மணமுறிவுக்கான காரணம்! பற்றி எனது சொந்தக் குடும்பத்து நிகழ்வுகளை மய்யப்படுத்திக் காட்டி எழுதியிருந்தேன். அதேபோல, வரதட்சணைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற வழியென்ன என்பதையும் எனது குடும்ப அனுபவத்திலிருந்தே உங்களுக்கு இதன் வழி கூற விரும்புகிறேன்.
எனக்கு ஒரு பெண் பிள்ளை. அவருக்குத் திருமணமாகி மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் இருவர் பெண்கள், மூன்றாவது பிள்ளை ஆண்.
இரண்டு பெண்களுக்கும் (பெயர்த்திகளுக்கும்) திருமணம் செய்ய மாப்பிள்ளைகளைத் தேடி பெரியவர்களாகிய நாங்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. காரணம், பழைய மரபுப்படியான திருமண ஏற்பாடுகளைச் செய்யும்போது, வரதட்சணை என்ற வழக்கமும் அதில் ஓர் அங்கமாகப் பிணைந்து இணைந்துகொள்வதால், மாப்பிள்ளையைத் தேர்ந்து கொள்ளும் பொறுப்பைப் பெண்களிடமே (பெயர்த்திகளிடமே) விட்டு விட்டோம். ஆனால், முழு உரிமையும் அவர்களுக்குக் கொடுத்ததோடு சில வழிகாட்டுதல்களையும் கூறினோம்.
உங்கள் வாழ்விணையரை(மாப்பிள்ளையை) நீங்களாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அவ்வாறு தேர்வு செய்யும்போது, ஜாதி, மதம், ஜாதகம், சொத்து என்பவற்றில் கவனம் செலுத்தாமல், பொருத்தமான இணையரா என்பதில் கவனம் செலுத்துங்கள். மனப்பொருத்தம் மிக முக்கியம். நல்ல பழக்கம், நல்ல நடத்தை போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குத் துணையாய் வரக்கூடிய மாப்பிள்ளை தன் உழைப்பில், தன் வருவாயில் வாழும் தகுதி உடையவராய் இருக்க வேண்டும். பெற்றோர் சொத்தில் வாழக்கூடியவர்களாய் இருக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினோம்.
இரு பெயர்த்திகளும் நன்கு படித்தவர்கள். பெரிய பெண் B.Tech., இந்தியாவில் படித்தாள். பின் அமெரிக்காவில் M.S. படித்தாள். அவருக்கு 31 வயது நிரம்பிய போது, கன்னடம் பேசும் மாப்பிள்ளையைத் தேர்வு செய்தார். நாங்கள் தெலுங்குக் குடும்பம் என்றாலும் மொழியைத் தடையாகக் கொள்ளாமல், ஏற்ற துணையா? என்பதே முதன்மையாகக் கொள்ளப்பட்டது.
இரண்டாவது பெயர்த்தி அமெரிக்காவில் படித்து இரண்டு பட்டங்கள் பெற்றார். அவரும் அவர் விருப்பப்படியே தனக்குப் பொருத்தமான வாழ்விணையரைத் தேர்வு செய்தார். அவர் 28ஆம் வயதில் திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் பெற்றோருக்கு உரிமையான வீட்டில் வாழாமல் தங்களுக்கு உரிமையான வீடுகளில் வாழ்கிறார்கள். திருமணத்தைச் சிக்கனமாக வாழ்விணையர்கள் வருவாயில் நடத்தி முடித்தனர். தாலி கட்டுவதை சிறிய மாப்பிள்ளை தவிர்த்துவிட்டார். பெரிய மாப்பிள்ளை குடும்பத்தார் தாலி மட்டும் இருக்கட்டும் என்றனர்.
பெண்களைப் படிக்க வைத்து, தன் காலில் நிற்கும் தகுதியை உண்டாக்கி, அவர்கள் விருப்பத்திற்கு இணையரைத் தேடும் உரிமை தந்துவிட்டால், வரதட்சணை என்ற கொடுமை நீங்கிவிடும். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். சுயமரியாதைச் சுகவாழ்வு கிடைக்கும்! q