Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி மாநாடு: அரசியலுக்கா? பக்திக்கா?-மஞ்சை வசந்தன்

100 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. அப்பொழுதே அந்த அமைப்பை இந்தியா முழுமையும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஹெட்கேவர் முயற்சி

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வேரூன்றச் செய்ய ஹெட்கேவரே முயற்சி மேற்கொண்டார். மராத்திய சித்பவன்  பார்ப்பனர்கள் சிலரைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி
வைத்தார். அப்படி அனுப்பி 60 ஆண்டுகள் ஆகியும் அந்த அமைப்பு தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதற்கு ஒரே காரணம், தந்தை பெரியாரின் பிரச்சாரமும், தி.மு.க. ஆட்சியும்தான். ஆனால், 1980க்குப் பிறகு அந்த அமைப்பு தமிழ்நாட்டில் மெல்ல காலூன்றத் தொடங்கியது. கமுக்கமாகத் தங்கள் செயல் திட்டங்களைச் செய்து பயிற்சி முகாம்களை நடத்தியது.

ஒன்றிய அரசில் பா.ஜ.க.வுடன் திராவிடக் கட்சிகள் கூட்டு வைத்தபின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியது. ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வு தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் நன்கு வளர்க்கப்பட்டிருந்த நிலையில், காலூன்ற முடியாது தவித்த ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க. அமர்ந்தபின், பணம், பதவி, செல்வாக்கு போன்ற ஆசைகளைக் காட்டி, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை  வளர்த்தது.

2014க்குப் பிறகு ஒன்றிய ஆட்சியில் பா.ஜ.க. அளவுக்கு அதிகமான இடங்களை வென்று அமர்ந்தபின், எலும்புத்துண்டுக்கு அலைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் உதவியோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பல இடங்களில் உருவாக்கினர்.

கோவையில் மதக்கலவரத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சியை அதிகப்படுத்தினர். அப்படிப்பட்ட சூழலிலும் தமிழ்நாட்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பியை வளர்க்கவும் வலுப்பெறச் செய்யவும் முடியாததால், வெறுப்புற்று, வெறிகொண்டு தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தாக்கம் இந்தியா முழுக்க எதிரொலித்தல்

தந்தை பெரியாரும், தி.க.வும், தி.மு.கழகமும், பகுத்தறிவாளர் கழகமும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்வும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வளர முடியாததற்குக் காரணம் என்பதை மிகத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு புரிந்து வைத்துள்ளது. அதனால் தந்தை பெரியாருக்கு எதிரான பிரச்சாரத்தையும், தி.மு.க. கழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் பி.ஜே.பி.ஆட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் செய்துவருகின்றன.

மேலும், இந்தியா அளவிலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பிக்கு எதிரான எழுச்சிக்கு தமிழ்நாடே முன்னின்று வழிகாட்டி வருகிறது. இதனால் ஆத்திரமுற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திராவிடர் இயக்கக் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. விமர்சித்து வருகிறது.

திராவிடர் இயக்கம் இந்துக்களுக்கு எதிரானது என்றும்; ஆரியர் – திராவிடர் என்று இந்துக்களைப் பிளக்கிறது என்றும்; இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்றும் கூறி, மக்களைத் தங்கள் ஆதரவாளர்களாக மாற்ற தப்பான வழியில் முயற்சி செய்து வருகின்றது.

திராவிடர் இயக்கக் கோட்பாடுகளும், செயல் திட்டங்களும், போராட்டங்களும் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும், அவர்களின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதாகவும் இருப்பதால், மக்கள் அதன் பக்கம் செல்வதைத் தடுக்க, மதவெறியைத் தூண்டி மடைமாற்றம் செய்யப் பார்க்கின்றனர். மதம், ஜாதி, பக்தி என்ற உணர்வை உசுப்பி, சுயமரியாதை உணர்வும், விழிப்பும் பெறாமல் தடுக்கின்றனர்.

திராவிடர் இயக்கம் நூற்றாண்டு காலம் உழைத்தும் கடவுள், பக்தி, மூடநம்பிக்கைகளை முற்றாக ஒழிக்க முடியாமல் போனாலும், சமூக நீதி, சுயமரியாதை உணர்வு, ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு பெண்ணுரிமை, இவற்றில் தமிழ்நாட்டு மக்களை விழிப்போடு வைத்துள்ளது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி. அமைப்புகளின் சூழ்ச்சியும், ஏமாற்றும் வஞ்சகமும் தமிழ்நாட்டு மக்களிடையே எடுபடவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பக்தியையும், அரசியலையும், சுயமரியாதையையும், சமூகநீதியையும் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தைத் திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தின் மூலம் பெற்றுள்ளனர். 1967 முதல் திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருப்பதும் அதற்கு முதன்மைக் காரணமாகும்.

இந்து அறநிலையத்துறையை எதிர்த்தல்

இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இதில் ஆதிக்கம் செலுத்தி தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்த ஆர்.எஸ்.எஸ். முயற்சியை, இந்து அறநிலையத்துறையின் மூலம் தகர்த்து மக்களைச் சரியான பாதையில் கொண்டு செல்கிறது திராவிடர் இயக்கம். அதனால், இந்து அறநிலையத்துறையை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களையும், அதன் சொத்துக்களையும் அரசாங்கத்திடமிருந்து மீட்டு, இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். இதில் மக்களை விழிப்புடன் வைத்திருக்க வேண்டிய கடமை சுயமரியாதை உணர்வுள்ள அனைவரின் கடமையாகும்.

இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் எந்த இந்துக்களிடம்? இக்கேள்வியைத் திராவிடர் இயக்கம் கேட்கும்போது அவர்களின் சூழ்ச்சி தவிடுபொடியாகிறது. மக்களை ஏமாற்றும் அவர்களின் முயற்சி அம்பலமாகிறது.

இந்து அறநிலையத்துறை என்பது முழுக்க முழுக்க இந்துக்களைக் கொண்ட ஓர் அமைப்புதான் என்ற உண்மையை
ஆர்.எஸ்.எஸ். மக்களிடம் மறைக்கிறது. அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகராகிவிடக் கூடாது என்ற அவர்களின் நோக்கம் நிறைவேற அறநிலையத் துறையை அகற்றத் துடிக்கிறார்கள்.

ஆனாலும், திராவிடர் இயக்கமும், திராவிட ஆட்சியாளர்களும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, மக்களின் உரிமையை நிலைநாட்டி வருகின்றனர். அதில் பெரும்பாலும் வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்கி மாநில மாநாட்டையும் நடத்தினர். இதற்கு சங்கராச்சாரி, விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு கிடைத்தது. இந்த மாநாட்டின் முழுப்பயனும் ஆர்.எஸ்.எஸ். அடையக் கூடாது, மக்களை விழிப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சராயிருந்த கலைஞர் அவர்கள், அந்த மாநாட்டில் சில அமைச்சர்களுடன் தாமும் கலந்து கொண்டு, கிராமப்புறப் பூசாரிகளுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். அதற்கான ஆணைகளையும் பிறப்பித்தார். இதன்மூலம் கிராமப் புறக் கோயில் பூசாரிகள் ஆர்.எஸ்.எஸ். பக்கம் சென்றுவிடாமல் தடுத்தார்.

தங்கள் முயற்சிகள் பல வகையிலும் தோற்கவே, கோயில் இடங்களில் சிக்கலை உருவாக்கி, மதமோதல் ஏற்படுத்தத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அண்மையில் திருப்பரங்குன்றத்துக் கோயிலில் மதமோதலை உருவாக்க தொடக்கப்புள்ளி வைத்தனர். அதைத் தொடர்ந்து கூர்மைப்படுத்த   முயற்சிக்கின்றனர். ‘தர்கா’, ‘இஸ்லாமியர்’ என்று எதிர் அணி அமைக்கின்றனர்.

வேலூர் கோட்டை கோயிலுக்குள் இருந்து ‘லிங்கம்’ அகற்றப்பட்டதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று ஒரு வதந்தியைக் கிளப்பிய ஆர்.எஸ்.எஸ். கலவரத்திற்கு வித்திட்டது. ஆனால், உண்மையில் லிங்கத்தைக் கோட்டைக் கோயிலுக்குள் வைக்கக்கூடாது என்று எந்த இஸ்லாமியர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மை என்னவென்றால், வேலூர் கோட்டையும் கோயிலும் இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை. அவை இந்து மன்னர்களால் கட்டப்பட்டவை அல்ல.

வேலூர் கோட்டைக்குள் உள்ள கோயிலுக்குள் லிங்கத்தை வைப்பதற்கு உண்மையில் தடை விதித்தது. இந்தியத் தொல்லியல் துறைதான். புதிதாக எதையும் வைக்க தொல்லியல்துறை அனுமதிப்பதில்லையென்ற விதியின்படியே அது தடுக்கப்பட்டது. தஞ்சை கோயிலில் இராஜஇராஜன் சிலையை வைக்கத் தடை செய்ததும் இந்தியத் தொல்லியல்துறைதான் என்பதை இங்கு ஒப்பிட்டு உண்மையை அறிய வேண்டும்.

விவேகானந்தர், இராமகிருஷ்ணபரமஹம்சர் முகமூடி

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைப் பரப்புவதற்கும், மக்களை ஏற்கச் செய்வதற்கும் விவேகானந்தரையும், இராமகிருஷ்ண பரமஹம்சரையும் முகமூடியாகப் பயன்படுத்து
கின்றனர். இதைத் தங்கள் நூலின் மூலமே ஆர்.எஸ்.எஸ். ஒப்புக்கொள்கின்றது.

“தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து எழுச்சியின் கதை” என்ற ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட நூலில்,

1948இல் காந்தி சுடப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அத்தடை 1949இல் நீக்கப்பட்டது. அதன்பின்,

“சங்கப் பயிற்சிக் குழுக்கள் மீண்டும் சில இடங்களில் தொடங்கப்பட்டன; ஆனால், அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக் குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்; அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற்ற வைத்தன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய்நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப் பாறையை நிர்மாணித்ததாகும். சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோயிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும் பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப் பாறை விவேகானந்தர் பாறை என்று பெயரி
டப்பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963இல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவகம் கட்டுவது என்னும் யோசனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது; விவேகானந்தர் பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விரிவடையச் செய்யும் ஒரு செயல்திட்டமாகவே குமரி முனையில் விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்தத் திட்டத்தின் எதிர்வினையாகவே கலைஞர் அவர்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின்  நேர்எதிர் கொள்கைகளைப் பரப்பிய திருவள்ளுவருக்குச் சிலையை அதே இடத்திலே அமைத்தார் என்பதை தமிழர்களும், பாசிச எதிர்ப்பாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

வினாயகர் ஊர்வலம்
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் திட்டமே

தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய எந்த கடவுள் ஊர்வலமும் வழக்கத்தில் இல்லாத நிலையில், வடமாநிலங்களில் நடத்தி வருகிற வினாயகர் ஊர்வலத்தை தமிழ்நாட்டிலும் கொண்டுவந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே. அமைதியாக, மத நல்லிணக்கத்தோடு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதக்கலவரங்களை உருவாக்கும் ஒரு செயல்திட்டமாக இதைப் பயன்படுத்தினர்; பயன்படுத்தியும் வருகின்றனர். மதக்
கலவரங்களோடு நீர்நிலைகளையும் மண்ணையும் மாசடையச் செய்யும் சமூக விரோதச் செயல்களையும் இதன் மூலம் செய்து வருகின்றனர். மாசுக் கட்டுப்பாடு பற்றி பக்கம் பக்கமாக எழுதும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்த மாசுகள் பற்றியும், தீபாவளியால் ஏற்படும் மாசுகள் பற்றியும் எதுவும் எழுதுவதில்லை. இதுதான் ஆரிய பார்ப்பன மநுநீதி என்பதை மக்கள் நன்றாக மனதில் கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் ஜாதி, மதக்கலவரங்கள் அடிக்கடி நடப்பதற்கும், ஜாதி உணர்வு மாணவர்கள் மத்தியில் பதிக்கப்படுவதற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுகச் செயல்திட்டங்களே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மீனாட்சிபுரம், மண்டைக்காடு

விவேகானந்தர் பாறை நினைவிடம், விவேகானந்தர் கேந்த்ரா ஆகியவற்றை அமைத்து, குமரிப்பகுதியின் பல இடங்களையும் கைப்பற்றி, தென் தமிழகத்தில் தங்கள் தளத்தை வலுப்படுத்தியபின். தாய் மதத்திற்கு மீண்டும் திருப்புகிறோம் என்று கூறி திருநெல்வேலியில் 400க்கும் மேற்பட்ட கிறித்துவக் குடும்பங்களை விஸ்வ இந்து பரிஷத் மூலம் இந்து மதத்திற்கு மாற்றினர். புதிதாக யாரும் இந்துமதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறாமல் கவனமாகக் கண்காணித்தனர். மீண்டும் இந்துமதத்திற்கு வந்தவர்களை எந்த ஜாதிப்பிரிவில் வைப்பது என்ற சிக்கல் அவர்களுக்குப் பெரும்பிரச்சினையாக இருந்தது.

ஆனாலும், மீனாட்சிபுரம் கிராமத்தில் 600 குடும்பங்கள் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கும் மாறினர். இதைக் கண்டு அதிர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், மீனாட்சிபுரத்தில் குவிந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகப்படியான பாசத்தைப் பொழிந்தனர். இந்து மாநாடு ஒன்றை நடத்தினர். மதம் மாறியவர்களில் சிலரை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வந்தனர். ஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தார். மதமாற்றத்தைத் தடுக்கும் நோக்குடன்  இராமகோபாலன் தலைமையில் இந்து முன்னணியை அமைத்தனர்.

ஆனால். இராமகோபாலன் அமைப்பு மதவெறியைத் தூண்டி கலவரங்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டியது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வழிபாட்டின் போது, வதந்திகளைப் பரப்பி கிறித்துவர்களோடு மோதலை உருவாக்கினர்.

அய்யப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்வது அதிகமாகவே அதையும் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஆதிபராசக்தி வழிபாட்டு முறையை மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் உருவாக்கினார். பெண்களே அம்மன் சிலைக்கு வழிபாடு செய்யும் முறையைக் கொண்டு வந்தார். இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸனாதன முறைக்கு எதிரானது என்றாலும், அங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் செல்வதால், அதையும் தங்கள் நோக்கத்திற்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லுவோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடுவதால் அதையும் தங்கள் வயப்படுத்த  முயற்சி செய்கின்றனர்.

பழனி கோயிலுக்கு மக்கள் அதிகம் செல்வதால் அதையும் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். பழனி முருக வழிபாடு தமிழர் வழிபாட்டு முறையுடன் நடந்து வந்தது. அது ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில் அல்ல. பால்காவடி, மச்சக்காவடி(மீன்காவடி), சேவல் படையல் என்று அங்கு வழிபாடு நடந்தது. அதையும் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தைச் செய்து வருகின்றனர். வழிபாட்டு முறைகளை மாற்றியுள்ளனர்.

தற்போது திருப்பரங்குன்றத்தில் தர்கா இருக்கிறது என்றும் அங்கு மாமிசம் உண்கிறார்கள் என்றும் கூறி கலவரத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள். முருகன் பெயரால் மாநாடு கூட்டி கலவரத்திற்குக் களம் அமைக்கத் துடிக்கிறார்கள்.

அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், இஸ்லாமிய வழிபாட்டிடத்திற்குச் செல்கின்றனர். பரங்கிப்பேட்டைக்கு அருகில் கிள்ளையில் பூவராகசாமி கடல் தீர்த்தமாடச் செல்லுகையில் அந்தத் தர்காவில் வரவேற்பளிப்பது நீண்டகால மரபாகவுள்ளது.

இப்படி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களோடு இந்துக்கள் கலந்து வழிபாடு செய்கின்றனர். ரங்கநாதருக்கும் துலுக்க நாச்சியாருக்கும் உள்ள தொடர்பு, அது சார்ந்த விழாக்கள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

முருகன் மலைநிலத் தலைவன். அவன் வேடன். முருகனுக்கு வள்ளி என்ற வேட்டுவப் பெண்ணே மனைவி. வேடர்கள் என்றாலே இறைச்சி உண்பவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. அப்படியிருக்க திருப்பரங்குன்ற மலையில் உள்ள தர்காவில் இறைச்சி சாப்பிட்டார்கள் என்று கலவரத்தை உண்டு பண்ண கால்கோள் செய்வது கயமைத்தனமல்லவா?

முருகனைச் சுப்ரமணியனாக்கி, தெய்வயானை என்ற ஒரு கற்பனை மனைவியைக் கற்பித்து முருக வழிபாட்டை மாற்றியவர்கள், தொடர்ந்து தமிழர்க்கே உரிய முருக வழிபாட்டைச் சிதைத்து, திரித்து மாற்றி வருகின்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க இப்படிப்பட்ட கலவரங்களை அதிகம் உருவாக்க முயற்சி செய்வர். எனவே, தமிழ்நாடு அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் (பி.ஜே.பி. நீங்கலாக), தொண்டு அமைப்புகளும், முற்போக்காளர்களும், மத இணக்கம் விரும்புவோரும், ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சதித்திட்டங்களை முறியடித்து, தமிழ்நாட்டில் மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை உருவாக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டம் முருகன் மாநாடு என்று ஒரு திட்டம் வகுத்து, அதை இந்து முன்னணியை விட்டு நடத்த வைத்தனர்.

மதுரை மக்கள் அதற்கு எந்த ஆதரவும் தரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால், கண்காட்சிக்கு வருவது போல் மக்கள் கூடினர். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. நடத்தும் எதற்கும் மக்கள் கூட்டம் வராது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால், பி.ஜே.பி., ஒரு பெருந்தொகையை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களிடம் கொடுத்து கூட்டங்கூட்ட ஏற்பாடு செய்யச்சொல்ல, அவர்கள் தலைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டத்தைக் கூட்டினர்.

மாநாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்ததையும் மீறி அரசியல் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றினர். பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய தீர்மானம் போடச் சொல்லியும், அத்தீர்மானம் போடப்படவில்லை.

அதுமட்டுமின்றி திராவிட இயக்கத் தலைவர்கள் பெரியார், அண்ணா இருவரையும் விமர்சித்து காணொளி வெளியிட்டனர். இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.

பெரியார் – அண்ணா இருவரையும் தலைவராக ஏற்று, திராவிடம் என்று கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு, திராவிடத்தை ஒழிப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் போஸ்டர் ஒட்டியதற்கும் அ.தி.மு.க. எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்படி அ.தி.மு.க. அனைத்து கொள்கையையும் இழந்து நிர்த்துப் போய் நிற்கிறது.

பி.ஜே.பி. தன்னோடு சேருகின்ற எந்தக் கட்சியையும் தன்னுள் செரித்துக் கொள்ளும் என்பது அ.தி.மு.க. கூட்டிலும் நடக்கத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., பி.ஜே.பி. என்ற ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்குண்டு நிற்பது தமிழகத்தின் நலனுக்கும், தமிழர் நலனுக்கும் கேடானது.

தேர்தல் நெருங்க நெருங்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அடுத்தடுத்து தமிழ்நாட்டில் வளர முயற்சி செய்யும். அ.தி.மு.க.வை அழித்து அந்த இடத்தைதான் பிடிக்கும் செயல் திட்டத்துடன் பி.ஜே.பி.யும்,
ஆர்.எஸ்.எஸ்ஸும் செயல்படுவதால் தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து அச்சதியை முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க. தலைவர்கள்
சுயநலத்திற்காகவும், தங்களைக் காப்பாற்றிக்
கொள்வதற்காகவும் அ.தி.மு.க.வை பி.ஜே.பி.யிடம் அடகு வைத்த நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் விழப்போகும், எச்சரிக்கையோடு இருந்து பி.ஜே.பி.யை மண் கவ்வச் செய்ய வேண்டும். பி.ஜே.பி. அணியை அறவே புறக்
கணித்து, தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டியது தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி; பி.ஜே.பி. இவற்றைப் பொறுத்த வரை பக்தி என்பதெல்லாம் வெளி வேஷம் அவர்களின் உண்மையான நோக்கம் அரசியல் – அதுவும் ஆரிய ஆதிக்க அரசியல்!