ஜனநாயகம் என்பது பெரும்பான்மை என்ற அடித்தளத்தில் அமைவது ஆகும். பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது அதன் நடைமுறை.
ஆனால், இந்த அடிப்படையைத் தவறாக விளக்கம் கூறி ஆதிக்கம் செலுத்த ஆதிக்கவாதிகள் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முயற்சி செய்கின்றனர். இவர்கள் கூறும் விளக்கத்தை, வாதத்தை சிலர் சரியென்றே கருதுகின்றார்கள்; சரியென்றும் கூறுகிறார்கள்.
உண்மையில் அவ்வாறு கூறுவதும், அதை ஏற்பதும் சரியல்ல என்பது இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தை மாற்றி ஆதிக்கம் செய்ய மதவெறிக்கூட்டம் முயற்சி செய்து வரும் நிலையில் இது சார்ந்த உண்மையை ஒவ்வொருவரும் அறிய வேண்டியது கட்டாயமாகும்.
பெரும்பான்மை என்பது எதனடிப்படையில்?
இக்கேள்விக்கான சரியான விடையைப் பெறுவது மிக முக்கியமாகும். மக்களாட்சி நடைபெறும் நாட்டில் யார் ஆள்வது என்பது பெரும்பான்மை மக்களின் முடிவால் தீர்மானிக்கப்படுகிறது. இது சரியா? என்றால் மிகவும் சரி. அதனால்தான் ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி, பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி ஆட்சி அமைக்கப்
படுகிறது. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்கிறார்கள்.
மாறாக, ஆர்.எஸ்.எஸ். என்ற ஆதிக்க அமைப்பு என்ன சொல்கிறது என்றால், மத அடிப்படையில் எந்த மதத்தவர் அதிகம் உள்ளார்களோ அவர்கள் ஆளவேண்டும். மற்ற மதத்து மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் வாழ வேண்டும் என்று கூறுகின்றனர்.
இது சரியா?
மதம் என்பது பிறப்பால் அமைவது, அதேபோல் மத அடிப்படையில் வரும் ஜாதியும் பிறப்பால் வருவது என்றும்.
பெரும்பான்மை மக்களின் முடிவுதானே ஜனநாயகம். அதன்படி எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனரோ அவர்கள் முடிவுப்படி ஆட்சி, சட்டம் என்பது சரிதானே? அதன்படி ஆர்.எஸ்.எஸ். கூறுவது நியாயம் தானே என்றும் கருதுகின்றனர்.
பெரும்பான்மை என்பது தலைக் கணக்கல்ல மாறாக விருப்பக்கணக்கு. அதாவது, பெரும்பான்மை என்பதற்கு பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பதே பொருள். விருப்பம் என்பது மத அடிப்படையில் வருவதல்ல. அது ஒவ்வொரு தனிநபரின் உள்ளத்தில் உருவாகிறது.
பிறப்பு என்பது நம் விருப்பப்படியானது அல்ல. பிறப்பை நாம் தீர்மானிக்க முடியாது. நம் விருப்பப்படி அமையாத ஒன்று எப்படி பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் அடிப்படையாக இருக்க முடியும்? அதேபோல் சிறுபான்மை என்பதும் பிறப்பால் அமைய முடியாது.
அப்படியென்றால், பெரும்பான்மைக்கான சரியான அடிப்படை எது? இதுதான் ஆழமாகச் சிந்தித்து அறியப்பட வேண்டும்.
ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களானாலும், ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் விருப்பம் ஒன்றாக இருக்காது; இருக்க முடியாது. விருப்பங்கள் மாறும். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையிலும் விருப்பங்கள் மாறும். எனவே, மதப் பெரும்பான்மையோ, ஜாதிப் பெரும்பான்மையோ விருப்பப் பெரும்பான்மையாகாது. ஒரே மதத்தவர், ஒரே ஜாதியினர் வெவ்வேறு விருப்பங்கள் உடையவர்களாய் இருப்பர்.
விருப்பம் என்பது தனி நபர் தேர்வு; தனி நபர் முடிவு. பெரும்பான்மையான மக்கள் எதை விரும்புகின்றனர்; எதைத் தேர்வு செய்கின்றனர்; எதை முடிவு செய்கின்றனர் என்பதே ஜனநாயகத்தின் முடிவு.
அதனால்தான் பெரும்பான்மையான மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தேர்வாகிறார். எதை விரும்புகிறார்களோ அது நிறைவேற்றப்படுகிறது.
பெரும்பான்மை மக்கள் ஒரு தப்பான விருப்பத்தை, தப்பான செயல்முறைகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அதை ஒழுங்குபடுத்தி, பெரும்பான்மை மக்களின் சரியான விருப்பங்களை மட்டுமே நிறைவேற்ற அரசியல் சாசனமும், சட்டங்களும், நீதிமன்றங்களும், காவல்நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை சரியான தீர்வு, சரியான செயல்முறை, ஒழுங்கு இவற்றை உறுதி செய்கின்றன.
அதனால்தான் ஜனநாயகம் சமூகநீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை, மனித உரிமைகளைக் காக்கவும் சரியான முறையாக ஏற்கப்படுகிறது.
மாறாக, பிறப்பால் வரும் எந்தத் தேர்வும் மேற்கண்டவற்றை உறுதி செய்யாது. பிறப்பால் வரும் மன்னர் தேர்வும், மன்னர் சொல்வதே சட்டம் என்ற நடைமுறையும் எப்படி சரியல்லவோ, அப்படியே பிறப்பால் வரும் மதமும், பிறப்பால் வரும் ஜாதியும் பெரும்பான்மைக்கு அளவுகோலாக ஆக முடியாது!
பிறப்பால் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர்; பிறப்பால் இவருக்கு உரிமையுண்டு, இவருக்கு உரிமை இல்லை; பிறப்பால் இவர் புனிதமானவர், பிறப்பால் இவர் தீட்டானவர் என்பனவெல்லாம் எப்படித் தப்போ, அப்படியே பிறப்பின் அடிப்படையிலான பெரும்பான்மையும் தப்பு.
பிணைப்பால் வரும் பெரும்பான்மை
பிறப்பால் வரும் பெரும்பான்மை தப்பு என்றால், பெரும்பான்மைக்கான சரியான அடிப்படை எது? இதற்கு விடை காணவேண்டும்.
நாட்டை யார் ஆளவேண்டும், நாட்டிற்கு எந்த நடைமுறை வேண்டும் என்று முடிவு செய்வதற்கு முன், முரண்பட்ட இரண்டு அல்ல பல, தேர்வுக் களத்தில் நிற்கின்றன. அப்போது ஒத்த விருப்பம் உடையவர்கள் பிணைந்து ஒன்று சேருகின்றனர். அப்படி பிணைந்து உருவாகும் பெரும்பான்மையே ஜனநாயகத்தின் ஆணிவேர். ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள் யாரை விரும்பித் தேர்வு செய்கிறார்களோ அவர்களே தேர்வாகின்றனர். இங்கு மதம், ஜாதி, பிறப்பு எதுவும் குறுக்கே வராது; வரக்கூடாது. விருப்பப் பிணைப்பில் ஒன்று சேரும்போது கணவன், மனைவி பெற்றோர். பிள்ளைகள்கூட எதிர் நிலையில் இருப்பர், இருக்க முடியும். அது தப்பல்ல. அதுவே சரி. விருப்பம் என்பது தனிநபர் உரிமை. அதில் மதம், ஜாதி, உறவு, நட்பு என்ற எந்தப் பந்தமும் பிணைப்பாக ஆகமுடியாது; ஆகக்கூடாது. ஒத்தவிருப்பமே ஒன்றாய்ப் பிணைக்கும்.
இப்போது ஒரு கருத்தை நாம் ஆழமாகச் சிந்தையில் கொள்ளவேண்டும். அது என்ன? அதுதான் மந்தை மனப்பான்மை. மந்தை மனப்பான்மை மக்களாட்சிக்கு ஒரு கேடு. அது களையப்பட வேண்டும்.
விழிப்புணர்வுப் பிரச்சாரம்
மக்கள் சாய்ந்தால் சாயும் பக்கம் என்று சாய்வது நடப்பில் உள்ள உளநிலை. அதைத் தகர்த்தால்தான் உண்மையான விருப்பத்தேர்வு நடக்கும். அதற்கு எது சரி, எது தப்பு, எது நீதி, எது நேர்மை, எது உண்மை, எது வஞ்சகம், எது ஏமாற்று, எது மோசடி, எது மடமை, எது பொய் என்பதைத் தெளிவாக அறிய வேண்டும். அதற்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பரவலாக, தீவிரமாகத் தேவை. அதற்கு அறிவார்ந்த அணுகுமுறை கட்டாயம். அறிவியல் மனப்பான்மை மக்களிடையே வளர்க்கப்பட வேண்டும்.
அதனால்தான் அரசியல் சாசனத்திலே, அறிவியல் மனப்பான்மையை, விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். அதைத்தான் அண்ணல் அம்பேத்கர் செய்தார். அதைத்தான் திராவிடர் கழகம், பகுத்
தறிவாளர் கழகம் போன்றவை செய்கின்றன.
விழிப்பு உருவாக்கப்படும்போது சரியான விருப்பம் எது என்பது தெளிவாகும். சரியான விருப்பத்தில் மக்கள் அறிவுத் தெளிவுடன் பிணையும்போது (ஒன்று சேரும்போது) அது பெருபான்மையாக மாறும். அந்தப் பெரும்பான்மைதான் ஜனநாயகத்தைக் கட்டமைக்கும், காக்கும்!
இதை அனைவரும் ஆழமாகக்
கருத்தில் கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும். q