1.கே: ஈரான் – இஸ்ரேல் போரில் யூதர்கள் மீதான பாசம் இந்தியாவிலுள்ள ஆரிய பார்ப்பன ஊடகங்களுக்குப் பொங்குவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வே.சங்கர், தர்மபுரி.
ப: இரண்டுமே ஒரே மரத்தில் பழுத்த எட்டிப் பழங்கள் அல்லவா? அதனால்தான்! நல்ல கூர்மையான பார்வை இது!
2.கே: பி.ஜே.பி. பணத்தில், அ.தி.மு.க. மேனாள் மந்திரிகள் ஆட்களை அதிகம் கொண்டு வந்து சேர்த்த முருகன் மாநாடு, அ.தி.மு.க., பி.ஜே.பி.யோடு கரைவதன் அடையாளமா?
– க.தர்மலிங்கம், குன்றத்தூர்.
ப: முருகன் மாநாடு ஹிந்துக்களை ஒன்று சேர்க்கவே என்று ‘புருடா’ விட்டனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருமுன்னமேயே அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளி
விட்டு, அ.தி.மு.க. கட்சியை ஏற்கெனவே மூன்று, நான்கு பிரிவுகளாக உடைத்ததற்குக் காரணமானவர்கள், மேலும் அதனைப் பலவீனப்படுத்தவும், தன்னலப் பாதுகாப்பு கருதி, ‘கைவந்தால் போதும்; உடும்பு வேண்டாம்’ என்ற பரிதாப நிலையல்லவா ஏற்படுத்திக் கொண்டோம் என்ற கீழிறக்கத்திற்கு அழைத்துச் சென்றதுதான் மிச்சம்; அய்யகோ!
3.கே: நான்கு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
– த.பத்மநாபன், செங்கோட்டை.
ப: பா.ஜ.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது. அது வரும் சில ஆண்டுகளில் பெரும் புயலாக, சுனாமியாக மாறி அதிசயம் கூட நடக்கலாம்!
4.கே: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் பீகார் வளர்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளாரே?
– கே.வே.அப்துல்லா, திருவல்லிகேணி.
ப: பீகாருக்குத் “தனி நிதி” தருவதாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினாரே, அதை நிறைவேற்றினாரா?
5.கே: தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி வெறியும், ஜாதி மோதல்களும் வளர்வது உடனடிக் கவனத்திற்கும், நடவடிக்கைக்கும் உரியது என்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வீர்களா?
– ந.புஷ்பா, அருப்புக்கோட்டை.
ப: நிச்சயமாக, பல வாரங்களுக்கு முன்பே அந்தப் பணியைத் துவக்கி, செய்து வருகிறோமே!
6.கே: கூட்டணிக் கட்சிகளை இழுக்க முடியாது போனதால், திராவிட மாடல் ஆட்சியின்மீது வெறுப்பு உண்டாகும்படி, தப்பான கருத்துகளைக் கட்டமைக்கும் பி.ஜே.பி.யின் முயற்சியை முறியடிக்க, உண்மையை விளக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் உடனடித் தேவையல்லவா?
– கே.சாமி, கோபிசெட்டிபாளையம்.
ப: எல்லோரும் தங்களது விரைவுப் பிரச்சாரத் திட்டங்களைத் துவக்கிவிட்டனரே! நீங்கள் கவனிக்கவில்லையா? என்றாலும் உங்கள் யோசனையைக் கொண்டு சேர்க்க வேண்டிய அளவில் சேர்ப்போம்.
7.கே: தமிழகத்திற்கு எல்லா வகையிலும் துரோகம் செய்து வரும் பா.ஜ.க., தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது எந்தத் துணிவில்?
– வ.காவியா, வேலூர்.
ப: மக்களை – குறிப்பாக வாக்காளர்களை – ஏமாற்றி – விலைக்கு வாங்கதப்புக் கணக்குப் போட்டு இறங்கியுள்ளனர். கட்சி வெற்றியைவிட, தங்களது பாதுகாப்புதானே அவர்களுக்கு முக்கியம்?
8.கே: தி.மு.க. தனது வாக்குறுதியில் பெரும்பகுதியை நிறைவேற்றவில்லை என்ற பொய்யான கருத்து உருவாக்கப்படுவதால், உண்மையை விளக்க சரியான விவர அறிக்கை உடன் வெளியிடப்பட வேண்டியது கட்டாயமல்லவா?
– பா.அருண், அரக்கோணம்.
ப: உரிய முறையில் இப்பணி சிறுசிறு வெளியீடுகளாக வெளிவரும்.