இ |
ந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை
யாளர், (Comptroller and Auditor General (CAG) of India) என்னும் பதவி ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைப் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்ப்பதற்கான தனித்த அதிகாரத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட ஓர் அதிகார அமைப்பாகும்.
இதன் தலைவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பபட்டு, அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். ஒன்றிய அரசு சி.ஏ.ஜியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.
அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கை
யாளராகவும் சி.ஏ.ஜி. செயல்படுகிறது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளிலும் வைக்கப்பட்டு பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இந்தியா முழுமைக்கும் 58,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது சி.ஏ.ஜி!
நேர்மையுடனும் , கண்டிப்புடனும் விருப்பு வெறுப்பின்றி அரசின் நிதி ஆதாரங்களை முறையாகத் தணிக்கை செய்யும் சி.ஏ.ஜி.யின் பணி, அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள ஒரு பாதுகாப்பு முறையாகும் .
அண்மையில் இந்த சி.ஏ.ஜி. அமைப்பே, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை
தணிக்கையைச் செய்வதற்கு தனியார் சி.ஏ. (ஆடிட்டர் நிறுவனங்கள்) நிறுவன அமைப்புகளை நியமிப்பதற்காக விண்ணப்பங்
களைக் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொறுப்பில் உள்ளோரும் மக்களின் பணத்தை அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காகச் செலவு செய்கிறார்களா என்பதையும் அதை முறையாகச் செலவு செய்கிறார்களா? என்பதையும் கண்காணித்துக் கண்டுபிடித்து, தவறு நேர்ந்தால் அதன் காரண காரியங்கள் மற்றும் பொறுப்பினை சுட்டிக்காட்டுவதே சி.ஏ.ஜி. ஏற்படுத்தபட்டதன் நோக்கமாகும்.
இதற்கான பணியாளர்கள் இதுவரை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய அமைப்பான ஸ்டாப் செலக்சன் கமிஷன் (SSC), மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆகிய அமைப்புகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனியார் தணிக்கை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணியைத் தருவது சமூக நீதி அழிக்கும் மோசமான செயலாகும்.
தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பு எதுவாயினும், தேர்தல் ஆணையம், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன், சி.பி.அய்., லோக்பால் நீதிமன்றம், மனித உரிமைக் கழகம் போன்ற எந்த தன்னதிகார அமைப்புகளும் தங்களை மீறி எதுவும் செய்து விடாமல் தமக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பது மோடியின் ஆசை. அதைத்தான் நிறைவேற்றுகிறார்கள்.
வினோத்ராய் என்னும் இந்தியத் தலைமை தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரியின் கற்பனையான அறிக்கையை வைத்து கலவரம் செய்து காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை ஒழித்து ஆட்சிக்கு வந்த இந்துத்துவ கும்பல் இன்று அதே சி.ஏ.ஜி. அமைப்பை அதன் மாண்பைச் சிதைக்கிறது.
2014க்குப்பின் சி.ஏ.ஜி.யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கத்தில் வழமையாக அந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி செலவினங்குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முறை கைவிடப்பட்டதிலிருந்து நாம் அறிய முடியும்.
2014இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் சி.ஏ.ஜி. அமைப்பு இயல்பாகவே பதுங்கத் தொடங்கியது.
இந்தியப் பொருளாதாரத்தையே முற்றிலும் முடக்கிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழித்து ஒழித்த “முட்டாள்தனமான” பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பையும், இழப்பையும் பற்றி அறிக்கை சமர்ப்பிக்காத சி.ஏ.ஜி.யை அரசியல் கட்சியினரும் பொருளாதார அறிஞர் பெருமக்களும் கண்டித்தனர்.
ரஃபேல் விமான ஊழல் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை வெகுகாலம் தள்ளிப் போட்ட சி.ஏ.ஜி. அமைப்பு, இறுதியில் பல தகவல்களை மறைத்தே (redacted) நாடாளுமன்றப் பார்வைக்கு வைத்தது.
பணமதிப்பிழப்பு குறித்த அறிக்கையும், ரஃபேல் ஊழல் குறித்த தணிக்கையும் 2019 தேர்தலுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கைகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்துள்ளது.
ஆனாலும் 2013ஆம் ஆண்டு வெளியான சி.ஏ.ஜி. அறிக்கை கீழ்க்கண்ட செய்திகளை உள்ளடக்கியதாக வெளியாகி மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியைத் தந்தது.
- ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ளது.
- துவாரகா விரைவுப் பாதை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு திட்டச்செலவான 18 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாய் செலவழித்தது ஏன் என்பது கணக்குத் தணிக்கைக் குழுவின் கேள்வியாக உள்ளது.
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச் சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
- அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்காகச் செலவழிக்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
- எச்.ஏ.எல். விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய கணக்குத் தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கைப்படி ரூபாய் 7.5 லட்சம் கோடி ஊழலை வெளிப்படுத்தியது சி.ஏ.ஜி. அறிக்கை.
அதன் விளைவு இப்போது கடிக்க பல்லே இல்லாமல் புடுங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய மோடி அரசு.
சி.ஏ.ஜி. என்ற அமைப்பின் – தன்னதிகார அமைப்பின் – கட்டமைப்பையே மாற்றிவிட்டால் தலைவலி தீர்ந்துவிடும் என்று எண்ணியே இப்பொழுது பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைத் தணிக்கை செய்ய தனியார் ஆடிட்டர்களை நியமிக்க மோடி அரசு முன்வந்துள்ளது.
உயர்நிலை மற்றும் இடைநிலை அதிகார மட்டத்தில் லேட்டரல் என்ட்ரியை அறிமுகப்படுத்தி, ஊக்குவிக்கும் மோடி அரசு, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதிலும் லேட்டரல் என்ட்ரியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்தே சி.ஏ.ஜி. அமைப்பையும் சிதைக்க தனியார் ஆடிட்டர் அமைப்புகளை உள்ளே நுழைக்க முயற்சி நடக்கிறது.
குறைபாடுகளைக் கண்டுபிடிப்பதை விட, குறைகளை மறைப்பதிலேயே மூளையைச் செலுத்தும் தனியார் ஆடிட்டர் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களையும், உள்ளாட்சி அமைப்புகளையும் தணிக்கை செய்ய அனுமதித்தால் நேர்மையும், நாணயமும் மறைந்துவிடும், ஊழல் மலிந்து ஆளுவோர் கொள்ளையடிக்க உதவிடும் என்பது கம்ப சூத்திரமன்று, அப்பட்டமான உண்மை.
மேலும் இந்தத் தனியார் தணிக்கை நிறுவனங்கள் பெரும்பகுதி உயர் ஜாதியினர் – குறிப்பாக பார்ப்பனர் – கையிலே இருக்கின்றன. ஆனால், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் சமூக நீதி அடிப்படையில் அனைத்து சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்தோடு இருப்பார்கள்.
எனவே, இவர்கள் இத்தகைய செயலைச் செய்வதன் மூலம் தங்கள் தவறை மறைத்தல், இந்திய தணிக்கைப் பணியில் இருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை விலக்கி வைத்தல், தங்களுக்கான இந்துத்துவ சிந்தனையாளர்கள் மூலம் தணிக்கை செய்து பொதுத்துறை நிறுவனங்களை மிரட்டி வளைத்தல் ஆகிய மூன்று காரியங்களை நடைமுறைப்படுத்தி பயன்களை அனுபவிக்கவே ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முயல்கிறது.
இதனைச் சுட்டிக்காட்டி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். அவருடன் இணைந்து நாம் இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். w