Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதத்தினால் ஏற்படும் கெடுதல்கள்- தந்தை பெரியார்

மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும். மனித வர்க்கம் விலங்கு களைப்போல் தனித்தனியே காடுகளில் வாசம் செய்து வந்த நிலைமை மாறி குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகி விட்டன. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்குக் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது. அக்கொள்கைகள்தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரி கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி அக்கொள்கைகளைக் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுத்தினால்தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணங்கொண்டு அவற்றைக் ‘கடவுள் உண்டாக்கினார்’ என்றும், அவற்றை மீறி நடந்தால் ‘கடவுள் தண்டிப்பார்’ என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடம்தான் முதன் முதல் தவறு செய்த இடமாகும்).

ஆனால், இக்கொள்கைகளை நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்களைக் கொண்டு? என்று பார்ப்போமேயானால், அது அந்தக் காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி,மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித்திறன் முதலான நிலையில் அதாவது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்பச் செய்யப்பட்டதாகும் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேசவர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அதை மாற்ற நினைக்கும்போது பாமர மக்கள் மூட நம்பிக்கையின் பலனாய் தங்கள் பிடிவாதங்காட்டி மாற்றச் சம்மதிக்காத காலத்தில் பிரிந்து போய் புதிய கொள்கைகள் வகுத்து, அதாவது முன்னையதைத் திருத்தியோ, அல்லது சிலவற்றை மாற்றியோ அல்லது சில புதிய கொள்கைளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றதும் உண்டு. இதனால் பாமர மக்கள் `என் மதம் பெரிது’, `உன் மதம் சிறிது’ என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டு விடுகின்றது.

இந்தச் சண்டையில்லாமல் திருத்தப்பாடு செய்யலாமா? என்று நினைத்த சிலர் கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புது வியாக்கியானங்களைச் செய்தும், திருப்தி செய்ய முயற்சித்தும், இருக்கின்றார்கள். ஆனாலும் இம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிய நிலையே ஏற்பட்டது.

இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகளில் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி, கொடுமைப்படுத்தி, பணம் பறித்து, புரோகிதக் கூட்டமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்கள் இருக்கின்றனவேயன்றி பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை.

மற்றும் மதத்தினால் ஏற்பட்டுவரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமேயானால்,

முதலாவது: மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்து விடுகின்றது. எப்படியெனில் ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புகிறான் `கடவுள்’ என்று ஒன்று இருந்தால் நமக்கு ஒரு மதத்தையும், மற்றவர்களுக்கு வேறு மதத்தையும் செய்திருக்குமா? நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ, மற்றொரு மதத்தை உண்டாக்கி இருக்கும்.அப்படியானால் இது ஒன்றுக்கொன்று முரண் பாடல்லவா? என்று எல்லாம் நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியர்கள், மத அபிமானிகள் எவருமே கருதுவதில்லை.

இந்த ஒரு காரணத்தினாலேயே மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கிறது என்பது விளங்கும்.

இரண்டாவது: மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே
மதம் உதவுகின்றது.

மூன்றாவது: மதமானது மனிதனை வேடத்தி லேயே திருப்தியடையச் செய்கிறதேயொழிய, ஒழுக்கத்தில் சிறிதும் கவலை செலுத்த நிர்ப்பந்திப்
பதில்லை.

நான்காவது: எந்த மதத்திலும் பகுத்தறிவுக்குச் சிறிதும் இடமில்லை. ஏனென்றால் எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில், ஏதாவதொன்றை யாவது நமது புத்திக்கும், அறிவுக்கும், கண்ணுக் கும் படாததைக் குருட்டுத் தனமாய் நம்பித் தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப் பதில்லை. அப்படியானால் அம்முறையில் ஒன்றை
நம்பிவிட்டு அதே போன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.

அய்ந்தாவது: மதமானது, கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களை உண்டாக்கி அத்தரகர்களின் நடவடிக்கையும் வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் தமது சொந்த அறிவை விட பிரத்யட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கச் செய்கிறது.

ஆறாவது: அன்றியும் மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவமன்னிப்பும் இருப்பதாகவும், எல்லாவித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம்
மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன்மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறி பிழைப்புக்குத் தாராளமாய் இடம்கொடுக்கின்றது. மக்களைக் கோழைகளாக்குகின்றது.

மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும்,உலகச் சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள்.

இவ்வளவும் தவிர, ஏழாவது: ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனைச் சாப்பிடச் செய்கின்றது. நிற்க,

உண்மைச் சைவன் என்பவன் எவ்வளவு அயோக்கியனானாலும் ஒரு துளிச் சாம்பல் அவன் மேலே பட்டுவிட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே `கைலாயங்கிரிக்கு’ப் போய்விடலாம் என்கின்றான். சுருக்கமாகச் சொன்னால் வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராண பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்கிற காரணத்தாலேயே சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான்.

பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகிறான் என்றால் சைவனின் யோக்கியதைக்கும், சைவசமயத்தின் பெருமைக்கு வேறு சாட்சியம் தேவையா? அதுபோலவே ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாவங்களும் பாவமும் தீர்ந்து விட்டது என்கின்றான். ராமனை விட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கிறவனும் இயேசுவை அடைந்தால் சகல பாவமும் தீர்ந்து விடும் என்கின்றான். அன்றியும் இயேசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாது என்கின்றான்.

அதுபோலவே ஒரு முகமதியனும் குரான் வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்தத் தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது. அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும், அதுவே தான் உண்மையான மதம், முறையே கடவுள், அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்று சொல்கின்றார்கள்.

(தந்தை பெரியார் அவர்களின் கட்டுரை,

‘விடுதலை’, 21.12.1969)

 

____