உணவு, உறைவிடம் மற்றும் பாலுறவு என்பவை மனிதனின் பரிணாமத்தில் அத்தியாவசியமான தேவைகள். ஏனைய உயிரினங்களைப் போல மனிதனும் இவற்றை அத்தியாவசியத் தேவைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் வரையில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போகும்போது அவனது அத்தியாவசியத் தேவைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. உதாரணத்திற்கு வேட்டையாடும் சமூகத்தில் உணவுப் பொருளைத் தேடுவதும், அடைவதும் மட்டுமே முதன்மையானதாய் இருந்தது. ஆனால், இப்போது உணவுக்காக நாம் செலவிடும் நேரம் மிகக் குறைவு. மற்ற உயிரினங்களில் பாலுறவு என்பது சந்ததிகளைப் பெருக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. ஆனால், மனிதனைப் பொறுத்த வரையில் பாலுறவு என்பது இனப்பெருக்கத்திற்கானது மட்டுமல்ல. அத்தியாவசியத் தேவைகளின் மதிப்பும், அதன் உண்மையான நோக்கமும் குறையும் போது, மனிதன் அதன் வழியாகத் தனது அடையாளங்களை, கற்பிதங்களை, மதிப்பீடுகளை வைத்துக் கொள்ளத் தொடங்கினான்.
இன்று உணவு
என்பது ஊட்டத்திற்
கானது மட்டுமல்ல; அது ஓர் அடையாளம். கலாச்சாரத்தின் அடை
யாளம், ஜாதியின் அடையாளம், பண்
பாட்டின் அடையாளம், இனத்தின் அடை
யாளம் எனப் பல்வேறு
வகையான அடையாளங்களை உள்ளடக்கியதாய் மாறிவிட்டது. ஓர் அத்தியாவசிய ஊட்டச்சத்து என்ற நிலையில் இருந்து விலகி ஒரு மேட்டிமைத்தனத்தின் அடையாளமாக உணவு மாறிவிட்டது. அதன் விளைவாக உணவு சமநிலையின்மை தீவிரமாக இருக்கிறது. அசைவம் என்பது தீட்டு என்று சொல்லக்கூடிய நாட்டில் வறுமையினால் இறக்கக்கூடிய ஏராளமான குழந்தைகளை நாம் பார்க்கிறோம். உணவு அத்தியாவசியத் தேவை என்று இருந்த காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ கிடையாது. எல்லோருக்கும் உணவு இருந்தது. கிடைக்கும் ஒரே வகை உணவு எல்லாராலும் பகிர்ந்து உண்ணப்பட்டது.
உணவின் மீது நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த மதிப்பீடுகளின் வழியாக ஆரோக்கியமான சமச்சீரான உணவு என்னும் இலக்கில் இருந்து நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். சைவம் என்பது புனிதம், அசைவம் என்பது தீட்டு போன்ற கற்பிதங்களின் வழியாகப் பெரும்பாலான தேவைக்குரிய ஊட்டச்சத்துகளை இழந்து கொண்டிருக்கிறோம். உணவை ஒரு மேட்டிமைத்தன்மையின் அடையாளம் என நாம் கொண்டதன் விளைவாக மேற்கத்திய உணவு முறைகளை வலிந்து நமக்குள் திணித்துக் கொண்டிருக்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு முறைகள் இதன் விளைவாகப் பரவலாகியிருக்கின்றன. செயற்கைச் சர்க்கரைகளை உள்ளடக்கிய உணவுகள் தனது சந்தைகளை விரிவுபடுத்தியிருக்கின்றன. அதன் ஆபத்துகளைப் பற்றிப் பேசாமல் அதற்கு மாற்று என ஆர்கானிக் உணவுக்கான போட்டிச் சந்தையை அதை விட பெரிதாய் விரிவுபடுத்தியிருக்கிறோம். ஒரு விவசாயி தனது விளைச்சலைப் பாதுகாக்க வேண்டி பூச்சி மருந்து அடிப்பதைக் குறை சொல்லிக் கொண்டு, உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காகக் கனிமங்களைச் சேர்த்தும், பதப்படுத்தியும், செயற்கை ஊட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்படும் உணவுகளைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
உணவு என்பது நமது மூளையின் செயல்பாட்டோடு நேரடித் தொடர்புடையது என்பதையே அண்மைக் காலங்களில்தான் கண்டறிந்திருக்கிறோம், நரம்பியல் துறை அதற்குப் பிறகுதான் உணவுப் பொருட்கள் தொடர்பாக ஏராளமான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் கொண்டு வந்திருக்கிறது.
மகப்பேறு காலத்தில் ஒரு பெண் எடுக்கும் உணவானது அந்தக் குழந்தையின் மனநலத்தின் மீது வாழ்நாள் முழுக்க தாக்கம் செய்யக்கூடியது. சமச்சீரான உணவு அத்தனையையும் உள்ளடக்கிய உணவு என்பது இங்குத் தேவையானதாக இருக்கிறது. உணவு என்பது உடலின் கட்டுமானம் என்கிற வரையில் நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அது அன்றாட வாழ்வில் நமது மனதோடு நேரடித் தொடர்புடையது என்கிற போது நாம் ஆரோக்கியமான உணவுக்காக மெனக்கெட்டு தான் ஆக வேண்டும்.
உணவுக்கும் மனதுக்குமான தொடர்பு என்பது நிச்சயமாக இருக்கிறது. மாறிவரும் நமது உணவுப் பழக்கவழக்கங்கள் நமது மனநிலையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாதிக்கிறது என்பதை அறிவியல் உலகம் பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. அதே போல உணவு தொடர்பாகவும் ஏராளமான கோட்பாடுகளும், பரிந்துரைகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. சில ஊட்டச்சத்துகள் மிகைப்படுத்தப்படுகின்றன, சில ஊட்டச்சத்துகள் தூற்றப்படுகின்றன. ஆரோக்கியம் என்ற முறையில் பல்வேறு தரப்பு கருத்துருவாக்கங்கள் தொடர்ச்சியாக இங்கு ஏற்படுத்தப்படுகின்றன. அப்படி ஏற்படுத்தப்பட்ட கருத்துருவாக்கங்கள் உணவுச் சந்தையிலும் மிக அதிகமாகப் பிரதிபலிக்கின்றன. ஆர்கானிக் என்ற சொல் சந்தையில் மிகைப்படுத்தப்படுகிறது, மரபு ரீதியான உணவுகளின் மீட்டுருவாக்கம் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவைப் பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் நமக்குத் தேவையானதாக இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவாக நமது தட்ப வெப்ப நிலைக்கு முற்றிலும் தொடர்பில்லாத உணவை கூட நம்மால் இங்கு உண்ண முடிகிறது, உண்ணுவது என்பதை விட பெரும்பாலான வாடிக்கையாளர்களால் நுகரப்படுகின்றது. இந்தச் சூழலில் நமது உணவை இன்று நாம் நிர்ணயிப்பதில்லை, நமது உணவு வேறு யாராலோ நிர்ணயம் செய்யப்படுகிறது. பரப்பப்படும் பொதுக் கருத்துருவாக்கங்களின் விளைவாக நமது உணவை நாம் தேர்வு செய்கிறோம் உண்மையில் தேர்வு செய்ய வைக்கப்படுகிறோம். குறைந்தபட்சம் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தாவது இனி நாம் நமது உணவுகளை உண்ணுவோம்.
ஊட்டச்சத்துகளைப் பொறுத்த வரையில் எந்த ஊட்டமும் கேடு இல்லை. ஒரு காலத்தில் கொழுப்பைத் தூற்றியது போல, இப்போது கார்போஹைட்ரேட்டைத் தூற்றிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஊட்டமும் அதற்குரிய வேலையை உடலில் செய்கிறது. 60-70% கொழுப்புச் சத்தைப் பிரதானமாகக் கொண்ட நமது உணவு முறை, 60-70% கார்போஹைட்ரேட்டைக் கொண்டதாக மாறியிருக்கிறது. அது தேவையற்றதோ அல்லது ஆபத்தானதோ அல்ல; அதற்குச் சில பரிணாமக் காரணங்கள் இருக்கின்றன. உணவுச் சங்கிலியில் மூன்றாம் இடத்தில் இருந்த நாம் முதல் இடத்தில் இன்று இருப்பதற்கு இது போன்ற பரிணாமக் காரணங்கள் தான் காரணம். அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு மீண்டும் காட்டுக்குச் சென்று நம்மால் வேட்டையாட முடியாது. அதனால் எந்த ஊட்டத்தையும் நிராகரிப்பது அவசியமற்றது. ஆனால், முறைபடுத்தலாம்.
எளிய சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்களைக் குறைத்து, ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட எளிய சர்க்கரைகளைக் கொண்ட செயற்கை உணவுகள், பாக்கெட் உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிரம்பிய மேம்பட்ட சர்க்கரைகளின் வழியாக கார்போஹைட்ரேட்டை எடுத்து கார்போஹைட்ரேட்டினால் ஏற்படக்கூடிய பாதகங்களைத் தவிர்க்கலாம். அதே போல அடைக்கப்பட்ட உணவில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அதைக் குறைத்துக் கொண்டு, சமைக்கப்பட்ட எண்ணெய்யில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பையும் குறைப்பதன் வழியாகவும், இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்து நிறைவுற்ற கொழுப்பைப் பெறுவதன் வழியாகவும், சூடுபடுத்தப்பட்ட தாவர எண்ணெய்யைத் தவிர மீதியுள்ள பொருட்களின் வழியாக நிறைவுறாக் கொழுப்பை எடுப்பதன் வழியாகவும் நாம் ஆரோக்கியமான கொழுப்பைப் பெறலாம். நுண்ணூட்டங்களை நாம் எப்போதும் நமது உணவில் இருந்தே பெற முடியும். அதனால் நுண்ணூட்டங்கள் நிரம்பிய உணவு என்பது நமது அன்றாட உணவாகக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்த் தொகுப்பு, தினசரி உடற்பயிற்சி போன்றவற்றின் மீதும் கவனம் கொள்ளுதல் ஆகியவை ஆரோக்கியமான மனநிலையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். மனநலன் தான் உடல் நலனுக்கு அடிப்படை. அதைப் பேணிக் காப்பதில் நமது உணவுப் பழக்க முறைகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.
– தொடரும்…