சென்னை எத்திராஜ் கல்லூரியில் அசோக் நகர் சிந்தனையாளர் சங்கத்தின் சார்பில் “நீதித்துறை வரம்பு மீறுகிறதா?” என்ற தலைப்பில் 23.06.2007 அன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டோம். சிந்தனையாளர் சங்கத் தலைவர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வில் பத்திரிகையாளர் கே.சி.லட்சுமிநாராயணன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் காந்தி, தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஆகியோர் உரைக்குப் பின் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் உரையாற்றி
னோம்.
சென்னை மயிலாப்பூர் லஸ் சிசு விஹார் சமூக நல கூடத்தில் 29.6.2007 அன்று காலை 9.30 மணிக்கு நொச்சி நகரைச் சேர்ந்த ஜெ.ஜெயசங்கரி – பி.ராஜு
ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தோம்.
பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் டாக்டர் ச. ராசசேகரன் -அனுசூயா தேவி ஆகியோரின் மகள்
இரா. தென்றல் அமலாவதி – ச.சி. இராஜேஷ்
ஆகியோர் மணவிழாவை சென்னை அண்ணா நகரில் 30.6.2007 அன்று காலை நடத்தி வைத்தோம். அன்று மாலை
வி.செந்தில்குமார்-வி. பிரவீணா ஆகியோரது மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரதிபா பாட்டிலுக்கு ஆதரவாகவும், மகளிர் மாண்பினை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் மகளிரணியினர் அணிவகுத்த, மாபெரும் மகளிர் பேரணி 01.07.2007 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும், தனி மேடையில் இருந்து பேரணியைப் பார்வையிட்டோம். கழக மகளிரணியினர் கருப்புநிறச் சேலை அணிந்தும், கழகக் கொடிகளைக் கரங்களிலேந்தியும் பேரணியில் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பின்போது நாம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டிலுக்குப் பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தோம்.
02.07.2007 முதல் 30 வரை கழகப் பொறுப்பாளர்
களையும் தோழர்களையும் சந்தித்து கலந்துற
வாடிட தமிழ்நாடு முழுதும் உள்ள 55 கழக மாவட்டங்களுக்கும் 5 கட்டங்களாகப் பயணம் செய்தோம். இடையிலேயே ஆங்காங்கே பொதுக்
கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.
விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் 2.7.2007 திங்கள் அன்று முதல் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.மாலை 6 மணியளவில் ஜவகர் திடலில் “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் தொகுதி 3 அறிமுக விழாவுடன், ‘சேது சமுத்திரத் திட்டமும், இராமன் பாலப் புரட்டும்’ என்னும் தலைப்பில் விளக்கப் பொதுக்கூட்டமும் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற எம்மை தி.மு.க., மாநில இலக்கிய
அணிச் செயலாளர் ச.அமுதன் தலைமையில் சிறப்பாக வரவேற்றனர். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதன்பின் நாம் நிறைவுரையாற்றினோம்.
பின்னர் அங்கிருந்து குற்றாலத்தில் நடைபெற்று
வந்த பயிற்சி முகாமில் பங்கேற்று, மாணவர்
களுக்கு வகுப்பு நடத்தி, சான்றிதழ்களை வழங்கி
னோம். ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடைந்த (30ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு அது!) குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகவும் சிறப்போடு நடைபெற்றது. கட்டுப்பாடு காத்து, கழகக் கொள்கையினைச் சுவாசித்த இளைஞர் பட்டாளத்தின் இன்முகங்கள் எமை மகிழ்ச்சி அருவியில் குளிக்க வைத்தன!
நல்ல கொள்கை வார்ப்படங்களை வார்த்த அப்பட்டறை வாகை சூடிய வண்ணம் முடிந்து, களப்பணிக்குத் தம்மை ஆளாக்கிக்கொண்டு அறிவாயுதங்களாகி நின்றனர் அந்த அடலேறுகள்!
விளைச்சலின் பலத்தை – பலனை அவர்கள் எழுப்பிய கேள்விகளின் மூலம் அறிந்து கொண்டோம்.
அப்பயிற்சியில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் அறிவியல் ஆய்வு மாணவர் மேத்யூ பாக்ஸ்தர் குற்றாலம் பயிற்சி முகாமில் நான்கு நாட்கள் முழுமையாகப் பங்கேற்று வகுப்புகளைக் கவனித்து தமிழிலேயே குறிப்புகளை எடுத்து நம்முடைய பாராட்டுகளைப் பெற்றார்.
அடுத்து, திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள பாண்டிவளவன் வளாகத்தில் தந்தை பெரியார் சிலையினை, 3.7.2007 அன்று திறந்து வைத்தோம். தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை பங்கேற்றார். துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.பிறைநுதல் செல்வி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்பாதுரை (சி.பி.அய்.) கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆகியோர் உரைக்குப்பின் நாம் சிறப்புரையாற்றினோம். நகர தி.க. தலைவர் பி.பொன்ராஜ் நன்றி கூறினார்.
கழகக் குடும்பங்களும், அனைத்துக் கட்சி பெரியார் பற்றாளர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்த இந்த அறிவாசான் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா, மக்கள் திருவிழாவாக நடைபெற்றுக் கொள்கைப் பெருவிழாவாக மிளிர்ந்தது.
அங்கு கூட்டம் நடத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டம் நடத்தவிடமாட்டோம் என்று சிலர் கொக்கரித்தனர், காவல் துறையில் சில கருப்பு ஆடுகளும் அவர்களுக்கு மறைமுகமாக உதவினர். ஆனால், ஆட்சித் தலைமை அத்தகைய கருப்பு ஆடுகளைப் புரிந்தே வைத்திருந்த நிலையில், எதிர்ப்புகளை முறியடித்து கூட்டம் வெற்றிகரமாக தோழர்களின் தூய ஒத்துழைப்புடன் நடைபெற்று முடிந்தது.
காலை 9 மணிக்கு நிகழ்ச்சிகளுக்கு ஆயத்தமான. முதல் நாள் ராசபாளையம் கூட்டம் முடித்து குற்றாலம் வந்து ஓய்வெடுத்த போதும் மணி 1:30 தான். வேறு வழியில்லையே!
மறுநாள் (4.7.2007) புதன்கிழமை காலை 10 மணியளவில் ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் தூத்துக்குடியில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் மானமிகு சா.காளிமுத்து, மேனாள் மாவட்டத் தலைவர் எஸ்.ராமசாமி ஆகியோரது படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் இர. கனகராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி வரவேற்புரை ஆற்றினார். பெரியார் பெருந் தொண்டர்கள் தூத்துக்குடி மாவட்ட மேனாள் தலைவர் சு.இராமசாமி, மேனாள் நகரத் தலைவர் சா.காளிமுத்து ஆகியோரது படத்தினை நாம் திறந்து வைத்து பெரியார் பெருந்தொண்டர்களின் பெருமைகளை நினைவு கூர்ந்து உரையாற்றினோம். கால்நடைத் துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன், கோவில்பட்டி மாவட்டத் தலைவர் பால்.ராசேந்திரம், கோவில்பட்டி தமிழரசி, குமரி மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
படத்திறப்பு முடிந்தவுடன் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் பகல் 2:30 மணி வரை நடைபெற்றது. கலந்துரையாடலை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு மதுரை வந்தடைந்து, மதுரை மாநகர். புறநகர், மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்றோம். அடுத்த நாள் காலை 9 மணிக்கு புறப்பட்டு சிவகங்கை சென்றோம். சிவகங்கை மூதாட்டிகள் உட்பட தோழியர்களும் தோழர்களும் எல்லைக்கு வந்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். அங்கு இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதை முடித்துவிட்டு தஞ்சை சென்றோம்,அங்கு தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இங்கு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மன்னார்குடி வட்டம் கீழச்சேரி ஆர்.கலியபெருமாள், அன்புச்செல்வி ஆகியோரின் மகன் ரத்தினவேலுவுக்கும் திராவிடமொழி – மணிமேகலை ஆகியோரின் மகள் தீபாவுக்கும் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை நடத்தி வைத்தோம்.
அடுத்த நாள் (6.7:2007) வெள்ளி மாலை
6 மணியளவில் எடமேலையூரில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் எமக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா மிகுந்த எழுச்சியோடும். உணர்ச்சிபூர்வமாகவும் நடைபெற்றது, எடமேலையூர் நடுத் தெருவில், நடைபெற்ற இக்கூட்டத்திற்கு எடமேலையூர் தலைவர் கே.எஸ்.சாமிநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நீடாமங்கலம் ஒன்றிய திக தலைவர் பி. வீராச்சாமி வரவேற்புரையாற்றினர்.
மன்னார்குடி மாவட்டத் தலைவர்
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன் பொதுக் குழு உறுப்பினர்கள் ஆ.சுப்பிரமணியன், இராயபுரம் கோபால், எடமேலையூர் தலைவர் ம.சவுந்திராசன், செயலாளர் ந.லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எட மேலையூர் நுழைவு வாயிலில் எமக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமம் முழுவதும் கழகக் கொடிகளால் அலங் கரிக்கப்பட்டு, திருவிழா’ போன்ற கோலத்தை எடமேலையூர் பெற்றிருந்தது.
அந்த வட்டாரத்தில் 1957 இல் நடைபெற்ற அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி, புதுக்கோட்டை, கோவை சிறைச்சாலைகளில் வதிந்த மேனாள் கருஞ்சட்டை இராணுவ வீரர்களான- இளைஞர்களான- இந்நாள் முதியவர்களுக்கு இனமான ஆடையான கருப்பு ஆடையைப் போர்த்தும் போது, உள்ளம் நெகிழ்ந்தது, கண்கள் பனித்தன.
எதையும் எதிர்பாராத கருஞ்சிறுத்தைகள் காராகிரகத்தில் ஆறு மாதம், ஒன்பது மாதம், ஓராண்டு எனக் கடுங்காவல் தண்டனை பெற்று, சாக்கடை தள்ளுவது, நெல் குத்துவது போன்ற கடுமையான வேலைகளைச் சிறைக்குள்ளே செய்தார்கள். அவையெல்லாம் நினைவுக்கு வந்தன. அவர்கள் எதையும் எதிர்பார்க்காத எங்கள் குலத்தங்கங்கள், தியாகத் தீயில் புடம் போட்ட தங்கங்கள். அவர்களுக்கு ஆடையைப் போர்த்திய போது அவர்களது உடல் நடுங்கினாலும் உள்ளம் நடுங்காத உறுதிபடைத்த நெஞ்சத்தினராக இருப்பதை அறிய முடிந்தது. தந்தை பெரியார் ஆணை ஒன்றினை மட்டும் சட்டத்திற்கு மேலானதாகக் கருதி, போராட்டத்தில் ஈடுபட்ட அந்தத் தியாக தீபங்களைச் சந்தித்ததில் எத்துணை மகிழ்ச்சி, எமக்குத்தான்!
அப்பகுதிக் கிராமங்களுக்கு நான் 70 ஆண்டுகளாக எனது மாணவர் பருவம் தொட்டுச் சென்று கொண்டிருப்பவன். இறுதியாக
தராசில் அமர வைத்து எமக்கு எடைக்கு எடை நாணயங்களை வழங்கினர். இத்துடன் முதற்கட்டப் பயணத்தை நிறைவு செய்தோம்.
இதற்கிடையில் திராவிடர் கழக மூத்த பொதுக்குழு உறுப்பினரும் மும்பையில் கழகத்தை உருவாக்கியவரும், அரும்பெரும் கருஞ்சட்டை மாமனிதருமான மானமிகு பெ.மந்திரமூர்த்தி அவர்கள் (வயது 87) 5.7.2007 அன் மறைவுற்றார். மும்பையில் குறிப்பிடத்தக்க மாநாடுகள். நிகழ்ச்சிகளை நடத்தியவர்; தந்தை பெரியார். அன்னை மணியம்மையார் ஆகியோரின் பேரன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய பெருமைமிகு தொண்டராகப் பணியாற்றியவர்; அவர்களுக்குப்பின் நம்மோடும் அதே நம்பிக்கையில் பணியாற்றியவர். தமக்குப் பிறகும் தமது மகன் மானமிகு தயாளன் அவர்களை இயக்கத்துக்கு ஒப்படைத்தவர். சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். அவர் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர்கள் இல்லத்தில் நடந்த மணவிழாவில் பங்கேற்று அவருடன் அளவளாவினோம்.
தயாளன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தோம்.
11.7.2007 அன்று கலைஞர் தலைமையில் நடைபெற்ற திருமங்கலம் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினோம். மறுநாள் இரண்டாம் கட்டப் பயணத்தைத் தொடங்கினோம்.
மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் நீதிபதி வெங்கடசாமி வெங்கடலட்சுமி அறக்கட்டளை நிகழ்ச்சி 12.7.2007 அன்று காலை நடைபெற்றது. அதில் பங்கேற்று “நாடு நலம் பெற… ” என்னும் தலைப்பில் உரையாற்றினோம். நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் பேராசிரியர் எஸ். சண்முகம் வரவேற்புரை ஆற்றினார் கல்லூரி முதல்வர் சங்கரப்பன் தலைமை வகித்தார். பேராசிரியர் நம்.சீனிவாசன் அறிமுக உரையாற்றி இயக்கத்தின் சமூகப் பங்களிப்புகளையும் சாதனைகளையும் விளக்கினார்.
அன்று மாலை 4 மணி அளவில் உயர் நீதிமன்ற மதுரை வழக்குரைஞர் சங்க அரங்கத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று ”உயர்கல்வியில் இட ஒதுக்கீடு’’ குறித்து உரையாற்றினோம். நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் ஆர்.கே.சந்திரமோகன் தொடக்க உரையாற்றினார். ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களது உரைக்குப் பின் நாம் சமூக நீதிக்கு அன்று இருந்த அறைகூவல்களை விளக்கி உரையாற்றினோம்.
மறுநாள் (13.7.2007) பெரியகுளம் வடகரை அரண்மனைத் தெருவில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். மறுநாள் (14.07.2007) திருச்சி, லால்குடி மாவட்டத் தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்திலும் அன்று மாலை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்திலும், பின்னர் ராமன் பாலப் புரட்டு விளக்க கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினோம். அப்பொழுது ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களான திருமாநிலையூர் அ.பெருமாள், கந்தசாமி, கே.முருகேசன், கா.சாமியப்பன், கே.கே.சாமி, ஆண்டாள், குப்புசாமி, தியாகராஜன், சின்னம்மாள், க. பெருமாள், பழனிசாமி ஆகியோரைப் பாராட்டிப் பெருமைப்படுத்தினோம்.
அடுத்த நாள் 15.7.2007 அன்று காலை கோவையிலும் மாலை ஈரோட்டிலும் நடைபெற்ற
கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்றதோடு, கோவை சிங்காநல்லூர் ஆறுமுகம் அவர்களின் தந்தையார் கோபால் அவர்களின் படத்தினையும் திறந்து வைத்து உரையாற்றினோம்.
அந்த ஆண்டின் அய்.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு கடும் பின்னடைவைச் சந்தித்ததை புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டி, மாணவர்கள், கல்வியாளர்கள், அரசுத்துறை மூவரும் பங்கேற்கும் வண்ணம் முத்தரப்புக் கருத்தரங்கு மாநாடு நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டோம். மேலும் அந்த அறிக்கையில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து அதிகம் வெற்றி பெறுவதைச் சுட்டிக்காட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தையும் அதற்கு ஏற்ப அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
நினைவுகள் நீளும்…