விருப்பமுடன் விடுதலைப் போர் வீரராக
வெஞ்சிறையில் மறக்கவொணா ஒன்ப தாண்டாய்ப்
பெருந்துன்பம் ஏற்றவரே காமராசர்!
‘பெருந்தலைவர்’ எனமதிக்கும் புகழைப் பெற்றார்!
அரும்பசியால் துடித்திட்ட மாணாக் கர்க்கே
அளித்திட்டார் நண்பகலின் உணவுத் திட்டம்!
பெரியாரின் தோழமையால் குமுகம் தன்னில்
பெரும் மாற்றம் உருவாக்கும் துடிப்பைப் பெற்றார்!
எண்ணற்ற அணைக்கட்டை நிறுவ லானார்;
“ஏழைகளின் பங்காளர்” விருதைப் பெற்றார்!
உண்மையுடன் உழைத்தஇவர் மக்கள் அன்பால்
ஒன்பதாண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்
கண்ணியமாய் நல்லாட்சி நடத்தி வந்தார்!
கதராடை, மிக எளிமை, நேர்மைமிக்க
தன்னிகரே இல்லாத தலைவர், “பச்சைத்
தமிழரென” யாவருமே போற்றி வந்தார்!
பாரதமிகு மின்தொழில கத்தி னோடு
பாங்குறவே துப்பாக்கித் தொழில கத்தைச்
சீரார்ந்த திருச்சியிலே அமையச் செய்தார்!
சேலத்தில் இரும்பாலை, பெரம்பூர், கிண்டி
பேருழைப்பால் ஆவடியில், கல்பாக் கத்தில்
பெரியதொழிற் சாலைகளை நிறுவச் செய்தார்!
நேரியநல் நெய்வேலி தன்னில் வேண்டும்
நிலக்கரிகள் ஆக்கும்தொழிற் சாலை கண்டார்!
கல்விக்கண் திறந்தவராய் வாழ்த்தப் பெற்றார்!
காழ்ப்புணர்வால் இராசாசி மூடிச் சென்ற
பள்ளிகளோ ஆறாயிரம் திறந்து வைத்த
படிக்காத மேதையிவர்! தீங்கைச் சேர்க்கும்
கள்ளுக்கடை மறியலிலே கலந்து கொண்டார்!
கடல் உப்பு சார்ந்தஅறப் போரில் மற்றும்
வெள்ளையனே ”வெளியேறு” களத்தில் நின்ற
வீறார்ந்த போராளி இவரே அன்றோ? q