Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘இந்து மதக் கொடுமைகளைக் காட்டும் கண்ணாடி – நூல் ஆய்வு

– வழக்குரைஞர் பூவை புலிகேசி B.SC., B.L.

நூல் : சாதி-கக்கூஸ்-கோயில் 
மருத்துவர் : நா. ஜெயராமன் 
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2022
வெளியீடு : அபெகா பண்பாட்டு இயக்கம்,
832, கீழராஜ வீதி, 
2ஆம் தளம், புதுக்கோட்டை.
விலை : ரூ.200/-

“நாம் அனைவரும் இந்துக்கள்.” “இந்துக்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கங்களை முன்வைத்து இந்துத்துவ அமைப்புகள் எல்லோரையும் போலியாக, தங்களுக்கான படையாட்களுக்காக ஒன்று திரட்டுகின்ற வேலையை மதத்தின் பெயரால் செய்து வருகின்றன. அது போலி என்பதற்கு மிகச்சிறந்த தரவுகளோடு ‘சாதி கக்கூஸ் கோயில்’ என்ற இந்த ஓர் அரிய நூலினைப் புதுக்கோட்டை மருத்துவர் ஜெயராமன் அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்.

இந்த நூல் 183 பக்கங்களையும் 14 உட் தலைப்புகளையும் கொண்டதாக அமைந்து. ஜாதியற்ற சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முனைகின்ற முற்போக்கு சக்திகள் அனைவரிடமும் படைக்கலனாக இருக்க வேண்டிய ஓர் மிகச் சிறந்த நூல் இந்த நூல். குறிப்பாக பெரியார் இயக்க தோழர்களைப் பார்த்து, ‘‘எல்லோரும் கேட்பது இன்னமும் பார்ப்பனர்களா ஜாதி பார்க்கிறார்கள்? அவர்களையே ஏன் எதிரிகளாகக் கட்டமைக்கிறீர்கள்? அவர்கள் எவ்வளவோ திருந்தி விட்டார்கள்’’ என்று சொல்லக்கூடிய அப்பாவிகள் ஏராளம் உண்டு. ஆனால், பார்ப்பனர்கள் இன்னமும் திருந்தி விடவில்லை. அவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கான ஜாதிப் புத்தி மாறிவிடவில்லை என்பதைச் சரியான சான்றுகளோடு எண்பித்துக் காட்டி இருக்கிறார் நூல் ஆசிரியர்.

 

இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஜாதிகளின் தொகுப்பு என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அது எந்த அளவிற்கு உண்மை என்பதற்கு இந்த நூலில் எந்த இந்து மதவாதிகளாலும் மறுக்க முடியாத உண்மைகளை உணர்த்தி உள்ளார். எனவே, இந்த நூல் வந்த புதிதில் சங்கிகள் கூட்டம் இந்த நூலைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் இட்டனர். ஆனால், ஆசிரியர் தொடக்கத்திலேயே, ‘‘இந்த நூல் குறித்து வழக்கு மன்றத்திற்குச் செல்வார்களேயானால் நான் இந்த நூலோடு நீதிமன்றத்தின் முதல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து இருப்பேன்’’ என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் இந்த நூலின் உள்ளே இருப்பவை அனைத்தும் பொய்க் கலப்பற்ற முழு உண்மை என்பது புலனாகின்றது.

இன்றைக்கும் சில தமிழ்த் தேசிய நண்பர்கள் தமிழ் மொழி அடிப்படையில் தமிழ்க் கலாச்சாரம் என்று ஒன்று இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அது பொய்யானது என்பதற்கு இந்த நூலில் நூலாசிரியர், இங்குப் பேசும் மொழி தமிழாக இருந்தாலும் அதன் கலாச்சாரம் ஜாதியாக தான் இருக்கின்றது. ஜாதியாகப் பிறந்து, ஜாதியாக வாழ்ந்து, ஜாதியாகவே சாகின்றான். அக்ரஹாரத்தில் பிறந்து அக்ரஹாரச் சுடுகாட்டில் அடக்கம் ஆகிறான்; சேரியில் பிறந்து சேரி சுடுகாட்டில் அடக்கமாகிறான். இங்கு யாரும் தமிழர்கள் இல்லை. வீட்டுக்குள் பேசுவது ஒரு மொழி; வெளியில் பேசுவது பள்ளியில் படிப்பது வேறு மொழி. இங்கு அனைவரும் ஜாதியாகத்தான் வாழ்கிறார்கள். இங்கு தேவர் கலாச்சாரம், கள்ளர் கலாச்சாரம், உடையார் கலாச்சாரம், முதலியார் கலாச்சாரம், பள்ளு பறை சக்கிலிக் கலாச்சாரம்தான் இருக்கின்றதே தவிர, தமிழ்க் கலாச்சாரம் என்ற ஒன்று எங்கே இருக்கின்றது என்று கேட்பதன் மூலம் உலகியல் எதார்த்தத்தை நமக்குப் புத்தியில் உறைப்பதுபோல் புரிய வைக்கின்றார்.

பார்ப்பான் படிப்பாளி தானே தவிர அறிவாளி கிடையாது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அது வெறும் வெற்றுச் சொல்லல்ல; உண்மைதான், என்பதனை 2019இல் நடைபெற்ற உலக பிராமணர் மாநாட்டில் நீதிபதிகளாக இருந்தவர்களே பேசிய பேச்சின் சாரத்தை எடுத்துச் சொல்லி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர். எனவே, பார்ப்பனர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் கூட, அவர்களின் ஜாதி உணர்வு என்பது நீக்கப்பட முடியாதது என்பது இந்த நூலின் மூலம் தெள்ளத் தெளிவாகச் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளது சிறப்புக்குரியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நினைவுச் சின்னங்கள் ஹிரோஷிமா, நாகசாகி என்றால், இந்து மதத்தின் அவமான நினைவுச் சின்னங்கள் தலித் மக்கள் வாழ்கின்ற சேரிகள் தான்; அக்ரஹாரங்கள் அல்ல என்று ஆசிரியர் கூறும்போது இந்துமதக் கொடுங்கோன்மையின் தீவிரம் நமக்கு புரிகிறது.

இந்து மதக் கொடுங்கோன்மையின் குரூரப் புத்தியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர்.

இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில இடங்களில் ஜாதி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து சில நண்பர்கள் பெரியார் இயக்கவாதிகளிடம், ‘‘இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் எங்கே ஜாதி பார்க்கிறார்கள் பார்ப்பனரல்லாத மக்கள் தானே தாழ்த்தப்பட்டோரைக் கொடுமைப்படுத்துகிறார்கள் ?’’ என்று கூறுவது உண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்கள்,

‘‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்’’

என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப ஜாதி என்ற நோய்க்கு மூலத்தைத் தேடி அதை அடையாளப்படுத்தி அம்பலப்படுத்தி அதிலிருந்து இந்த மக்கள் தங்களைத் தாங்கள் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தலைவர். இதே கருத்தை வடநாட்டில் மக்கள் மத்தியில் பேசியும் இறுதியும் ஆராய்ச்சி செய்தும் இந்த நாட்டில் ஜாதியின் பெயரால் ஒருவன் உரிமை மறுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் காரணம் இந்து மதம் தான். எனவே, ஜாதி ஒழிய வேண்டுமானால் – ஒழிக்கப்பட வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பதைச் சொன்னதோடு மாத்திரமல்லாமல், செயல்படுத்தியும் காட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். இந்த இருவரின் கருத்துகளையும் மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எதார்த்தத்தை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்திருக்கிறார், இந்த நூலில் நூலாசிரியர்.

எனவே, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கு
கின்ற கருத்தியல் போரில் களத்தில் நிற்கின்ற ஒவ்வொருவரின் கையிலேயும் இருக்கவேண்டிய ஒரு படைக்கலன் மருத்துவர் ஜெயராமன் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்தச் ‘சாதி கக்கூஸ் கோயில்’ என்ற நூல். எனவே, அனைத்து முற்போக்குச் சக்திகளும் இவை தங்களுக்கான படைக்கலனாகப் பயன்படுத்துவது மாத்திரமில்லாமல் மக்கள் இயக்கம் ஆக்கி இந்த நூலை அனைத்து மக்களின் கரங்களிலும் கொண்டு சேர்ப்போம்! ஆனால், தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் காண விரும்பிய ஜாதியற்ற சமத்துவ சமுதாயத்தை விரைவில் உருவாக்கிட உறுதி ஏற்போம்! q