Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம் – 1- த.சீ. இளந்திரையன்

தனி மரம் தோப்பாகாது, ஊரோடு ஒத்து வாழ் எனும் முதுமொழிகள் பெரியார் அகராதிக்குப் பொருந்தாதவை. ஏன்?, காங்கிரசை எதிர்த்து தந்தை பெரியார் தனிமனித இராணுவமாக வெளியேறியபோது, பெரியாரின் சீற்றம் – சீர்திருத்த மொழிகேட்டு, சுயமரியாதைக் கொள்கையைப் பற்றிக்கொண்டவர்கள் எண்ணிக்கையில் அடைக்க முடியாதவர்கள். தனிமனிதர் இயக்கமான வரலாறு தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைக்கே உரியது. கொள்கையே சுயமரியாதை இயக்கமானது, பெரியாரைத் தவிர்த்து உலகில் வேறெங்கும் காணமுடியாதவை. நேற்றல்ல. இன்றைக்கும் அதுதான். நாளைக்கும் எவராலும் எட்டமுடியாத சாதனை!

நம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக ஜாதி – வர்ணாசிரம ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, ஜாதியைப் பாதுகாக்கும் ஹிந்துமத ஸனாதன ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதியையும் பெண்ணடிமையையும் நியாயப்படுத்தும் வேதம், புராணம், இதிகாசம், மனுதர்மம் ஆகியவற்றை ஒழித்து அழிப்பதே தம் வேலை எனச் சூளுரைத்தார்.

அவர்தம் கொள்கை முழக்கங்களை நாடெங்கும் எடுத்துச்செல்ல சுயமரியாதை இயக்க வீரர்கள் ஆற்றிய பங்கு வியக்கத்தக்கவை, உணர்ச்சி மிகுந்தவை. அவர்களின் வீரஞ்செறிந்த பிரச்சாரப் போர்முறைகளை அசைபோடுவதே இனஉரிமை ஊட்டுபவை – இன்பத்தேன் பருகுவது போன்றவை.

வாள் எடுத்துப் போர்தொடுத்து உயிர்ப் பலி கொடுத்து வெற்றிகளைக் குவித்தவர்களல்லர் சுயமரியாதை இயக்க வீரர்கள். நாவால் சொற்போர் நிகழ்த்திப் புரட்சி செய்த மாபெரும் இயக்கத்தினர். ‘குடிஅரசு’, ‘விடுதலை’ நாளிதழும் எழுதி எழுதி பாமர மக்களை விழிப்புறச் செய்து – ஏற்றம் பெறச் செய்து – எழுச்சியூட்டின. இத்தகு வீர உரிமை காவியத்தில் நம் அடிநாள் சுயமரியாதை இயக்க வீரர்கள் சிலரது தொண்டின் சமுதாய தாக்கத்தை அதனால் ஏற்பட்ட மலர்ச்சியை, அவர்கள் கையாண்ட பிரச்சார முறைகளைக் காண்போமாக…

நாகம்மாள் உயிர்வாழ ஆசைப்பட்டது எனக்காக

சுயமரியாதை இயக்க வீரர்களில் அன்னை நாகம்மையாருக்குத் தனி இடமுண்டு. தந்தை பெரியார் அவர்களை அன்னையார் தீர்க்கத்துடன் நின்று மணம் புரிந்துகொண்டதே ஒரு வெற்றிச் சரித்திரம்.

அன்னை நாகம்மையாரின் அணுகுமுறை நாம் கற்க வேண்டிய படிப்பினையாகும். ஏன்? சுயமரியாதைத் திருமணம், கைம்பெண் மணம், ஜாதி மறுப்பு மணம் செய்துகொள்ள முன்வந்தவர்களை அன்னை நாகம்மையார் தமது இல்லத்திலேயே தங்க வைத்து, ஆறுதலாக இருந்து, அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தி, சில நாள்கள் உடனிருந்து ஊக்கமளித்தது உன்னதத் தாயாக வாழ்ந்தவர்.

“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல” என்றும், “எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார்” எனவும் தந்தை பெரியார் விளித்ததிலிருந்தே அன்னை நாகம்மையாரின் தூய தொண்டுள்ளத்தைக் காணலாம்.

அன்னை மணியம்மையார் அவர்களின் தாயுள்ளம்

சுயமரியாதை இயக்கத் தொண்டராக, பெரியாரைக் காத்துநின்ற செவிலித்தாயாக, தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத் தலைவராக இருந்து தொண்டாற்றிய புரட்சித் தாய் நம் மணியம்மையார்!

“அவர் (பெரியார்) தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக்கொண்டு, அவர் ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன்” என்கிறார்.

தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தை வீறுடன் நடத்தி, கொள்கை வெற்றிகளைக் குவித்தவர் அன்னை அவர்கள். உலக வரலாற்றில் சமுதாயப் புரட்சி இயக்கத்துக்கு – அதுவும் நாத்திக இயக்கத்துக்கு பெண் ஒருவர் தலைமையேற்று வழிநடத்தினார் எனும் புதிய வரலாற்றுக்கு உரியவர்!

மதவாதிகள் அறுத்த கூந்தலும் –

அம்மையார் அறுத்த பொட்டுகளும்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தந்தை பெரியார் கொள்கையில் பற்றுக் கொண்டு சுயமரியாதை இயக்க வீரரானார். 1925ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் தந்தை பெரியாரை அழைத்து தேவதாசி ஒழிப்பு மாநாட்டை நடத்தி, அதில் பல தேவதாசிப் பெண்களைத் திரட்டி, கடவுளின் பெயரால் கட்டப்பட்டிருந்த அவர்களின் பொட்டுகளை அறுத்தெறிந்தார்.

தேவதாசிகளாக்கப்பட்டிருந்த பெண்களை விடுவிக்க அயராது உழைத்த இராமாமிர்தம் அம்மையாரின் கூந்தலை அடிப்படைவாதிகள் அறுத்தெறிந்தபோதும், தேவதாசி முறையை ஒழிக்க அஞ்சாமல் உழைத்த அம்மையாரின் பெரும்பணி இன்றைய தலைமுறை அறிய வேண்டிய அரும்பணியாகும்.

தோள் துண்டை எடுக்காதே!

கானாடுகாத்தான் எனும் ஊரில் நடந்த திருமண ஊர்வலம் ஒன்றில் நாதஸ்வர மேதை மதுரை சிவக்கொழுந்து துண்டை தன் தோள் மீது போட்டுக் கொண்டு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவன், “சிவக்கொழுந்து தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டு”மென இறுமாப்புடன் கூற, அங்கிருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி துண்டை இடுப்பில் கட்டவேண்டாம்; துண்டு தோளிலேயே இருக்கட்டும்! என்ன நடந்தாலும் நானிருக்கிறேன்; தோள் துண்டை எடுக்கக்கூடாது என முழங்கிய அழகிரி, சிவக்கொழுந்து அவர்களின் சுயமரியாதையைக் காத்து நின்றார். பின்னர், சிவக்கொழுத்து இசைமழை பொழிய, சிவக்கொழுந்து வாசித்துக் கொண்டே செல்ல, அஞ்சாநெஞ்சன் விசிறியால் வீசிக்கொண்டே சென்றார்.

இந்நிகழ்வுதான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் சுயமரியாதை இயக்க இணைவுக்கான தொடக்கப்புள்ளி என்பது வரலாறு வழங்கும் பாடம்.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடித்த சாமியார்

தந்தை பெரியாரும், கைவல்ய சாமியாரும் திருமணம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த போது, பெரியாரிடம் இருந்த டம்ளரைக் கையில் எடுத்து நீர் ஊற்றிய பார்ப்பனரை, அருகில் இருந்த பார்ப்பனன் “ஏய் மடையா, சூத்திரன் குடித்த டம்ளரைக் கையாள் தொடலாமா” என்று கடிந்து கொண்டிருந்தபோதே, கைவல்யம் சாமியார், “யாரடா சூத்திரன்?” என்று சினம் கொண்டு, சூத்திரன் என்று சொன்ன பார்ப்பான் செவுளைப் பதம்பார்த்தார் கைவல்யம். அதோடு நிற்காமல் அவனை மன்னிப்புக் கேட்கச் செய்த சீரிய சுயமரியாதை வீரர். ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என தமிழர்கள் உணர்ந்த நாள்.

சுயமரியாதை இயக்கத் தூசிப்படைத்   தலைவர்!

இராணுவம் போருக்குச் செல்லும் முன் வழியில் ஏற்படும் தடைகளை அகற்ற இராணுவத்தில் தூசிப்படை என்றொரு படையணி உண்டு.

சுயமரியாதை இயக்கத் தொடக்க நாள்கள் இயக்க கூட்டங்களை நடத்தவிடாமல் பார்ப்பனப் பாதந்தாங்கிகள் ஏற்படுத்திய இன்னல்கள் ஏராளம். எதிரிகளின் – துரோகிகளின் எண்ணத்
தைத் தூளாக்கும் வகையில், தந்தை பெரியார் பங்கேற்கின்ற கூட்டங்கள் நடைபெறும் ஊர்களுக்கு மயிலாடுதுறை (மாயவரம்) சி.நடராசனும் அவரின் படையினரும் முன்னரே சென்று, கயவர்களின் காலித் தனங்களை முறியடித்து, கூட்டத்தை வெற்றியுடன் நடத்தி
முடிப்பர். இயக்கத்தின் தூசிப்படைத் தலைவராக
இருந்து தொண்டாற்றிய மாயவரம் சி. நடராசன் வழிநின்று இயக்கம் காப்போம்.

– சுடர் பரவும்