இரத்தக் கொதிப்பு, சர்க்கரை குறைபாடு… இந்த இரண்டு சொற்களும் உச்சரிக்கப்படாத உதடுகளே இருக்கமுடியாது என்ற நிலையே தற்போது காணப்படுகிறது.
இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டால் அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளும் கேள்வி, “உனக்கு சுகர் எவ்வளவு இருக்கு? இரத்தக் கொதிப்பு எப்படி இருக்கு?” என்பதுதான்.
இதற்குக் காரணம், வாழ்வியல் முறைகள்தான். திட்டமிட்ட வாழ்வியல் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.
சிலர் இவற்றில் கவனமாக இருப்பார்கள். சிலர் கவனமின்றி இருந்து நோயினால் துன்புறுவர்.
தங்கமணி இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அவனுக்கு சர்க்கரை குறைபாடு, இரத்தக் கொதிப்பு இரண்டும் உண்டு. நாற்பது வயதிலேயே இரண்டும் அவனைப் பிடித்துக் கொண்டன. மேலும் அவன் நாய் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவன். ஒருநாள் அவன் வளர்த்த நாயே அவனைக் கடித்துவிட்டது.
பதறிப்போன அவன் தன் நண்பன் தென்னவனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வரச்செய்தான்.
“நாயோடு விளையாடினேன். எதிர்பாராத விதமா கையில் பல்லுப் பட்டுப் போச்சு. இரத்தம் வருது,” என்றான் தென்னவனிடம்.
“நாய்கிட்ட கவனமா இருக்கணும் தங்கமணி. உன் நாய்க்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கா?”
“நாளைக்குப் போடலாமென்றிருந்தேன். இன்றைக்கு பல்லுப் பட்டுப்போச்சு தென்னவா.”
“அது என்ன பல்லு பட்டுப் போச்சு? கடிச்சுட்டுதுன்னு சொல்லு,” என்று சொன்ன தென்னவன், தங்கமணியின் கடிபட்ட இடத்தைச் சோப்புப் போட்டு நன்றாகக் கழுவச் செய்தான். அவனை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் செய்தான்.
“நாய் வளர்ப்பது பெரிதல்ல. அதுக்கு முறையா தடுப்பூசியும் போட்டுடணும். இல்லாவிட்டால் நமக்கும் ஆபத்து, மற்றவங்களுக்கும் ஆபத்து,” என்றான் தென்னவன்.
“ஆமாம். எனக்கும் தெரியும்”, என்றான் தங்கமணி.
“என்ன தெரியும்? நாய் கடிச்சவுடனே சோப்புப் போட்டுக் கழுவாமல் நான் வரும்வரை காத்திருந்தாயே! அதுவே பெரிய தவறு. நாய் கடித்தால் உடனே கடித்த இடத்தில் சோப்புப் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அதற்கு பிற்பாடு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இப்போ உனக்குத் தடுப்பூசி போட்டாச்சு. மருத்துவர் சொன்னபடி அடுத்தடுத்த ஊசிகளையும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் தெரு நாய்களிடம் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். சில பேர் நாய் கடிச்சா அந்த நாயைப் பிடிச்சி அடைச்சி வைப்பாங்க. பத்து நாள் வரை உயிரோடு இருக்கான்னு பார்ப்பாங்க. அது ரொம்பவும் தப்பு. சிகிச்சை எடுக்காமல் இருந்தால் ‘ரேபிஸ்’ நோய் உடல் முழுக்கப் பரவிவிடும். இது உயிருக்கு ஆபத்தாக முடியும். நாயின் எச்சிலில் ‘ரேபிஸ் வைரஸ்’ இருக்கும். அந்த வைரஸ் முதலில் நமது தசைப்பகுதிக்கு வந்துவிடும். பிறகு நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுக்கும் வந்து மூளைக்கும் போய்விடும். இதனால் மூளை வீக்கம் கொடுத்து மரணம் சம்பவிக்கும். இதெல்லாம் உனக்கும் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் ஞாபகப்படுத்துறேன்”, என்று விளக்கம் கொடுத்தான் தென்னவன்.
“இதெல்லாம் உடனே நடக்குமா?” என்று கேட்டான் தங்கமணி.
தங்கமணியின் இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னான் தென்னவன்.
“கடித்த இடத்தின் தன்மையைப் பொறுத்து சில நாட்களோ பல நாட்களோ ஆகலாம். சிலருக்கு 6 மாதம் கூட ஆகலாம். அறிகுறிகள் ஏதும் தென்படாமலும் போகலாம். அலட்சியமாக இருந்தால் மரணம் ஏற்படும். உலகளவில் ஆண்டுக்கு 59,000 பேர் நாய்க் கடியால் இறக்கிறார்களாம். எப்படி இருந்தாலும் நாய் கடித்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மரணத்திலிருந்து தப்பிக்கலாம். முன்பெல்லாம் நாய்க்கடிக்குத் தொப்புளைச் சுற்றிலும்
16 ஊசி போடுவாங்க. இப்போ அப்படியில்லை. அறிவியல் முன்னேற்றம் அடைஞ்சி போச்சு. நாலு ஊசி போட்டாலே போதும். பத்தியம் எதுவும் கிடையாது. மருத்துவர்கள் இதுபற்றி நிறைய சொல்லுவாங்க. நாம் கேட்டுத்தான் ஆகணும் தங்கமணி.”
“உன்னையும் கூட ஒரு தடவை நாய் கடிச்சுட்டுது தானே?” என்று கேட்டான் தங்கமணி.
“ஆமாம். எனது நடைப்பயிற்சியின்போது தெருநாய் கடிச்சிருச்சு. உடனே மருத்துவமனைக்குப் போய் ஊசி போட்டுக்கொண்டேன். அப்போ மருத்துவமனையில் நான் கண்ட காட்சி என்னை ரொம்பவும் மனவருத்தப்படுத்திடுச்சு”, என்று கவலையுடன் சொன்னான் தென்னவன்.
“என்ன மனவருத்தம் தென்னவன்?”
“சின்னச் சின்னக் குழந்தைகளைக் கூட தெருநாய்கள் விட்டு வைக்கவில்லை. ஊசி போட்டுக்கவந்திருந்தாங்க. அந்தக் குழந்தைங்க கத்தினது எனக்கு வருத்தமா இருந்தது. இப்ப கூட நீயும் மருத்துவமனையில் பார்த்திருப்பாயே தங்கமணி.”
“ஆமாம் தென்னவன். இதுக்கு என்னதான் தீர்வு? அது சரி, உனக்கு சர்க்கரை அளவு எப்படி இருக்கு?”
“ஓரளவு கட்டுப்பாட்டில் வைச்சிருக்கேன். சில நேரங்களில் கட்டுப்பாடு இல்லாமலும் இருக்கு. காரணம் தெரு நாய்கள்தான்.”
“அது எப்படி?, என்று வியப்புடன் கேட்டான் தங்கமணி.
“நாய்க்கடிக்குப் பயந்து நடைப்பயிற்சிக்குச் செல்ல முடியலை. நீரிழிவு உள்ளவங்க கண்டிப்பா நடைப்பயிற்சி செய்யணும். ஆனா முடியலை. பார்க் பக்கம் போனாலும் நாய்கள் தொல்லைதான். வளர்ப்பு நாய்களையும் அங்கு அழைச்சிக்கிட்டு சிலர் வர்ராங்க. ஆனால், முகக்கவசம் போடாமல் அழைச்சிக்கிட்டு வர்ராங்க. இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் காஷ்மீர் சென்றிருந்தேன். அங்கு ஒரு நாள் காலை வாக்கிங் செல்ல வெளியே வந்தேன். ஆனால், சாலையில் பெரிய பெரிய நாய்களைப் பார்த்துவிட்டு திரும்பவும் அறைக்கு வந்துவிட்டேன். தில்லியிலும் இதே நிலைதான். இதனால் சாலை விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.” என்று பதில் சொன்னான் தென்னவன்.
“மாடுகளாலும் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகிறதே!” என்று மீண்டும் கேட்டான் தங்கமணி.
“ஆமாம். மாடு, குதிரை, பன்றி, குரங்கு போன்ற அனைத்து விலங்குகளாலும் சாலை விபத்துகள் ஏற்படத்தான் செய்கின்றன. மனித உயிர்கள் பலியாகின்றன. எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் பைக்கில் செல்லும் போது குறுக்கே ஓடும் நாய்கள் மீது பைக் மோதி பலத்த அடிபட்டு, எலும்பு முறிவுகளுக்கும் உள்ளாகியிருக்காங்க” என்று பதில் சொன்னான் தென்னவன்.
“இதைத் தடுக்க வழியே இல்லையா?”, என்று ஆதங்கத்துடன் கேட்டான் தங்கமணி.
“ஒவ்வொரு உயிருக்கும் பூமியில் வாழ உரிமையுள்ளது. ஆனால் அவை தங்களுக்குரிய இடங்களில் இருக்க வேண்டும். ஆனால்…”, என்று தென்னவன் பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்தான் தங்கமணி.
“பசு காப்பகம் உள்ளதே”, என்றான்.
“இருக்கலாம். ஆனால், மற்ற விலங்குகளுக்கும், எருமை மாட்டுக்கும் உள்ளதா? பசு மாட்டுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்? இங்குதான் மதவெறி இருக்கு.”
“அது எப்படி? பசு நமக்குப் பால் கொடுக்கிற தல்லவா? பசு நமக்குத் தாய் போன்றது என்கிறார்களே” தென்னவன்.”
“பசு அது ஈன்ற கன்றுக்குத்தான் பால் சுரக்கிறது. நாம் நமது சுயநலத்திற்காக தவிடு, புண்ணாக்கு வைத்து அதைச் சுரண்டுகிறோம். ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்க்க வந்த கூட்டம் பல கட்டுக்கதைகளை, கடவுள் கதைகளைக் கூறி நம்மை அடிமைப்படுத்தியதன் விளைவுதான் இது. பசு மாடு என்பது ஒரு விலங்கு. அது சாலையில் சுற்றித் திரியும்போது சிலர் அதன் பின்பக்கத்தைத் தொட்டுக் கும்பிடுவது காட்டுமிராண்டித்தனமான செயல் அல்லாமல் வேறென்ன தங்கமணி?
தென்னவன் பேசியதில் உள்ள உண்மையை உணர்ந்தான் தங்கமணி.
“சிலர் மாட்டு மூத்திரத்தைக் குடிக்கவும் செய்கிறார்களே” என்று கேட்கவும் செய்தான்.
“மூத்திரத்தை மட்டுமா! சாணியையும் விட்டு வைக்கவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளில் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து மனித உயிர்கள் பலியாகும் நிலை காணப்படாது. இங்கு மனித உயிர்கள் பலியாகக் காரணம் விலங்குகளையும், பறவைகளையும் கடவுள் தன்மையுடையதாகக் கற்பித்து பகுத்தறிவை இழந்து அவற்றை வணங்குவதுதான். இன்றுகூட செய்தித்தாளில் ஒரு செய்தியைப் படித்தேன். பீகார் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவனை நாய்கள் கடித்துக் குதறியதாம். மண்டையோடு தெரியுமளவிற்குக் கடித்துக்குதறியது. அவன் உயிரிழந்துவிட்டானாம். இதையெல்லாம் தடுக்க வேண்டாமா?
“தடுக்கத்தான் வேண்டும். அதுக்கு என்னதான் வழி?” என்று கேட்டான் தங்கமணி.
“பல்லுயிர்ப் பெருக்கம். அது இயற்கையானது. ஆயினும் எதுவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டு அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். நாய்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் போட வேண்டும். மக்கள் விலங்குகளை விலங்குகளாகப் பார்க்க வேண்டும். அய்ந்தறிவு கொண்டவைதான் விலங்குகள். அதை வணங்குவது காட்டுமிராண்டித்தனம். பைரவர் என்ற கடவுள் உண்டாம். அது சிவனின் வடிவமாம். அந்தப் பைரவரின் வாகனம் நாயாம். அதனால் நாயை பைரவர் என்றும் அழைக்கிறார்கள். அதுபோல சிவனின் கழுத்தில் பாம்பு இருக்கிறது. அதனால் நாய், பாம்பு எல்லாமே கடவுளாம். இதையெல்லாம் கேட்கவே அருவெறுப்பாக இல்லையா?”
தென்னவன் இவ்வாறு சொன்னதும், “கோமாதா எங்கள் குலமாதா”, என்கிறார்களே என்றான் தங்கமணி.
“ஆமாம். பசுமாடும் கடவுளாம். காளை மாட்டையும் விட்டு வைக்கலையே! அது சிவனின் வாகனமாம். அதுமட்டுமா, எருமை மாடு எமனின் வாகனம். “எமனேறும் வாகனமே”ன்னு எருமைமாட்டையும் போற்றிப் பாடுறாங்க. இதையெல்லாம் கேட்கும்போது வேதனையாக இல்லையா?”
“ஆமாம்”, என்று தலையசைத்தான் தங்கமணி.
“இன்னும் எவ்வளவோ சொல்லலாம். சிங்கம், புலியையும் விட்டு வைக்கவில்லை. புலியானது அய்யப்பனின் வாகனமாம். துர்க்கைக்கும் சிங்கத்தோடு புலியும் வாகனமாம். மாமிசம் சாப்பிடும் சிங்கம், புலி எல்லாம் சாமிகளுக்கு வாகனம். ஆனால், கோயிலுக்கு வந்து மனிதன் மட்டும் மாமிசம் சாப்பிடக்கூடாதாம். சிங்கம் பராசக்தியின் வாகனம், ஆந்தை லட்சுமியின் வாகனம் என்றெல்லாம் கதையளக்கிறாங்க. யானையைக் கணேசன்னும் சொல்றாங்க. ஆனால், தெருவில் பிச்சை எடுக்கவும் வைக்கிறாங்க. ஒரு காலத்தில் இந்தியாவில் பிளேக் நோய் பரவி மக்கள் மாண்டபோது அந்த நோயைப் பரப்பும் எலிகளைக் கொல்லக்கூடாது என அப்போது மதவெறி பிடித்தவர்கள் கூப்பாடு போட்டனர். காரணம் எலி, விநாயகனின் வாகனமாம். இப்பவும் மாட்டுக்கறி வைத்திருந்தாலே அடித்துக் கொல்கிறார்களே! பன்றியையும் விஷ்ணு அவதாரம் என்று சொல்லி கடவுள் ஆக்கிட்டாங்க.”
“மயிலை விட்டுட்டியே”, என்று குறுக்கிட்டுப் பேசினான் தங்கமணி.
“ஆமாம். முருகனின் வாகனமல்லவா மயில். முருகனை வைத்து அரசியல் செய்து கலவரத்தை உண்டு பண்ண ஒரு கூட்டம் துடிக்குது. அதுக்கு நாம் இரையாயிடக் கூடாது”, என்றான் தென்னவன்.
“அப்புறம் புல்புல் பறவை”, என்று தங்கமணி சொன்னதும் பலமாகச் சிரித்தான் தென்னவன்.
“புல் புல் பறவையின் மீது உட்கார்ந்து ஒருவர் ஊர் சுற்றியதாக பள்ளிப் புத்தகத்திலேயே பாடமாக வைத்த மூடர்கள் கூட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். விலங்கு அரசியலைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்த அவர்கள் துடிக்கிறார்கள். விலங்குகளை விலங்குகளாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும். கடவுள் தன்மையுடையதாக நினைத்து வணங்கிக் கொண்டிருந்தால் அவற்றால் நமக்குத் தொல்லைதான் ஏற்படும். இதை மக்களும் உணர வேண்டும்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் தென்னவன்.
விலங்கு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தைத் தங்கமணியும் உணர்ந்தான்.