Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஒரே இரத்தம்- செந்துறை மதியழகன்

விபத்து காரணமாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் நபருக்கு இரத்தம் தேவை’ என்ற செய்தி கைப்பேசியை ஒளிரவிட்டுக்கொண்டிருந்த கதிரவன்  பார்வையில் பட்டது.

போக்குவரத்து அமைச்சரின் முகநூல் பக்கத்தில் ‘இரத்தம் தேவை’ என்ற வேண்டல் பதிவுகளே அதிகம் இடம் பெற்றிருக்கும். அவரிடத்தில் அரசு கூடுதலாக மின்சார இலாகாவையும் ஒப்படைத்திருந்த போதிலும். தன்னை நாடும் மக்களுக்கான மருத்துவ உதவியை இன்றளவும் கைவிடாது செய்து வருகிறார். என்பதற்காகவும் மக்களிடத்தில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு.

பெயர் : இராமநாதன்

வயது : 51

இரத்த வகை :  “AB-நெகட்டிவ்”

தேவையான அளவு : 1.5 யூனிட்

இடம் : அரியலூர் அரசு மருத்துவமனை.

உடன் இருப்பவர் பெயர் : சாரா தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்ணும் குறிப்பிட்டிருந்தார்.

‘இந்தியாவில் ஆண்டுக்கு நான்கு கோடி பாட்டில் இரத்தம் தேவையாம். நாள்தோறும் இரத்தத்தின்  தேவை கூடுகிறது ஆனால், நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைப்பதோ 40 லட்சம் பாட்டில்கள் தான்’ என்று ஒருநாள் தொலைக்காட்சியில் ஒன்றிய சுகாதார அமைச்சர் குறைப்பட்டுக் கொண்டிருந்தார். என்னதான் குருதிக் கொடை பற்றிய விழிப்புணர்வை கொடுத்தாலும், குருதி வழங்க பலருக்கும் தயக்கம் இருக்கவே செய்கிறது. ஆனால், கதிரவன் அந்த ரகமில்லை. கடந்த பத்தாண்டுகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட முறை பிறருக்காக இரத்தம் வழங்கிய கொடையாளன். எப்போது வேண்டுமானாலும் தன் இரத்தம் பிறருக்குத் தேவைப்படலாம் என்பதற்காகவே அவன் தீய பழக்கங்கள் எதையும் இதுவரையில் தீண்டியதில்லை.

அமைச்சரின் முகநூல் பதிவு பார்வையில் தோன்றிய சில வினாடிகளில் தனது பைக்கை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை அடைந்தான். பதிவிலிருந்த தொடர்பு எண்களை கைப்பேசியில் அழைத்தான். “ஹலோ … ” என்றது மறுமுனையில் சாராவின் குரல்.

“நான் கதிரவன் பேசுறேன் இரத்தம் தேவையின்னு… ”

“ஆமாம்.., கேட்டிருந்தோம் இப்போ எங்கே இருக்கீங்க..?”

“இங்குதாங்க… மருத்துவமனை வாசலில் நிக்கிறேன்”

“ப்ளீஸ் … அங்கேயே இருங்க… இந்தா வந்துட்டேன்” என்ற சாரா மருத்துவமனை வாசலை நோக்கி நடந்தாள்.

மருத்துவமனையில் மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ‘கதிரவனை எப்படிக் கண்டறிவது!’ என்ற குழப்பத்தில் இருந்த சாராவின் பார்வையில் அந்த இளைஞன் தென்பட்டான். முப்பது வயது மதிக்கலாம் அவனிடம் சென்று “மிஸ்டர் கதிரவன்..?” என்றாள்.

“ஆமாம்.. !” என்று தலை அசைத்தவனின் கையைப் பிடித்துக்கொண்டு “வாங்க… வாங்க…” தனது தந்தை இராமநாதன் கிடத்தப்பட்டிருந்த  தீவிர சிகிச்சைப் பகுதிக்கு அவனை அவசர அவசரமாக இட்டுச் சென்றாள்.

அங்கு கணினி முன்பாக பணியில் ஈடுபட்டிருந்த தாதியரிடம் . “மேடம் இவர் தான் எங்க அப்பாவுக்கு பிளட் டோனர்” என்று அறிமுகம் செய்தாள்.

புன்முறுவல் காட்டிய தாதியர், கதிரவனின் சுய விவரங்களைக் குறித்து வைத்துக்கொண்டு “மிஸ்டர் கதிரவன் AB-நெகட்டிவ் ரேர் குரூப், நம்மிடம் இல்லை, அடுக்கம்பாறை முதல் அடையாறு பிளட் பாங்க் வரையில் ஆல் ஓவர் தமிழ்நாட்டிலும் இருப்பு இல்லை என்று கைவிரித்து விட்டனர். யாரிடம் கேட்பது என்ற தடுமாற்றத்தில் இருந்தோம். நல்லவேளையாக மனிதாபிமானத்துடன் நீங்களே முன்வந்து பிளட் கொடுக்குறீங்க பாராட்டுகள். அந்த ரூமில் இருங்க, இதோ வந்துடுறேன்” என்றார்.

இருவரும் தாதியர் காட்டிய அறையை நோக்கி நடந்தனர். அந்த அறை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அப்பால் இருந்தது. அதனைக் கடந்து சென்றபோதுதான் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து சில வினாடிகள்  அசைவற்று நின்றுவிட்டான். அவனைப் பின் தொடர்ந்த சாரா அவனது அதிர்ச்சிக்கு விடை சொன்னாள் “அவர்தான் எங்க அப்பா இராமநாத…” அவளது சொற்கள் முற்றுப் பெறுவதற்குள் அவனது முகம் சிவந்து கோவம் கொப்பளிப்பதை உணர்ந்தவள், “ஏன்.. என்னாச்சு..?” என்றாள்.

“உங்க அப்பாவுக்கு நான் இரத்தம் கொடுப்பதில் சம்மதமா?”

“சம்மதம் எப்படிக் கேட்பது? அவர்தான் சுய நினைவற்றுக் கிடக்கிறாரே… வைத்தியம் முடிந்து கண் விழிக்கட்டும். இரத்தம் கொடுத்தது நீங்கள் தான் என்பதைச் சொன்னால் மகிழ்ச்சி கொள்வார்” என்றாள்.

‘அவர் கண் விழிப்பாரா? மகிழ்ச்சியடைவாரா?’ சிந்தையில் மின்னல் வெட்ட, கதிரவனின் கண் பார்வை இமைப்பொழுது  சாராவின் மீது ஊடுருவி அங்கிருந்த ஜன்னல் வழி  வெளிப்பட்டது.

மருத்துவமனையின் நீண்ட ரப்பர் சாலையில் இருந்த பூ’ மரங்கள் பூக்களை உதிர்ப்பதை ரசிக்க முடியாமல் அவனது மனது பழைய நினைவுகளில் மூழ்கியது.

‘ஜாதி மறுத்து  காதலித்தது குற்றமென ஒரு காதல் தம்பதியைச் சந்தைக் கொட்டகையில் வைத்து  வெட்டிக் கொன்ற கொடூரன் இந்த இராமநாதன்? அந்தப் பகல் பொழுதில் நடந்த கொலை பாதகத்தைத் தடுக்க  முயன்ற பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு, உடல் முழுதும் இரத்தக் கறையுடன் தனது பரிவாரங்களைக் கூட்டிக் கொண்டு காரில் பரந்த கொடியவன் அல்லவா? அன்று கண்ட காட்சி இன்னும் மனதை விட்டு அகலவேயில்லை. அய்ந்தாண்டுகள் கடந்தும் நீர்த்துப் போகும் நிலையில் நீதிமன்றத்தில் நிற்கிறது வழக்கு.

இத்தனைக்கும் அந்தக் காதலர்களுக்கும், இந்த இராமநாதனுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, சாட்சிகளைக் களைத்து ஜாதிப் பெருமையை நிலைநாட்டத் துடிக்கும் இவனுக்கா இரத்தம் ஈவது? எந்த மிருகத்திற்கும் இல்லாத குணம். இல்லாத ஜாதிக்காக சகமனித உயிரைப் பறித்த இந்த மனிதனுக்கு நம் இரத்தம் பயன்படுவதா..? கூடாது, கூடவே கூடாது. இங்கிருந்து செல்ல வேண்டும்’ மனம் தீர்ப்பெழுதிக் கொண்டது. ‘இந்தப் பெண் சாராவை எப்படிச் சமாளித்துச் செல்வது?’ சுறுசுறுப்பானது அவனது மூளை.

தாதியர் வருகையை எதிர்நோக்கி நின்றாள் சாரா.

‘அவளிடமே உன் தந்தைக்கு இரத்தம் கொடுக்க  விருப்பமில்லை என்று  சொல்லிவிட வேண்டியது தானே’ மனம் உந்தியது.

அந்நேரம் அறைக்குள் வந்த தாதியர் “மிஸ்டர் கதிரவன் அந்தப் பெட்டில் படுத்துக்கோங்க…” என்றாள்.

தாதியரிடம் மறுத்து
ரைக்க முடியாமல் தயங்கினான். ‘தயக்கம் எந்தவித முன்னேற்றத்தை
யும் கொடுக்காது. ‘ஜாதியின் பெயரால் மனிதர்களை வெட்டிச் சாய்க்கும் ஒருவ
னுக்கு இரத்தம் கொடுக்க முடியாது என்று நேரடி
யாக சொல்லிவிட்டு வெளியேறுடா மடையா..!’  மீண்டும் அவனை இம்சைப்படுத்தியது மனம்.

“என்னங்க யோசிக்கிறீங்க..? ப்ளீஸ் எப்படியாவது எங்க அப்பா உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுங்க…” என்றார் சாரா, கெஞ்சும் சாயலில்.

சாராவை முகம் பார்த்துப் பேச முடியாமல் தாதியரிடம் திரும்பி “ப்ளீஸ் சிஸ்டர், அந்த மனிதருக்கு எனது இரத்தத்தைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. இந்த இராமநாதன் ஒரு ஜாதி வெறி பிடித்தவர். இவர் மீதான ஆணவக் கொலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பது கூட எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு இரத்தம் வழங்குவது என்பது, என் இரத்தத்தை நானே கலங்கப்படுத்துவது போல் ஆகும். அதை நான் விரும்பவில்லை. சாரி சிஸ்டர்…” ஒரே மூச்சாக தாதியரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

என்ன ஏதென விளங்கிக் கொள்ள முடியாமல் குழப்பத்தில் நின்றார் தாதியர். அவனைப் பின்தொடர்ந்த சாரா “தயவுசெய்து நில்லுங்க கதிரவன், எதுவானாலும் பேசிக்கலாம் முதலில் எங்க அப்பாவைக் காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ் நில்லுங்க…” என்று கண்ணீர் மல்கினாள்.

அவள் பேச்சையும், கண்ணீரையும் பொருட்படுத்தாமல் விடுவிடுவென மருத்துவமனையின் கார் நிறுத்த வளாகத்தை வந்தடைந்தான்.

வளாகத்தில் ஒட்டப்பட்டி
ருந்த ‘இரத்த தானம் செய்வீர்!

உயிர் காப்பீர்!!’ என்ற போஸ்டர் கதிரவன் உள்ளத்தை நெருடியது. விளம்பரத்தில் இரத்தம் சொட்டும் காட்சியைப் கண்டபோது, அவனது கண் முன்பு வெட்டுப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக இரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் ஓடிய அந்தப் பெண் நினைவுக்கு வந்தாள்.

நிறுத்தும் இடத்திலிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு  புறப்படுகையில் சட்டைப் பையில் கிடந்த கைப்பேசி ஒலித்தது. அமைச்சர் அழைத்தார்.

எடுத்து “அண்ணே வணக்கம், சொல்லுங்
கண்ணே…” என்றான் பணிவாக,

“பேஸ்புக் பதிவைப் பார்த்ததும் நீங்கதான் முதல் ஆளாக இரத்தம் வழங்க
மருத்துவமனைக்குச் செல்வீர்கள் என்று
யூகித்தேன். ஆனால், இரத்தம் கொடுக்காமல் அங்கிருந்து திரும்புவீங்க என்று நினைக்க
வில்லை கதிரவன்” என்றார் அமைச்சர்.

“அண்ணா, அந்த ஆள் யார் தெரியும்தானே? பட்டப் பகலில் ஓர் இளம் தம்பதியை வெட்டிச் சாய்த்த மிருகமல்லவா? அவனுக்காகவா இரத்தம் கொடுக்கச் சொல்றீங்க?” என்று ஆதங்கப்பட்டான்.

“கதிரவன், நீங்கள் சொல்வது சரிதான். அந்த மனிதன் ஒரு கொலைக் குற்றவாளிதான். ஜாதிக்காக மனித உயிரின் மதிப்புத் தெரியாமல் குற்றம் செய்திருக்கிறார். இப்போது நீங்களும் அதையேதான் செய்கிறீர்கள். நீங்கள் இரத்தம் கொடுக்காததனால் அந்த மனிதன் இறக்க நேர்ந்தால் அதுவும் ஒரு கொலைதானே..? நீங்கள் இரத்தம் மட்டும் கொடுக்கவில்லை, அந்த மனிதருக்கு உயிர் கொடுக்கப் போகிறீர்கள். அதன் வழி வாழ்க்கையில் அவர் திருந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கிறீர்கள். இன்று நீங்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறீர்கள் கதிர்,

“………………………!”

“காவல்துறையில் தனி ஒரு பிரிவை ஏற்படுத்தி சமூகத்தில் ஜாதிப் பிரச்சனை தோன்றும் அறிகுறிகள் தென்பட்டால் அதனை முளையிலேயே தடுப்பது எப்படி என காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நமது முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார். விரைவாக ஆணவக் கொலைகளைத் தடுக்கும் பொருட்டு உங்களைப் போன்ற மனிதநேயம் மிக்க நண்பர்களையும்  இணைத்துக் கொண்டு அரசு செயல்பட இருக்கிறது. நல்ல முடிவை நாம் எப்போதும் சட்டபூர்வமாகத் தானே எட்டவேண்டும்? இப்போதைக்கு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்றார் அமைச்சர்.

அமைச்சரின் பேச்சு ஓரளவுக்கு மனமாற்றத்தைக் கொடுத்தது கதிரவனுக்கு.

“நல்லது அண்ணா…” என்றதுடன் கைப்பேசியை அணைத்து விட்டு. இரத்தம் செலுத்த மருத்துவமனைக்குள் சென்றான். சாரா அவன் முன்பு கண்ணீருடன் கைகூப்பி நின்றாள்.

வைத்தியம் நல்லபடி முடிந்து ஒருசில நாட்களிலேயே உடல் நலம் தேறியது இராமநாதனுக்கு. ஆனால், அவன் மனதில் கவலை குடிகொண்டது இப்போது. மகள் சாரா கடமையே என பணிவிடைகளைச் செய்தாளே தவிர, தந்தையிடம் சரிவர முகங்கொடுத்துப் பேசவில்லை!

“என்னாச்சு சாரா… அப்பாவிடம் பேசப் பிடிக்கலையா?” என்றான் கம்மிய குரலில்.

“ஆமாம், பிடிக்கவில்லை தான். ஜாதி, ஜாதியென்று அடுத்தவர் இரத்தம் குடிக்கும் ஒருவரிடம் என்ன பேசுவது? இன்னைக்கு உங்கள் உயிரைக் காத்து நின்றது யார் தெரியுமா? உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன். இப்போது உங்கள் உடலில் கலந்திருப்பது ஒரு கீழ் ஜாதி இரத்தம். என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த நான்கைந்து நாட்களில் இரத்தம் கிடைக்க வேண்டுமே என்று எத்தனை வேண்டுதல். யார், யாரைக் கேட்டேன் தெரியுமா? எந்த ஜாதிப் பெருமையைக் காப்பாற்ற மற்றவரைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றீர்களோ… அந்த உங்கள் ஜாதிக்காரர்கள் யாருமே உங்களுக்காக இரத்தம் கொடுக்க முன்வரலையே! ஆனா நீங்கள் அதன் மதிப்புத் தெரியாமல் எத்தனையோ பேர் குருதியைக் குடிச்சிருக்கிறீர்கள்! அவர்களின் குடும்பமும் என்னைப் போல் அல்லவா துடித்திருக்கும். நினைத்துப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. சென்ற வாரம்கூட கரூரில் ஒரு கல்லூரி மாணவன் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவனது எட்டு உடல் உறுப்புகளை, எட்டு பேருக்குக் கொடையாக மாணவனின் பெற்றோர் கொடுத்திருக்காங்க, இதில் யார் என்ன ஜாதியின்னு யாருமே பார்க்கல… அறிவியலுக்கே புலப்படாத உங்கள் ஜாதிய ஆணவத்துக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலியிடப்போகிறீர்களோ..! உங்களை என் அப்பா என்று சொல்லவே வெட்கப்படுறேன்” ஆத்திரத்தில் வெகுண்டெழுந்தாள் சாரா.

படுக்கையில் கிடந்த இராமநாதனின் உடல் சிலிர்த்து கை கால் நடுங்கின.

“என்னை மன்னிச்சிடுமா… மன்னிச்சிடு… நான் என்ன தப்புச் செய்திருக்கேன்னு இப்போதாம்மா புரியுது. நான் பெற்ற மகளே என்னை வெறுக்கும் அளவுக்கு நான் மனித மிருகமா இருந்திருக்கேனே… என்னை மன்னிச்சிடு… நான் செய்த தப்பையெல்லாம்  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு  கொடுக்கிற தண்டனையை ஏத்துக்குறேன்மா… நீ’ மட்டும் என்னை வெறுத்திடாதே… எனக்காக இரத்தம் கொடுத்து உயிர் கொடுத்த அந்த மனிதர் யாரம்மா..? அவரிடம் என்னைக் கூட்டிப்போ… நன்றி சொல்லி மன்னிப்பு கேட்டுக்கிறேன் தாயி..!” செய்த வினை உணர்ந்து கண்ணீர் சிந்தினார் ராமநாதன்.

தந்தை மனதின் காயங்களுக்கு மன்னிப்பு என்ற மாமருந்திட்டாள் சாரா. w