மைக்காக அரசுப் பணியைப் பயன்படுத்திய அருஞ்சாதனையாளர்!

பணி ஓய்வு பெற்றவுடன் சுயமரியாதை இயக்கத்தின் தீவிரக் கொள்கை வீரரான சி.டி.நாயகம் முதல் இந்தி எதிர்ப்பு போரில் முதலாவது சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்று 18 மாதம் சிறையேகினார்.

தந்தை பெரியாரைக் காத்து நின்ற செவிலித்தாயான அன்னை மணியம்மை யாருக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் சட்டப்படியான திருமணப் பதிவு  சுயமரியாதை இயக்கச் செம்மல் சி.டி.நாயகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றதென்றால் சி.டி.நாயகம் இயக்கத்தில் எத்தகைய நம்பிக்கைக்குரியவர் என்பதை அறியலாம்.

சி.டி.நாயகம் மறைந்தபோது ‘குடிஅரசு’ ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய துணைத் தலையங்கம்:

“நம் அன்பர் ஆருயிர்த் தோழர் சி.டி.நாயகம் முடிவெய்திவிட்டார். இனி அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இல்லை என்கின்ற நிலையில், உண்மையாய் உழைத்து வந்த உத்தமர் மறைந்தார். எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர், பேசுவதுபோல் நடப்பவர்.

உண்மையில் கண்ணியமானவர். வேஷத்திற்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் எதுவும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட பெரியார் முடிவெய்தினது நமக்கு மாபெரும் நட்டமென்றே சொல்லுவோம். அதுவும் பரிகரிக்க முடியாத நட்டமென்றே சொல்லுவோம்” என்று புகழ் சூட்டினார் நம் ஆசான்.

(சுடர் பரவும்…)