Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு 363 சமூகநீதிப் போராளி சந்திரஜித் யாதவ் மறைவு!-கி.வீரமணி

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் சமூக நீதி மாநாடு

குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பதவிக்காலம் 2007 – ஜூலை மாதத்தோடு முடிவடையும் நிலையில், அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெயரைக் குறிப்பிட்டு அந்தப் பார்ப்பனர்தான் வர வேண்டும் என்று ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பார்ப்பனச் செய்தியாளர்கள் திட்டமிட்டுப் பரப்பி, பெயர்களை ஆளுங்கட்சி ஆதரவு தரும் இடதுசாரி அமைப்புகள் யோசிப்பதாக கதைகட்டிவிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நிலையில் நாம் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்று நம் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு பிற்படுத்தப்பட்டாரோ அல்லது தாழ்த்தப்பட்டாரோ இம்முறை குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். நாம் வெளியிட்ட அறிக்கையில் 1950 முதல் 2007 வரை குடியரசுத் தலைவர்கள் மொத்தம் 11 பேர் இருந்திருக்கிறார்கள். அதில் தாழ்த்தப்பட்டோருக்கான வாய்ப்பு கே.ஆர்.நாராயணன் அவர்களுக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. பார்ப்பனர்களுக்கு மட்டும் நான்கு முறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. முன்னேறிய சமூகத்திற்கு மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் விளக்கி, இம்முறை தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்டோருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

மும்பையில் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் நூல் அறிமுக விழா

சிறீரங்கத்தில் சீனி.சீராளன் மைதிலி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம். அன்று மாலை திருப்பூர் சென்றபோது அங்கு பெரியார் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கத்தில் திருப்பூர் நகரமன்றத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் உடன் பெரியார் திரைப்படத்தைப் பார்த்தோம்.

சென்னை கலைஞர் அரங்கத்தில்24.5.2007 அன்று அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நல சங்கங்களின் அமைப்பின் சார்பில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினோம். அப்பொழுது நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரிக்கும் பெரியாரின் தீப்பந்தம் நம் கையில் உள்ளது என்றும், இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற அரசியல் சட்டத்தில் 13ஆவது புதிய அட்டவணையை உருவாக்க வேண்டும் என்றும் உரை
யாற்றினோம்.

சந்திரஜித் யாதவ்

மறுநாள் (25.5.2007) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சமூக நீதித் தலைவர் சந்திரஜித் மறைந்தார் என்னும் செய்தி இடி போல் தாக்கியது. உடல் நலக்குறைவு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மகன்(விஜய்) அமெரிக்காவில் இருந்த நிலையில் டெல்லியில் வந்துள்ள அவரது இல்லத்தில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் ஆறுதல் தெரிவித்தோம். டெல்லி பெரியார் மய்யத் தோழர்கள் நேரில் சென்று நம் சார்பில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவர் தேசிய சமூக நீதி இயக்கத்தின் தலைவராகத் திகழ்ந்தவர். இரண்டு முறை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திரா காந்தி அமைச்சரவையில் உருக்குத்துறை அமைச்சராகவும் இருந்தவர். சமூக நீதியின் வெற்றிக்காக நம்மோடு இணைந்து தொடர்ந்து போராடி வந்த சக போராளி. நாம் நடத்திய சமூகநீதி மாநாடுகளில் பங்கேற்று முழக்கமிட்டவர். வடநாட்டில் நாம் எடுத்த முயற்சிகளுக்கு துணை நின்றவர். எனது பாசத்திற்குரிய
உடன்பிறவா சகோதரர்.

மதுரை மாவட்டம் எழுமலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒலி பெருக்கி இல்லாமல் உரையாற்றும் ஆசிரியர் கி.வீரமணி

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக, 27.5.2007 அன்று மாலை சயான் மும்பைத் தமிழ்ச் சங்க அரங்கில், ‘பெரியார் களஞ்சியம்’, ‘பெண்ணுரிமை’ (பாகம் 3, 4, 5) ‘வாழ்வியல் சிந்தனைகள்’ (பாகம் 3), ‘பெரியார் மணியம்மை திருமணம்- ஒரு வரலாற்று உண்மை விளக்கம்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர் பி.வி.ராமச்சந்திரன்

பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை 3ஆம் பாகத்தை சகாய சூசை வெளியிட, ஜெ.பி.ஆர்.கேபிள் நெட்வொர்க் என்.பாக்கியநாதன் பெற்றுக்கொண்டார். 4ஆம் பாகத்தைத் மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் பொ.அப்பாதுரை வெளியிட, சயான் கோலிவாடா மகளிர் மன்ற சின்னபாப்பாவும், 5ஆம் பாகத்தை தொழிலதிபர் ஆக்கார் மணிசங்கர் வெளியிட, பகுஜன் சமாஜ் கட்சி கோ.சந்திரசேகரனும் பெற்றுக்கொண்டனர்.

‘வாழ்வியல் சிந்தனைகள்’ (3ஆம் பாகத்தை) மும்பை புறநகர் தி.மு.க. இணைச் செயலாளர் சு.குமணராசன் பெற்றுக்கொண்டார்.

சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழா (அறந்தாங்கி – 6.6.2007)

‘பெரியார் மணியம்மை திருமணம் ஒரு வரலாற்று உண்மை விளக்கம்’ நூலை மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் சீர்வரிசை சண்முகராசன் வெளியிட, ஆரிய சங்காரன் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக தாராவி பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் கெய்க்வாட் கலந்துகொண்டார். தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் வரவேற்புரையாற்றினார். கவிஞர் மு.தருமராசன், கவிஞர் நெல்லை பைந்தமிழ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். நாம் சிறப்புரையாற்றியபின் தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளர் கருவூர்இரா.பழனிசாமி நன்றி கூறினார்.

சமூகநீதிப் போராளி சந்திரஜித் யாதவ் படத் திறப்பு நிகழ்வு (02.06.2007)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பிச்சாண்டார் கோயில் பி.வி.ஆர் எனப்படும் பி.வி.இராமச்சந்திரன் அவர்கள் 29.5.2002 மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினோம். தென்பகுதி ரயில்வேயில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்றுச் செயல்படும் போர்ப்படை ஒன்று இருந்தது.
எஸ்.ஆர்.எம்.யூ என்ற அமைப்பை ஏற்படுத்தி ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை – சிந்தனைகளைப் பரப்பி வந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடுகளை நடத்தினர். தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டர் களாகத் திகழ்ந்தனர். கழக மாநாடுகளில் நுழைவு நன்கொடைப் பொறுப்பு இவர்களிடம் பலமுறை வழங்கப்பட்டதுண்டு. அந்தப் போர்ப்படைத் தளபதிகளில் முக்கியமானவர் பி.விஇராமச்சந்திரன் ஆவார். கடைசி மூச்சு அடங்கும் வரை பெரியார் கொள்கைக்காரராகவேவாழ்ந்தவர். பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநரான சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் போன்றவர்கள் நம் இயக்கத்திற்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர். அவரது மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

பொறியாளர்
சோ. ஞானசுந்தரம்

உசிலம்பட்டியில் 30.5.2007 அன்று மதுரை பவுன்ராசா அவர்களின் மகன் தமிழ்மணி வாழ்க்கை இணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தோம். பவுன் ராசா அவர்கள் இளைஞராக இருக்கும் போது இயக்கத்தில் ஈடுபட்டு, சிறப்பாகக் கட்டுப்பாடு மேற்கொண்டுப் பணியாற்றி மாவட்ட பொறுப்புக்கு வந்து சிறப்பாக பணியாற்றியவர். அன்று காலை உசிலம்பட்டியில் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு மாலை எழுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினோம். நாம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விஷமம் செய்து வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்தினர். நாம் பொதுமக்களையும் தோழர்களையும் மேடைக்கு அருகில் வருமாறு வேண்டுகோள் விடுத்து சிறிய வெளிச்சத்திலும் பேசினோம். மேலும் 40 நிமிடங்கள் உரையாற்றினோம்.

மஞ்சக்குடி ந.ரவிச்சந்திரன் – சி.வள்ளி மணவிழா

மறந்த சமூக நீதிப்போராளி சந்திரஜித் யாதவ் அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் 2.6.2007 அன்று சிந்தாதிரிப்பேட்டை புதுமங்கல தெரு இந்து பத்திரிகை யூனியன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினோம். அப்பொழுது டெல்லி பெரியார் மய்யம் அமையச் காரணமாக இருந்ததையும் அகில இந்திய அளவில் சமூகநீதிக் களத்தில் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தும் உரையாற்றினோம்.

தஞ்சை பூபதி நினைவு பெரியார் படிப்பகத் திறப்பு விழா

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் மாவட்ட நீதிபதிகள் துணை நீதிபதிகள், மாவட்ட முன்சீப்புகள் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட்டுவரும் நிலையில் திடீரென்று சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பொறுப்புகளைப் பறித்து, அதன் அதிகாரத்தின் கீழ் நியமனங்கள், வினாத்தாள்கள், தேர்வு, நேர்காணல் காலியாகும் பதவிகளை நிரப்புதல் முதலிய எல்லாவற்றையும் கொண்டுவர முயற்சி செய்து, அதற்கேற்ப சட்டத் திட்ட விதிகளை மாற்றுமாறு உயர்நீதிமன்ற பதிவாளர் மூலம் தமிழ்நாடு அரசின் உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பச் செய்தது. இது வரம்பு மீறிய சட்டவிரோத நியாய விரோத ஆணை என்று இதனை கண்டித்து 4.6.2007 அன்று அறிக்கை வெளியிட்டோம்.

அந்த அறிக்கையில் சமூகநீதி சாய்க்கவே இந்த ஏற்பாடுகள் என்றும், முன்பே ஒரு முறை ஒரு பார்ப்பன நீதிபதி(ஜஸ்டிஸ் சீனுவாசன்) சர்வீஸ் கமிஷனில் 69 விழுக்காடு படி இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று மற்ற சக நீதிபதியிடம் வற்புறுத்திட அதற்கு அவர் (அண்மையில் காலமான ஜஸ்டீஸ் எம்.எஸ்.ஜனார்த்தனம்) ஒப்புக் கொள்ளாமல் பிறகு பெரும் விவாதம் கிளம்பி, அதன் பிறகு 69 விழுக்காடு படி அந்த தேர்வு நடைபெற்றது என்ற பழைய சம்பவத்தையும் சுட்டிக்காட்டி, இது பற்றி தமிழ்நாடு முதலமைச்சரும் சட்ட அமைச்சரும் தமது அரசின் கடுமையான ஆட்சேபனையை, மறுப்பை, எதிர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இது அவசர அவசியம் என்று வலியுறுத்தினோம். அவ்வாறு தமிழ்நாடு அரசும் செய்தது.

மு.வி.சோமசுந்தரம் எழுதிய ‘இதழ்களை ஏந்திய மலர்’ நூல் வெளியீட்டு விழா

அறந்தாங்கியில் சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழா, வாழ்வியல் சிந்தனைகள் (3ஆம் பாகம்) வெளியீடு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஆகியவை 6.6.2007 சிறப்பாக நடைபெற்றன. மாவட்டத் தலைவர் கு.கண்ணுசாமி அவர்களுடைய 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு செய்யப்பட்டார். சட்டத்துறை அமைப்பாளர் மதுரை கி. மகேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேரா.சுப. வீரபாண்டியன் ஆகியோரது உரைக்குப்பின் நான் சிறப்புரையாற்றினேன்.

சீரிய பகுத்தறிவாளரும் சிறந்த தொழிலதிபருமான மடிப்பாக்கம் பொறியாளர் சோ.ஞானசுந்தரம் 7.6.2007 அன்று மறைவுற்றார். இவர் திருத்துறைப்பூண்டி  வேதாரண்யம் பகுதியில் உள்ள தலைக்காடு என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்து பொறியியல் பட்ட படிப்பினை படித்து, அரசு பணியில் சேர்ந்து பணியாற்றி, பிறகு அரசுப் பணியில் இருந்து விலகி சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தியவர்.மாநில பகுத்தறிவாளர்கள் கழகத்தின் தலைவராகவும் பொருளாளராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரது மறைவு செய்தி அறிந்து மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம்.

பொறியாளர் சோ.ஞானசுந்தரம் படத் திறப்பு விழா

தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில் கவிகொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் அவரது வாழ்விணையர் தாமரைச்செல்வி அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் 8.6.2007 அன்று மாலை சென்னை தியாகராயர் அரங்கில் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு பாராட்டி உரையாற்றினோம்.. இந்நிகழ்வில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அன்றைய நிதி அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மேனாள் மேயர் சா.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வா.மு.சேதுராமன், டாக்டர் வாசவன், முகம் ஆசிரியர் மாமணி, பாவலர் மறைமலையான் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பாராட்டப்பட்டனர்.

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்கள் கடவுள் மறுப்பாளர்; சுயமரியாதை உணர்வு கொண்டவர்; தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுடைய வழியை‌ப் பின்பற்றி நடைபோட்டு வந்தவர். 1952ஆம் ஆண்டு வாக்கில் ‘விடுதலை’ ஏட்டின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

பட்டுக்கோட்டை வேதா. பெரியார் செல்வன் – சுதா இணையேற்பு விழா

50 ஆண்டு முதிர்ச்சி பெற்றதும் நானூறு சிறப்புத் தகுதி பெற்ற பேராசிரியர்களும் 200 முழு நேரப் பணியாளர்களும் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாடு நிறுவனத்துடன் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம், கல்விப் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இப்பல்கலைக்கழகம் நான்கு உலக தரச் சான்றிதழ்கள் பெற்ற நிறுவனம். நிருவாகிகளில் சிறப்புச் சான்றிதழ் பெற்ற பட்டப்படிப்பு முதல் நிருவாகவியல் வணிகவியல், பன்னாட்டு வர்த்தகம், மக்கள் தொடர்பு சாதனம், உயிரி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் சுற்றுலா மேம்பாடு மற்றும் உபசரிப்பு மேலாண்மை ஆகிய துறைகளில் புகழ்பெற்ற நிறுவனமாகும். இந்த ஒப்பந்தத்தில் பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் என்ற அடிப்படையில் நாம் கையொப்பமிட்டோம்.

பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் கலைஞர் அவர்கள் ஊர்தி சாவியை ஆசிரியரிடம் வழங்குகிறார் (21.06.2007

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மஞ்சக்குடி நடேசன், காமாட்சி ஆகியோரின் மகன் ந.ரவிச்சந்திரன் – சி.வள்ளி (அன்னவாசல் வி.சின்னையன் சி.நாகம்மாள் ஆகியோரின் மகள்) ஆகியோர் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை 13.6.2007 அன்று காலை குடவாசல் ஏ.ஆர்.திருமண மண்டபத்தில் தலைமை ஏற்று நடத்தி வைத்தோம். அன்று மாலை தஞ்சையில் கழக முன்னோடி பொதுநலத் தொண்டர் நா.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தோம். தஞ்சை மாவட்டத் தலைவர் கு.வடுகநாதன் வரவேற்புரையாற்றினார்.

‘உலகத் தலைவர் பெரியார்’ புத்தக வெளியீடு வழங்கப்பட்ட பிரச்சார ஊர்தி

ம.தி.மு.க. எல்.கணேசன் தலைமை ஏற்றார். தந்தை பெரியார் சிலையினை அமைச்சர் கோ.சி.மணி திறந்து வைத்தார். எஸ். எஸ்.பழநிமாணிக்கம் நூலகத்தைத் திறந்து வைத்தார். அண்ணா படத்தை எஸ்.என்.எம்.உபயதுல்லா திறந்து வைக்க, படிப்பகத்தை நாம் திறந்து வைத்து உரையாற்றினோம்.

பெரியார் பெருந்தொண்டர் மு.வி.சோமசுந்தரம் – சோ.வத்சலா ஆகியோரின் 50 ஆம் ஆண்டு மணவிழா, சோமசுந்தரம் அவர்களின் பவள விழா மற்றும் அவர் எழுதிய “இதழ்களை ஏந்திய மலர்” நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஒரே நிகழ்வாக 15.6.2007 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றன. இந்த விழாவில் கல்வியாளர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வே.சிட்டிபாபு, புலவர் சம்பந்தன், மேனாள் எம்.எல்.ஏ. கு.ப.பழனியப்பன் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்றனர். நாம் அவரது புத்தகத்தை வெளியிட்டு சோமசுந்தரம் அவர்கள் குடும்பம் நீதிக் கட்சியைச் சார்ந்த குடும்பம் என்பதைக் குறிப்பிட்டு உரையாற்றினோம்.

பட்டுக்கோட்டையில் மேனாள் ஒன்றிய தலைவர் பழ.வேதாச்சலம் அவர்களின் மகனும் கிங்ஸ் பேப்பர்ஸ் உரிமையாளருமான வேதா. பெரியார் செல்வன் – சுதா ஆகியோர் திருமணத்தை 17.6.2007 அன்று தலைமை ஏற்று நடத்தி வைத்தோம்.

சென்னை பெரியார் திடலில் 19.6.2007 அன்று நடைபெற்ற சோ.ஞானசுந்தரம் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் விழாவில் கலந்துகொண்டு அவரது படத்தினைத் திறந்து வைத்து நினைவு கூர்ந்து உரையாற்றினோம்.

மறுநாள் 20.6.2007 அன்று ஒரத்தநாடு நகர இளைஞரணிச் செயலாளர் தோழர் பு.செந்தில்குமார் – ஜே.வித்யா ஆகியோர் திருமணத்தை ஒரத்தநாடு எல்.ஜி.வி.கே திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தி முடித்துவிட்டு, குளமங்கலம் தோழர் இரா.சாமிநாதன் – கோ.விஜயலட்சுமி ஆகியோர் திருமணத்தினை நடத்தி வைத்தோம்.

திராவிடர் மாணவர் கழகத்தின் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா, உலகத் தலைவர் பெரியார் புத்தக வெளியீட்டு விழா ஆகியவை  21.06.2007 அன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றன. நிகழ்விற்கு கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையேற்றார். கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நடிகர் ‘இனமுரசு’ சத்யராஜ், ஒன்றிய அமைச்சர் ஆ. இராசா, திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஊர்தியின் சாவியை வழங்கினார். உலகத் தலைவர் பெரியார் புத்தகத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வெளியிட, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கழக செயலவைத் தலைவர் ராசகிரி கோ தங்கராசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இறுதியாக உரையாற்றிய கலைஞர் அவர்கள் நெகிழ்ச்சியான பல்வேறு எங்கள் இளம் வயது நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உரையாற்றியதுடன், எமது பவள விழா
நடத்தப்படும் என்றும், அதில் நான் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதுவரை பிறந்தநாள் விழா எதிலும் பங்கேற்காத நாம் அவரது வேண்டுகோளை மறுக்க முடியாமல் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

(நினைவுகள் நீளும்…)