Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நிபந்தனையற்ற சரணாகதி

1.கே: “தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்குப்பின் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி” என்று அமித்ஷா கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அ.தி.மு.க. விழித்துக்கொள்ளுமா?

– கே. தண்டாயுதபாணி, ஆரணி.

ப: கட்சியை அடமானம் வைத்து, தாங்கள் ரெய்டு மற்றும் சில இக்கட்டுகளில் சிக்கிவிடாமல் இருக்கவே இந்த ‘நிபந்தனையற்ற சரணாகதி’ என்னும்போது, விழித்துக்கொள்ளுமா என்ற கேள்விக்குப் பொருள் இருப்பதாகவே நாம் கருதவில்லை.

 

2.கே: உலகின் 4ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுவது சரியா?

– பெ.வேணி, பூந்தமல்லி.

ப: ‘உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை’ என்ற ஒரு பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது.

 

3.கே: அறநிலையத் துறையே முருகன் மாநாடு நடத்தியபின் ஒவ்வொரு தரப்பும் மாநாடு நடத்துவது சரியா? சட்டம் அனுமதிக்கலாமா?

. கார்த்திகா, குடியாத்தம்.

ப: சட்டத்தைப் பற்றி ஆராயப் புக வேண்டும். அதன் உள்நோக்கம் பச்சை அரசியல், தேர்தல் ஓட்டு வேட்டைதான் என்பதைப் புரிந்துகொள்ளுதல் நல்லது!

 

4.கே: ஆய்வாளர்கள் கருத்தை கமல்ஹாசன் கூறியதற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லி நீதிமன்றமே கூறுவதோடு, கட்டைப் பஞ்சாயத்து போல தீர்வு சொல்வது நீதிமன்றத்திற்கு ஏற்புடையதா?

மா. பாண்டியன், வேளச்சேரி.

ப: கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கி, உயர்நீதிமன்றங்கள் வரை பரவி வரும் தொற்று நோயாகி வருவது வேதனையும் வெட்கமும்பட வேண்டிய ஒன்று!

 

5.கே: அ.தி.மு.க., பா.ம.க. இரு கட்சிகளுக்கும் இச்சூழலில், தமிழ்நாட்டின் நலன் கருதித் தாங்கள் கூற விரும்புவது என்ன?

– செ.நேரு, புதுச்சேரி.

ப: எதுவுமில்லை. நமது நேரம், காலம் மிகவும் முக்கியமல்லவா?

6.கே: வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்று மருத்துவர் அன்புமணி கூறியுள்ளது காழ்ப்பின் வெளிப்பாடா?

– கு. சேகர், தர்மபுரி.

ப: தனது புதிய வடபுலத்து எஜமானர்களைத் திருப்தி செய்து, தன் மீதுள்ள வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நடவடிக்கையே!

 

7.கே: “பி.ஜே.பி. ஆட்சியை ஒழிப்பது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பையே அடியோடு ஒழிக்கும் பணியும் முதன்மை யானது” என்று இராகுல் காந்தி கூறியுள்ளது சரியான நோக்கம்தானே?

– வே. காந்திமதி, சேலம்.

ப: நோய் பற்றிய சரியான கண்டுபிடிப்பு ஆய்வு (Right Diagnosis).

8. கே: இலங்கைத் தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டி அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் வைத்துள்ள கோரிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

– ந.வாஞ்சிநாதன், பல்லாவரம்.

ப: தான் உயிருடன் உள்ளோம் என்று காட்டிக்கொள்ள நடந்த கோமாளி வேடக்குரல்!