Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கீழடி அகழாய்வு அறிக்கையை டில்லி ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் மர்மம்?-மஞ்சை வசந்தன்

ீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் ஆய்வறிக்கையை ஏற்காது ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதோடு, அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பது உண்மைக்கும் நேர்மைக்கும் எதிரானது.

அறிக்கையின் முடிவுகள் அறிவியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர் தந்த ஆய்வு முடிவுகளை ஏற்பதற்கு முன்பாக நிறைய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளன.

இன்னும் கூடுதல் தகவல்களுடன், ஆதாரங்களுடன், ஆய்வு முடிவுகளுடன் வரட்டும். ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் (வரலாற்றின்) போக்கை மாற்றிவிடாது. பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது சரியானதல்ல. இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எல்லா விதங்களிலும் ஆய்வுகள் முடிவடையட்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு அறிக்கை மீது, இந்தியத் தொல்லியல் துறை சில கேள்விகளைக் கேட்டுத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில் ஒன்றிய அமைச்சரின் இந்தக் கருத்து மேலும் உள்நோக்கத்துடன் கூடிய காழ்ப்பைக் கக்குவதாய் இருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் கண்டனம்

கஜேந்திர சிங் ஷெகாவத்தின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாடு அரசு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக தமிழ்நாடு அரசின் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?” என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்” என்று குறிப்பிட்டார்.

ஆய்வும் பணியிட மாற்றமும்

மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடி என்னும் கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது.

தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் 2014 – 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்று 5800 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.

இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் எதிலும் இவ்வளவு பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்படாத நிலையில், கீழடியில் கண்டறிந்த கட்டடத் தொகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு, அந்த அகழாய்வுப் பணியிலிருந்து அமர்நாத் ராமகிருஷ்ணா உள்நோக்கத்துடன் மாற்றப்பட்டார். ஆய்வு முடிவு வரும்முன், அகழ் ஆய்வுப் பணியிலிருந்து ஒருவர் மாற்றப்படுவது அதுவே முதல் முறை.

மூன்றாம் கட்ட அகழ் ஆய்வுப் பணியில் ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். அவர், கீழடியில் இதற்கு மேல் எதுவும் ஆய்வு செய்வதற்கு இல்லை; எனவே, அகழ் ஆய்வை நிறுத்திவிடலாம் என்று அறிக்கை அனுப்பினார். கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை பெங்களூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்டார்கள். அது தடுத்து நிறுத்தப்பட்டு, மதுரையில் தமிழ்நாடு அரசு பாதுகாத்து வைத்துள்ளது.

அதன் பிறகு கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டது. ஆனால், தமிழ்நாடு அரசு, தம் சொந்த செலவில் பல கட்டங்களாகக் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட 4 மற்றும் 5ஆம் கட்ட அகழாய்வுகளில் மேலும் பல தொல்பொருள்கள் கிடைத்தன.

இந்திய தொல்லியல் துறையின் கேள்விகள்

இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்
பித்தார்.

இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பான கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கீழடியில் நடந்த அகழாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அங்கே மூன்று பண்பாட்டுக் காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இதில் முதலாம் காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும், இரண்டாம் காலகட்டம் கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும், மூன்றாம் காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்துத்தான் சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை எழுப்பியிருந்தது.

  1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
  2. முதலாம் காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏ.எம்.எஸ். காலக் கணிப்பு முறையின் (Accelerator Mass Spectrometry) படி உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. அறிவியல் ரீதியாகக் கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
  4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்குத் தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடம் ஆகியவை தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, தான் சமர்ப்பித்த அறிக்கையே மிகத் தெளிவானது என்றும், கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டியதில்லை என்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணா பதிலளித்ததாகத் தகவல்கள் வெளியாயின.

கீழடி அகழாய்வின்போது முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் ஆய்வுக்கான மாதிரிகளாக 88 கரிமப் பொருட்கள் சேகரிக்கப்
பட்டன. அதில் 23 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. இவற்றில் 18 கரிமப்  பொருட்கள் ஃப்ளோரிடாவில்
உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் (Beta Analytical Laboratary) (Inter University Accelerator Centre ஏ.எம்.எஸ். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருள்கள் புது டெல்லியில் உள்ள) இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இது தவிர, கீழடியில் கிடைத்த மிருக எலும்பின் மாதிரிகள் டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கீழடியில், தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்:

  1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருள்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டுக் காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாம் காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருள்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்தப்பட வேண்டும்.
  2. கீழடியின் இரண்டாம் காலகட்டம் கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கல்லால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்குக் கிடைத்த கட்டடத் தொகுதிகள்தாம். அரிக்கமேடு, காவிரிப்பட்டணம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கும் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை.
  3. கீழடியின் மூன்றாம் காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்வுகளிலும் இங்குக் கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்குக் கிடைத்த ராஜராஜன் காலத்துக் காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாம் காலகட்டம் பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது.
  4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக்
    கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்
    பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைத்திருக்கின்றன.
  5. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டுக் கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. ‘திசன்’ போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக ,இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை.
  6. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரிகத்தின் ஆரம்ப கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும், அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழர் தலைவர் அறிக்கை

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தமிழரின் தொன்மைப் பண்பாட்டுச் சிறப்பைப் பார் அறிய வெளிப்படுத்த விடாமல் கிடப்பில் போட்டதற்கு தனது கடுமையான கண்டனத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘‘தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல் பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்” என்று அவர் அன்று 10.6.2025 செய்தியாளர்கள் மத்தியில்   தமிழ்நாட்டின் இந்நாள், மேனாள் பா.ஜ.க. தலைவர்களை அருகில் வைத்துக் கொண்டு பேட்டி அளித்துள்ளார். இது தான் பா.ஜ.க.வின் உண்மையான மனநிலை!

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளுக்கு  இன்னும் பல அறிவியல் பூர்வமான சான்றுகள்   அவசியம் என்று இந்த விசயத்தில் பேசும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும், இதுவரை ஆதாரப்பூர்வமாக எதையாவது வரலாற்றுப்படி கோரியிருக்கிறார்களா? இராமாயண, மகாபாரதக் கதைகளை நிறுவுவதற்குப் பல இடங்களில் அகழாய்வு செய்கிறோம் என்கிறார்களே, அவ்வப்போது சில கதைகளை ‘அனுமானங்கள்’ என்ற பெயரிலும் வெளியிடுகிறார்களே, உருப்படியான ஆதாரங்கள் எவற்றையாவது தந்திருக்கின்றனரா? ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றனவா? இன்னமும் சரஸ்வதி நதி பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்களே, அதற்கு மாறாகத் தானே இந்தியப் புவியியல் ஆய்வு முடிவுகள் வெளிவருகின்றன? ஆனாலும், சிந்துவெளி நாகரிகத்துக்குச் சரஸ்வதி பெயரைச் சூட்டத் துடியாய்த் துடிக்கிறார்களே, இவற்றுக்கெல்லாம் எள் மூக்கு முனையளவு ஆதாரங்கள் உள்ளன என்று காட்ட முடியுமா?

என்ன ஆதாரம் இல்லை கீழடி ஆய்வில்?

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முன்வைத்து, அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பிவைத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மனமில்லாமல், எப்படியாவது எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் தானே தொடர்ந்து ஒன்றிய அரசிடமிருந்து வெளிப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் “5,350 ஆண்டுகள் பழமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் தமிழர்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?” என்று சரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருள்களிலிருந்து, அதன் காலத்தைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகம் உள்பட பல ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் வந்திருக்கின்றன. வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்கிறார்கள்?

சமஸ்கிருதத்திற்கு இப்படிப்பட்ட

ஆதாரங்களைக் காட்ட முடியுமா?

அக் கரிமப் பொருள்கள் கிடைக்கும் ஆழத்தைக் கணக்கிட்டு, அதையொட்டி கிடைக்கும் பானையோடுகளில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வயதையும் கணக்கிட முடியும். அப்படி கணக்கிட்டால், கடந்த நூற்றாண்டில் அசோகர் பிராமி எழுத்துகள்தாம் மூத்த எழுத்துகளாக இதுவரை இருந்தன. இவை அவற்றுக்கும் முந்தைய தமிழி எழுத்துகள் என்ற உண்மையை ஏற்க வேண்டியிருக்கும். அதனால் தானே ஏற்க மறுக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு இப்படி ஒரு சான்றை அவர்களால் காட்ட முடியவில்லையே! சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்று பல காலமாகப் பேசி வந்த புரட்டுகள் பொய்யென்றாகிவிடுமே! திராவிட மொழியாகிய தமிழ் மொழியின் தொன்மை; அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் என்னாவது என்ற பதற்றம் தானே கீழடி அகழாய்வை முடக்கப் பார்த்தது தொடங்கி, இன்று அந்த ஆய்வு அறிக்கையை ஏற்க முடியாது என்று சொல்லும் வரைக்கும் வந்திருக்கிறது? அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பது தமிழ் – திராவிட வெறுப்பும், ஆரிய ஆணவமும் தானே! ஆனால், தமிழின் பெருமையை நாங்கள் பேசுகிறோம் என்று வெற்றுத் தம்பட்டம் அடிக்கிறது பா.ஜ.க.

இந்தியக் கலாச்சாரத் துறை அமைச்சருக்கு, தொன்மை மிக்க ஒரு மொழியினை, அதன் வரலாற்றினை, அதை நிறுவும் அறிவியல் சான்றினை ஏற்க மனமில்லையே! இதுதானே பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு?

இராம ஜென்மப் பூமிக்கு முறையான

ஆதாரங்கள் காட்டப்பட்டனவா?

இன்னும் போதிய அறிவியல் ஆதாரங்கள் தேவை. எனவேதான் அங்கீகரிக்க முடியவில்லை என்ற ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் அவர்கள் கூற்று, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் முன்கூட்டியே திட்டமிட்ட முடிவுதான். அம் முடிவுக்கேற்ப, ஏதோ ஒரு பொருந்தாத சாக்குப் போக்கு, இது நியாயமானதல்ல!

கீழடியை ஏற்றால், வேதகால நாகரிகம் என்று இவர்கள் சொல்லி வந்த காலத்திற்கும் முந்தையது திராவிட நாகரிகம் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள நேருமே என்ற காரணத்தால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலை நிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்கிறார் ஒன்றிய அமைச்சர்.

அவரையும், அவருக்கு உத்தரவிடும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களையும் கேட்கிறோம்.

பிரச்சினையை ஏற்படுத்திய அயோத்தி இராமன் கோயில் இடம்பற்றி, ஆதாரங்கள் சான்றாவணங்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., மற்ற ஆதரவு அமைப்புகள் வாதங்களை வைத்ததுண்டா?

இராம ஜென்ம பூமி கட்சி அமைப்பாளர், ‘‘இராமன் பிறந்த பூமி என்பது எங்கள் நம்பிக்கை’’  என்று தானே வாதிட்டார்?

ஒத்தக் கருத்துள்ளோர் ஓரணியில் திரளட்டும்!

உச்சநீதிமன்றமும் மற்ற தீர்ப்புகளைப்போல் அல்லாது, அப்போது அளித்த தீர்ப்பில், அது மக்களின் நம்பிக்கை  – கடவுளைக் கேட்டுத் தீர்ப்பு எழுதியதாகக் கூறப்பட்ட விசித்திரம் நடந்ததே! அதை என்ன சொல்ல! பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு, பொருளாதார வளம் பெருகியிருக்க வேண்டிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, ‘இராமர் பாலம்’ என்று இல்லாத சில மணற்பாறைகளைக் காட்டி பிரச்சினை ஆனபோது, நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அதற்குரிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று ஒன்றிய அரசாலும் – ஆர்.எஸ்.எஸ். அரசாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ரூ.2,200 கோடி திட்டம் பயனற்றுப் போனதே!

ஆயிரக்கணக்கானோர்க்குக் கிடைக்கவிருந்த வேலை வாய்ப்புப் பறிக்கப்பட்டதே! தென் மாவட்டங்களின் பொருளாதார வளமும் மண் மூடிப் புதைக்கப்பட்டதே!

இவர்கள் சொன்ன எதற்கும் நிபுணர் ஆய்வுகள், போதிய சான்றுகள் தங்களிடம் இல்லாத நிலையில், ஆதாரப் பூர்வமாக உள்ள கீழடி நாகரிகத்தைக் கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக தமிழர்களின் தொன்மையைப் பலி கொடுக்க வேண்டுமா?

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கொள்கை
களுக்காக, கீழடி அகழாய்வை, தமிழ்நாட்டின் தொன்மையை நிறுவும் பல்வேறு அகழாய்வு
களைப் பலி கொடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளை மறைத்து, இந்திய வரலாற்றினைப் பொய்யான தகவல்கள், அனுமானங்கள், இதிகாசங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு முடிவை அங்கீகரிக்க மறுப்பதையும் ஏற்க முடியாது.

இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டு மக்களும், ஆய்வாளர்களும் ஒன்றுபட்டுத் திரண்டு மக்கள் மன்றத்தின் துணை கொண்டு குரல் கொடுப்பது இன்றியமையாததாகும்.

ஒத்தக் கருத்துள்ளவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து தக்க அழுத்தம் தரும்  வகையில் ஒரு மாபெரும் அறப்போராட்டத் திட்டத்தை அறிவிப்பது அவசரம் – அவசியம்.

இவ் விவகாரத்தில் தமிழர்களின் ஒற்றுமையைக்
காட்டும்வகையில், ஒருமித்த குரல் எழுப்ப வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புகளைச் சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும், காலத்தால் மூத்த தமிழி எழுத்து வடிவத்திற்குக் கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில், 18.6.2025 புதன்கிழமை அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். (2017லும் ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு) ஒத்த கருத்துள்ள அமைப்புகளின் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கனிவுடன் அழைப்பு விடுக்கின்றோம்.ஒன்றிய அரசின் சமஸ்கிருதச் சார்பு நிலைக்கும், தமிழ் காழ்ப்பு நிலைப்பாட்டுக்கும் கடும் கண்டனங்களை எழுப்ப வேண்டும். அனைத்துக் கட்சிகளும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளும் போராட முன்வர வேண்டும்.” என்று தமிழர் தலைவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்

திராவிட மாடல் ஆட்சி நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடுமையான கண்டனத்தை ஒன்றிய அரசுக்கு எதிராய்த் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அறிவிக்க வேண்டும்.

உண்மை உலகிற்குக் காட்டப்படும்!

பா.ஜ.க. அரசு அல்ல, அதன் அடிப்பீடமான ஆர்.எஸ்.எஸ். அல்ல, யார் வந்தாலும் தமிழின் பெருமையை, தொன்மையை, யாராலும் ஒளிக்க முடியாது. கதிரவனைக் கையால் மறைக்கும் முயற்சியே அது.

ஆய்வு அறிக்கை பற்றிய கேள்விகள் இருப்பின் அதை உடனே கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது கேள்வி எழுப்புவதே அவர்களின் உள்நோக்கத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் ஒளிக்கும் முயற்சியையும் காட்டுகிறது. தமிழர் தலைவர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உடனடியாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் தரப்பில் உண்மைக் காரணம் ஏதும் இல்லையென்றால், ஆய்வறிக்கையைக் காலம்  தாழ்த்தாது ஏற்று அறிவிக்க வேண்டும். மாறாக ஆர்.எஸ்.எஸ். ஆசைகளை நிறைவேற்ற தமிழின் – தமிழரின் தொன்மைக்கு எதிரான செயல்களை ஒன்றிய அரசு மேற்கொண்டால் அதன் எதிர்வினையாய் தமிழ்நாடு கிளர்ந்தெழும். அதற்கான போர் முரசம் தமிழர் தலைவரால் ஒலிக்கப்பட்டுவிட்டது என்பதை ஒன்றியத்தில் ஆள்பவர்கள் உணரவேண்டும்.

வரலாறு என்பது உள்ளதை உள்ளபடி கூறுவதாய் இருக்கவேண்டும். மாறாக வெறுப்பு, விருப்பு, உள்நோக்கம், ஒருதலைச் சார்பு என்று சென்றால், உண்மை வரலாற்றை உலகுக்குக் காட்டவேண்டிய கட்டாயம் தமிழர்க்கு வரும்! தமிழர்கள் அதைச் செய்வர்.

ஆட்சியும், அதிகாரமும் நிலையானது அல்ல. ஒன்றிய அரசு அதனை உள்ளத்தில் கொண்டு, உண்மையின் பக்கம் நின்று அதை ஏற்று, உலகறியச் செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும். w