
மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர்
ஒரு மனநல மருத்துவனாய் இருக்கின்ற நான் தினம் தினம் ஏராளமான மனநல பிரச்சினைகளுடன் வருபவர்களைப் பார்க்கிறேன் அவர்களுடன் உரையாடுகிறேன். ஒரு தீவிர மனநோயாளிகள் முதல் எளிமையான அன்றாட வாழ்வின் நிமித்தமான மனநலப் பிரச்சினைகளுடன் வருபவர்கள் வரை எல்லோரையும் நான் பார்க்கிறேன். குறிப்பாக அதில் நான் கவனித்த ஒன்று என்னவென்றால், மனநலப் பிரச்சினைகள் எப்போதும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுடன் சேர்ந்தே வருகிறது என்பதுதான். அதாவது மனரீதியாக ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகும்போது வயிறு தொடர்பான சிக்கல்களும் அவர்களுக்கு இருக்கிறது. அதே போல வயிறு தொடர்பான, செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்காக பொது மருத்துவர்களிடம் செல்லும் நிறைய பேருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் இருக்கின்றன. அண்மையில் நான் பார்த்த மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் தனக்குச் சரியாக செரிமானம் ஆவதில்லை; பசி சரியாக எடுப்பதில்லை என அய்ந்து ஆண்டுகள் பல மருத்துவர்களையும் பார்த்துவிட்டு ஏராளமான பரிசோதனைகளையும் செய்து விட்டு எதிலும் சரியாகாமல் என்னிடம் வந்தார். அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு மிக அதிகமான மனப்பதட்டம் இருந்தது. அதைச் சரி செய்த போது வயிறு தொடர்பான அத்தனை பிரச்சினைகளும் சரியாகின. கிட்டதட்ட பல லட்சங்கள் செலவு செய்து எல்லா நவீன பரிசோதனைகளும், ஏராளமான மருந்து மாத்திரைகளும் எடுத்தும் சரியாகாத அவரது செரிமானப் பிரச்சினை இரண்டே இரண்டு வாரங்களில் சரியானது. அவருக்கு அவ்வளவு வியப்பு! “செரிமானத்திலோ அல்லது தீராத வயிற்று அல்சரோ முதலில் பார்க்க வேண்டியது மனநல மருத்துவரைத் தான்’’ என பொது நல மருத்துவரான எனது நண்பரும் கூட இதை அடிக்கடி சொல்வார்.
அண்மையில் ஏராளமான மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளும் கூட இதை தீவிரமாக விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றன. குடலை அதாவது செரிமான மண்டலத்தை இரண்டாவது மூளை (second brain) என மருத்துவ உலகம் இப்போது அழைக்கத் தொடங்கியிருக்கிறது.
செரிமான மண்டலத்துக்கும் அதாவது நமது குடல்களுக்கும் நமது மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு?
370 கி.பியிலேயே ஹிப்போகிரேட்ஸ் அனைத்து மனநலப் பிரச்சினைகளும் குடலில் இருந்தே வருவதாகச் சொல்லியிருக்கிறார். நமது மனதைப் போல நமது செரிமான மண்டலமும் தனித்துவமானது. அதாவது நமது செரிமான மண்டலம் போல இன்னொருவருக்கு இல்லை. இல்லை என்றால் அமைப்பு ரீதியாக எல்லா செரிமான மண்டலங்களும், குடல்களும் மனிதர்களுக்கிடையே வேறுபடுவதில்லை. மூளையைப் போல. மனிதர்களின் மூளைகளைக் கழற்றி ஒரு மேஜையில் வைத்தால் எது யாருடைய மூளை என கண்டுபிடிக்க முடியாது. எல்லாம் ஒன்று போலவே இருக்கும். அப்புறம் நம்மை வேறுபடுத்துவது எது? நமது மனம். மனம் என்னும் மென்பொருள் தான் நம்மைப் பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது, எனது மனம் போல, எனது சிந்தனையைப் போல, எனது உடலசைவுகளைப் போல, எனது உணர்வுகளைப் போல இன்னொருத்தருக்கு நிச்சயம் இல்லை. அது மனதாலே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல குடலமைப்பும் எல்லாருடைய குடல்களும் உருவத்தில் ஒன்று போலவே இருக்கும். வேறுபடுத்துவது எது? அந்தக் குடல்களில் உள்ள நுண்ணுயிரிகளின் தொகுப்பு
(Microbial flora).
அதாவது நமது குடலில் ஏராளமான பாக்டீரியல் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. கிட்டதட்ட 2 மில்லியன் நுண்ணுயிரிகள். பெரும்பாலும் அவை நல்ல நுண்ணுயிரிகள். நமது உணவை உறிஞ்சுவதிலும், சத்துக்களைப் பிரித்தெடுப்பதிலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைப் பெறுவதிலும் இந்த நுண்ணுயிரிகளின் பங்கு முக்கியமானது. இந்த நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பு என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நமது கைரேகையைப் போல நமது குடலில் இருக்கும் இந்த நுண்ணுயிரிகளின் தொகுப்பும் தனித்துவமானது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஒரே உணவு எல்லாருக்கும் பிடித்ததாக இருப்பதில்லை. எனக்குப் பழங்கள் மிகவும் பிடித்தமானது. ஆனால், எனது நண்பன் பழங்களைப் பார்த்தாலே வெறுக்கிறான். எனக்கு தேநீர்ச் சுவை அலாதியானது. ஆனால், சிலர் காஃபிக்கு அடிமையாய்க் கிடக்கிறார்கள். இன்னும் சிலருக்கு பாலைப் பார்த்தாலே அலர்ஜி. ஏன் இந்த வேறுபாடு? காரணம் ஒருவரது நுண்ணுயிரிகளின் தொகுப்பு. சில நுண்ணுயிரிகள் சில உணவுகளைப் பார்க்கும்போது தூண்டப்பட்டு மூளைக்கு அந்தத் தகவலைக் கொடுக்கிறது, மூளையின் உள்ள இன்பத்தின் பகுதி தூண்டப்படுவதால் நமக்கு அந்த உணவு ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கிறது. பிடிக்கவில்லை என்றால் அது மூளைக்குக் கடத்தப்படாது அதனால் நல்லுணர்வு அந்த உணவின் மீது நமக்கு ஏற்படுவதில்லை அதனால் அந்த உணவை நாம் பின்னாளில் தவிர்க்கிறோம். நாம் பிடித்திருப்பதாய்ச் சொல்லக்கூடிய உணவு என்பது உண்மையில் நமக்குப் பிடித்ததல்ல, நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்குப் பிடித்தது.
நமது செரிமான மண்டலம் முழுவதும் உள்ள இந்த நுண்ணுயிரிகள் சில கெட்ட வகைப் பாக்டீரியாக்களிடம் இருந்தும், நச்சுப் பொருட்களில் இருந்தும் நமது குடலைப் பாதுகாக்கிறது. மேலும் பராமரிக்கிறது. மேலும் நமது நரம்பு மண்டலம் மூளையுடன் பிரத்தியேக இணைப்பைக் கொண்டிருப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாகச் செயல்படுவது நரம்பு மண்டலத்திற்கு முக்கியமானது. அந்த ஆரோக்கியம் என்பது இத்தகைய நன்வகை நுண்ணுயிரிகளைச் சார்ந்தே இருக்கிறது. செரட்டோனின் என்னும் நியுரோடிரான்ச்மிட்டர் கிட்டதட்ட 95 சதவிகிதம் நமது குடலில் தான் இருக்கிறது. மூளையில் செய்யும் அதே வேலையைச் செரட்டோனின் நமது குடல் பகுதிகளிலும் செய்கிறது. அதாவது அதன் செயல் திறனை அதிகரிக்கிறது. குடலின் செரிமானத்தை இலகுவாக்குகிறது. இந்த நுண்ணுயிரிகளின் தொகுப்பில் ஏதாவது பாதிப்பு வரும்போது அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் செரட்டோனின் அளவையும் குறைப்பதால் பெரும்பாலான தூக்கம், பாலுறவு, பசி, நல்லுணர்வு போன்ற உயிரியல் செயல்களும் பாதிக்கப்படுகின்றன. அதனால் தான் பெரும்பாலான மனநலப் பிரச்சினைகளின் போது செரிமானப் பிரச்சினைகளும் சேர்ந்தே வருகின்றன.
தயிர், வெண்ணெய், பாலடைகட்டி, பூண்டு, கீரைகள், முட்டைகோஸ் நொதித்தலுக்கு உள்ளான உணவுப் பொருட்கள் குறிப்பாக சீஸ், ஊறுகாய் போன்றவற்றில் இந்த நுண்ணுயிர் தொகுப்பு என்பது ஏராளமானதாக இருக்கிறது. எந்த உணவும் நொதித்தலுக்கு உள்ளாகும் போது அதில் உள்ள ஆரோக்கியமற்ற எளிய சர்க்கரைகள் லாக்டிக் ஆஸிட் போன்ற ஆரோக்கியமானவையாக மாற்றமடைகின்றன. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு என்பது
அதில் உள்ள நன் நுண்ணுயிர்த் தொகுப்பை
யெல்லாம் நீக்கி விட்டு டிரான்ஸ் கொழுப்பை
யும், நிறைவுற்ற கொழுப்பையும், எளிய ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட சர்க்கரையையும் பயன்படுத்துவதால் அது நமது செரிமான மண்டலத்தையும் அதில் உள்ள
பாக்டீரியல் ஃப்ளோரையையும் பாதிக்கின்றன.
அவை பாதிப்படையும் போது நரம்பு மண்டலமும், மனநலமும் சேர்ந்தே பாதிப்படைகின்றன. அண்மைய காலங்களில் மனநலப் பிரச்சினை
களுடன் இருப்பவர்களுக்கு இந்த நல்ல நுண்ணுயிரி
கள் தொகுப்பை மருந்தாகக் கொடுக்கும்போது அது மனநிலையில் முன்னேற்றத்தைக் கொடுப்
பதை அறிந்து கொண்டிருக்கிறோம். Probiotics என்று அழைக்கக்கூடிய மருந்துச் சந்தைகளில் அதிகளவு விற்கத் தொடங்கியிருக்கிறது.
ஆரோக்கியமான உணவுக்கு என்று நாம் கொடுக்கும் அதே கவனம் நமது குடல் பகுதிகளில் உள்ள இந்த ஆரோக்கியமான நுண்ணுயிரிகளின் தொகுப்பைப் பராமரிப்பதிலும்
கொடுக்க வேண்டும். இதில் ஏற்படும் பாதிப்
பானது நமது மனநிலையில், உணர்வுகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது; நமது ஆளுமை
யிலும் கூட சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் நாம் என்பது நமது இந்த பிரத்தியேக நுண்ணுயிர்த் தொகுப்பு தான். w





