Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பகுத்தாய்வும் பரம்பொருளும் – திருப்பத்தூர் ம.கவிதா

“யாருமே சாமியை பார்த்ததில்லையே, அப்படின்னா யாருமா இந்தப் படம் எடுத்தாங்க?” என்று  சுவரில் மாட்டி வைத்திருக்கிற கடவுள் படத்தைப் பார்த்து நண்பர் ஒருவரின் பிள்ளை இப்படிக் கேட்டது. பதில் ஏதும் சொல்லாமல் வியந்து போனார் அந்த அம்மா. அதே போல் புரட்டாசி சனிக்கிழமையில் படையல் வைக்க இலை விரித்து வரிசையாக எல்லாரும் அமரும்போது, இலையில் பிரியாணி போடுங்கள் என்று அடம்பிடித்த ஒரு சிறுவனுக்கு ஏன் சில நாள் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பெற்றோரால் விளக்க முடியவில்லை.

இப்படி அறிவார்ந்த கேள்விகளை எழுப்பும்போது குழந்தைகள் பெரும்பாலும் அடக்கப்படுகிறார்கள். எந்த விலங்குகளுக்கும் கடவுள் இல்லை என்பது போல எல்லாக் குழந்தைகளும் நாத்திகவாதிகளாகவே இவ்வுலகில் பிறக்கிறார்கள். ஆனால், அவர்களை இயல்பாக வளர பெற்றோர் விடுவதில்லை. மூடத்தனங்கள் அவர்களின் மேல் திணிக்கப்படுகின்றன. அதனால் தான் வழிவழியாகக் கடவுளும் மதமும் காப்பாற்றப்பட்டு வருகின்றது.

என்னதான் ஊடகங்கள் ஒரு பக்கம் கடவுள் எழுந்தருளினார், அருள் பாலித்தார், வீதியுலா வருகிறார் என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும்  இனி இந்தப் புவியில் தோன்றும் குழந்தைகள் அறிவியல் ஏற்படுத்தும் அபாரமான தெளிவு கொண்டு சிந்திக்கும் உலகில் தோன்றி வளர்க்கிறார்கள் – வளர்வார்கள் எனும்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கட்டுக் கதைகளிலிருந்து எல்லாம் தங்களை விடுவித்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகி, உலகம் நாத்திக வயப்படும் என்பதே திண்ணம்.

கடவுள் தன்மையைக் குழந்தைகளுக்குப் போதிக்கும் பெற்றோர்கள் உண்மையிலேயே கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் விட்டு வைப்பதில்லை. கடவுள் பார்த்துக் கொள்வார், நீ எதையும் செய்யாதே என்றும் குழந்தைகளுக்குப் போதிப்பதில்லை. எதையெதை எப்படிச் செய்வது? எப்படி நோயற்ற வாழ்வு வாழ்வது? எப்படித் தன்னைக் காத்துக் கொள்வது என்று சதா அவர்களை இயங்க வைத்து, அவர்களே தன்னிச்சையாய் வாழ தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்‌. எந்தப் பெற்றோர்களும் நோய் என்பது கடவுள் கொடுத்த தண்டனை, நாம் அதைக் குணப்படுத்தக் கூடாது என்று சொல்வதில்லை. பதறிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தால் அவர்களின் திணிப்புகளும் இனி வரும் காலங்களில் எடுபடுவது சிரமமே!

“கடவுள் தானாக யாருக்கும் தோன்று
வதில்லை. பெரியோர்களால் சிறியோர்களுக்கு போதிக்கப்பட்டும் காட்டப்பட்டதுமான  தோற்றமான எண்ணமும் உருவமும் ஆகும். ஆதலால் இனி வரும் உலகத்தில் கடவுளைப் பற்றிய இந்நிலை மறைந்து விடும். யாராவது இருந்தாலும் அவர்களுக்கும் கடவுள் மறக்கப்பட்டு போகும். ஏனெனில், கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது
ஓர்ந அவசியம் இருந்தால் தான் நினைப்பான். சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விவரம் தெரிந்து விடுவதாகவும், சகல தேவை
களுக்கும் மனிதனுக்குக் கஷ்டப்படாமல் பூர்த்தி
யாவதாகவும் இருந்தால் எந்த மனிதனுக்கும் கடவுளைக் கற்பித்துக் கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்? மனிதன் உயிரோடு இருக்கும் இடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமேயானால், விஞ்ஞானத்துக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாத மோட்சம் ஒன்றை ஏன் கருதுவான்? எதற்கு ஆசைப்படுவான்?

தேவையற்றுப் போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும் என்பது அறிவின் எல்லையாகும். விஞ்ஞான பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடமிருக்காது. நம்முடைய வாழ்வில் நாம் எதைக் கடவுள் செயல் என்று உண்மையாய் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் செய்து கொள்கிறோம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்கிறோம். இதுதான் உலகத் தோற்றத்திற்கும் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒரு சமயம் உலக நடப்புக் காரணம் தெரியாவிட்டாலும் அதற்காக ஒரு காரியத்திற்கும் தேவையில்லாத கடவுளை எவனும் வணங்க மாட்டான்” என்று இனிவரும் உலகம் என்ற தலைப்பில் மிகத் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் கடவுள் சங்கதியை வரையறுக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் கூற்றுக்குக் கட்டியம் கூறும் வகையில்,உலக அளவில் மத நம்பிக்கைகளில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது Pew research centre  ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2010 – 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 27 கோடி பேர் தங்கள் மதங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். அய்ரோப்பா, அமெரிக்க அய்க்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கிறித்துவர்களே பெரும்பாலும் மத நம்பிக்கையில் இருந்து வெளிவந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆண்டவர், ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரச் செய்து, விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தை சதையினால் அடைத்தார் என்றும், எடுத்த எலும்பிலிருந்து மனுஷியை உண்டாக்கினார் (ஆதி: 2, 22 ஆம் வசனம்) என்று இருக்கிறது. எலும்பை எடுத்த இடத்தில் யாருடைய சதையை வைத்து அடைத்தார் என்று தெரியவில்லை. மேலும் விலா எலும்பை எடுக்கும் முன் மயக்க மருந்து  (குளோரோஃபார்ம்) ஏதாவது கொடுத்ததாகவும் குறிப்பிடவில்லை. ஆணைப்படைத்த கடவுள் பெண்ணையும் தனியே படைக்காதது ஏன்? விலா எலும்பை ஏன் எடுக்கவேண்டும்?

இப்படிக்  கட்டுக்கதைகளின் மீது பகுத்தறிவு கொண்டு கேள்வி எழுப்பும் நிலை எதிர்வரும் காலங்களில் தவிர்க்க முடியாது என்பதன் அறிகுறியாகத்தான் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறது.

“இயற்கை என்பதே உண்மை. அற்புத திருவிளையாடல்கள் என்பவை எல்லாம் பொய்!” என்கிறார் இராபர்ட் ஜி. இங்கர்சால்.

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான கோரவிபத்தில் விமானத்தைத் தவறவிட்ட பெண், தன்னைக் கணபதி காப்பாற்றினார் என்று சொல்கிறார். ஏன் கணபதி மற்ற 290 பேரைக் காப்பாற்றவில்லை? இக்கேள்வி எழுந்தால் அந்த மடமை மறையும்.

வறுமை, பசி, பட்டினி, கொள்ளை நோய்கள், கொத்துக்கொத்தாய் மரணங்கள், இயற்கைப் பேரிடர்கள், போர் அழிவுகள், கோர விபத்துகள் என நேரிடுகையில் கடவுள் இல்லை என்ற எண்ணம் மக்களிடம் வலுப்பெற்று வளரவே செய்யும்.

“நம் முன்னோர்கள் இவ்வுலகின் புரியாத புதிர்களுக்கு விடை காண முற்பட்டு நேரடி நிரூபணங்கள் எதுவும் கிடைக்காததால், தங்களுடைய சொந்த முடிவுகளை விடையாகக் கூறியுள்ளனர். அவை மதக் கோட்பாடுகளாக மாறின. ஆனால், அந்தக் கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்றன. குருட்டு நம்பிக்கைகள் எந்த விதமான மாற்றத்திற்கும் மறுப்புக்கும் உட்படாமல் ஆக்கப்பட்டு வைத்திருப்பதால் அவை பாதிப்பைத் தருவனவாகும். அதைத் தூள் தூளாகத் தகர்க்க பகுத்தறிவால் முடியும். இயற்கை என்பது உண்மை. ஆனால், இயற்கைக்குப் பின்னாலிருந்து இயக்கும் சக்தி எதுவும் இல்லை ‌.

கடவுள் உலகத்தைப் படைத்தது என்றால் துயரம், இன்னல் நிறைந்ததாக அதை ஏன் படைத்தது? அநியாயங்களை அது ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் நம்பிக்கை அற்றுப் போகும்!

ஆம், பகுத்தாய்ந்து சிந்தித்தால் நாத்திகராவது உறுதி. இன்னும் 50 ஆண்டுகளில் உலகில் சரி பாதி நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகும். கடவுளும் மறக்கப்படும் – மறுக்கப்படும் பொருளாக மாறி மெல்ல மெல்ல முற்றாய் அற்றுப் போகும் என்பதில் அய்யமில்லை. q