Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பழங்குடி இனத்து ஏழை மாணவி அய்.அய்.டியில் இடம்பிடித்து சாதனை!

ாதனை படைத்த ராஜேஷ்வரி: வறுமையிலும் வென்றெடுத்த JEE அட்வான்ஸ்டு வெற்றி!

சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, JEE அட்வான்ஸ்டு 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஷ்வரி. கடுமையான ஏழ்மை நிலையிலும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் 417ஆம் இடத்தைப் பிடித்து, தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ராஜேஷ்வரியின் இந்த வெற்றி, அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, மற்றும் அவரது கனவுகளை அடைய வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது போன்ற உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் எண்ணற்ற மாணவர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டாக உந்துசக்தியாகத் திகழ்கிறார்.

அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதி தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ராஜேஷ்வரி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவரின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் வழிக்கல்வி, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மூலம் இத்தகைய தேர்வில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கிறார் ராஜேஷ்வரி. இது அவர் கடந்து வந்த பாதை பற்றிய கதை.

கருமந்துறையில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்ததாக கூறுகிறார்  “மெயின் தேர்வில் வெற்றி பெற்றால் என்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றால் தான் அய்.அய்.டி. போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களின் ஆசிரியர்கள் கூறினார்கள். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டேன்,” என்றார் ராஜேஷ்வரி.

தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குமிளியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தற்போது திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பெற்று வருகிறார் அவர்.12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் இருக்கும் போது ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்குப் படித்தது கடினமாக இல்லையா என்ற கேள்வியை எழுப்பிய போது, “மாநிலக் கல்வித் திட்டத்தில் உள்ள புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. தமிழ் வழிக் கல்வியில் பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தோம். எனவே, எங்களுக்குத் தேர்வை அணுகுவதில் பிரச்சனை ஏதும் இல்லை,” என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. சென்னையில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் பாட நிபுணர்களைக் கொண்டு ஆன்லைனில் மாணவர்களுக்குத் தேவையான வகுப்புகள் எடுக்கப்பட்டன.

“இருப்பினும், ஜே.இ.இ. அட்வான்ஸ்டு போன்ற தேர்வுகளை எழுத ஆங்கிலம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனத் தோன்றியது. ஆரம்பக் கட்டப் பயிற்சிகளில் நான் தடுமாறினேன்,” என்று கூறுகிறார் அவர்.

பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுக்குப் பிறகு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத்தின் மூலம் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்காகப் பயிற்சி பெற்றார் ராஜேஷ்வரி.

“அய்.அய்.டி. சென்னை அல்லது அய்.அய்.டி. மும்பையில் சேருவேன் என்று நம்புகிறேன். நான் விண்வெளிப் பொறியியல் பாடத்தைப் படிக்க விரும்புகிறேன்,” என்றும் பி.பி.சி.யிடம் தன்னுடைய கனவுகளை விவரித்தார்.

கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையில் ஓர் எளிமையான வீட்டில் வாழ்ந்து வருபவர் கவிதா. அவருடைய கணவர் ஆண்டி புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாகி 2024ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆண்டி – கவிதா தம்பதியினருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

“கல்வி ஒன்றே அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் அனைவரையும் படிக்க வைத்திருப்பதாக,” பி.பி.சி. தமிழிடம் பேசிய கவிதா தெரிவித்தார். காட்டு வேலைக்குச் செல்லும் அவர், தினக்கூலியாக ரூ. 200 முதல் ரூ.350 வரை சம்பாதிக்கிறார்.

ஆண்டி இறந்தவுடன், வீட்டில் இருந்து அம்மா மற்றும் சகோதரிகளைக் கவனித்துக் கொண்டு அப்பாவின் தையல் தொழிலைத் தொடர்ந்து வருகிறார் ராஜேஷ்வரியின் சகோதரர் ஸ்ரீ கணேஷ்.

ராஜேஷ்வரியின் தேர்வு வெற்றி அந்தக் குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் கடின உழைப்பின் மூலம் இத்தகைய வெற்றி சாத்தியமானது என்று தன்னுடைய மகள் பற்றிப் பெருமையாகப் பேசும் கவிதா, அவரது அன்றாட வாழ்வு எப்படி இருந்தது என்பதையும் பகிர்கிறார்.

“காலையில் எழுந்து ரேஷன் அரிசியைச் சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்வேன். எங்கள் அனைவருக்கும் அதுதான் உணவு. மூன்று வேளையும் நாங்கள் அந்தச் சாப்பாட்டைத்தான் பகிர்ந்து சாப்பிடுவோம்,” என்றார்.

“நாங்கள் படிக்கவில்லை. ஆனால், எனது மகள் ராஜேஷ்வரி நன்கு படித்து மேல்படிப்பில் நல்ல கல்லூரியில் சேரப் போவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

ராஜேஷ்வரி மட்டுமின்றி கருமந்துறைப் பள்ளியில் நான்கு மாணவர்கள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் என்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்க உள்ளனர்.

இது தொடர்பாக கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயன் பேசுகையில்,

“ராஜேஷ்வரி நல்ல மதிப்பெண்கள் எடுத்துச் சாதித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் திட்டங்கள் இதற்கு மிக உறுதுணையாக இருந்தன. எங்கள் பள்ளியில் மட்டும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் அய்ந்து பேர் தேர்வு பெற்றனர்.

அட்வான்ஸ்டு தேர்வில் ராஜேஷ்வரி தேர்ச்சி பெற்றது மிகப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

“ராஜேஷ்வரியின் சாதனை பல மாணவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது. இப்போது மலைவாழ் பழங்குடியின மாணவ மாணவியர்களும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்துச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்,” என்று தெரிவிக்கிறார் விஜயன்.

செங்கல்பட்டு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன், “மேற்கல்வி பயிலும் போது தெரிந்து கொள்ள வேண்டிய கூடுதல் தகவல்கள், மேம்படுத்திக் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் மென் திறன்கள், அணுகுமுறை குறித்த பயிற்சி ராஜேஷ்வரிக்கு வழங்கப்பட்டன,” என்று தெரிவித்தார்.

ராஜேஷ்வரி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாழ்த்துகளைப் பதிவு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,

“தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்! அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் அய்.அய்.டிக்கு உண்மையான பெருமையாக அமையும்,” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு அவரின் கல்விக் கட்டணத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்திருந்தாலும் சென்னை அய்.அய்.டி. சில சிறப்புச் சலுகைகளை பழங்குடியின மாணவர்கள், வறிய குடும்பத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் மற்றும் சிறுபான்மைப் பிரிவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

“பட்டியல் பழங்குடியினர், பட்டியல் ஜாதியினருக்குத் தேவையான உதவிகளை வழங்க பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கல்விக் கட்டணம், உணவுக் கட்டணம், இருக்கைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கான அனைத்துக் கட்டணங்களையும் அய்.அய்.டி. மெட்ராஸின் மேனாள் மாணவர்கள் சங்கம் மற்றும் சி.எஸ்.ஆர். கூட்டாளிகள், 2022 – 23 மற்றும் 2023-24 கல்வி ஆண்டில் ஏற்றுக் கொண்டனர்,”  “அதே நேரத்தில், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானமானது எவ்வளவாக இருந்தாலும், பி.டெக். பாடப் பிரிவில் சேரும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணம் (Tuition fees) செலுத்துவதில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும்,” என்றும் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டது அய்.அய்.டி. மெட்ராஸின் செய்தித் தொடர்பு அலுவலகம்.

தங்களின் பொருளாதாரம் மற்றும் கல்விக் கடன் போன்றவற்றை நினைத்து வருத்தமடையாமல் தங்களின் எதிர்காலக் கல்விக் கனவைத் திட்டமிடுவதற்காகவே இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசின் பங்கு என்ன?

பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, “அய்.அய்.டி.
மெட்ராஸில் தான் ராஜேஷ்வரி படிப்பாரா என்று தெரியாது. அவர் அய்.அய்.டி. மும்பையைத் தேர்வு செய்தாலும் கூட, அவர் கல்விக்கான கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை. இதில் தமிழ்நாடு அரசின் பங்கானது, ராஜேஷ்வரி படிப்பை முடித்துவிட்டு கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரை அவருக்குத் தேவையான பரீட்சைக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, அனுமதிக் கட்டணம் என அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசே செய்யும்.

மாணவர்கள் ஏற்கனவே இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் தங்களின் இருப்பைத் தயக்கமின்றி உறுதி செய்ய பயிற்சிகளை நாங்கள் செங்கல்பட்டு பள்ளியில் வழங்கி வருகின்றோம். தற்போது 125 மாணவர்கள் வரை அங்கே இப்பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, அவர்கள் கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பிறகும் அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, இடை நிற்றல் இல்லாமல் கல்வி கற்பதை உறுதி செய்வதும் தமிழ்நாடு அரசின் பொறுப்பாக உள்ளது,” என்றார். w