Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நமது எதிரிகளும் தொழிலாளர் ஒற்றுமையும்- த.மு.யாழ் திலீபன்

பாட்டாளி வர்க்கமும் – மக்களாட்சியும்

பார்ப்பனர் ஆதிக்கத்தில் ஜனநாயகமோ  அல்லது மக்களாட்சியோ எப்போதும் நிலை பெறாது என்பதே அம்பேத்கரின் கூற்று. உழைக்கும் தொழிலாளி மக்கள் அதிகாரத்தை வென்றிட வேண்டும் என்பதே முதலாளித்துவத்தை எதிர்த்து முழங்கும் பாட்டாளி மக்களின் மீதான அம்பேத்கரின் பார்வை. “பாட்டாளி மக்களின் விடுதலை உணர்வு புது வகையானது. பாட்டாளி மக்களின் விடுதலை உணர்வு என்பது அடிமைத்தனத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தங்களுக்கு நாடாளுமன்ற முறையில் தேர்தலில் வாய்ப்புக் கிடைப்பது பற்றி மட்டுமல்ல, பாட்டாளி மக்கள் விரும்பும் விடுதலை என்பது புரட்சிகரமானது. இது மக்களாட்சித் தத்துவத்தின் மீது அமைந்துள்ளது. மக்களாட்சி என்பது நாடாளுமன்ற ஜனநாயகம் அல்ல. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது அரசின் ஒரு முறை. இந்த முறையில் மக்கள் வாக்களித்துத் தங்களை ஆளும் முதலாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள். இந்த முறை பாட்டாளி மக்களுக்கு ஏற்புடையது அல்ல.

மக்களாட்சி என்பது பெயரளவில் மட்டுமில்லாமல் செயல் முறையில் இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமையை உருவாக்கித் தருவதாக இருக்க வேண்டும். மக்கள் அவர்கள் தளத்தில் விரும்பும் வகையில் தேவையின் அடிப்படையில் அவர்களுக்கானதை முழுவதுமாக நிறைவேற்றித் தருவதே பாட்டாளி மக்கள் எதிர்நோக்கும் மக்களாட்சியாக இருக்கும்” என்று உரைக்கிறார். இதன் நிலை   பார்ப்பன ஆதிக்கம் நீங்கி, முதலாளித்துவம் தொழிலாளர்களை நசுக்கும் நிலை மாறி, ஜனநாயகம் எனும் அரசியல் தீர்வு பாட்டாளி மக்கள் விடுதலைக்குச் சாத்தியப்படுமேயானால் அதுவே  ஜனநாயகம் என்றுரைக்கிறார் அம்பேத்கர். ஆனால், இன்றைய தொழிலாளர்களின் நிலை என்பது பொறியில் அகப்பட்ட  எலி போலப் பார்ப்பனியத்திடமும் முதலாளித்துவத்திடமும் அகப்பட்டுத் தம் உரிமைகளையும், ஒற்றுமையையும் இழந்து வருகிறது. முதலாளித்துவத்தின் கைகளிலும் பார்ப்பன ஆதிக்கத்தின் கைகளிலும் ஆட்சி இருப்பதை விட, பாட்டாளி மக்களே மக்களாட்சியை மிகச் சரியாகக் கையாளுவார்கள் என்பதில் அம்பேத்கர் நம்பிக்கையோடு இருக்கிறார்.

ஜாதி எனும் முட்டுக்கட்டை

அம்பேத்கர் ஜாதிய படிநிலை தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் எந்த வகையில் இந்திய சமூகத்தில் இடையூறாக உள்ளது என்பதை அம்பேத்கர் மிகத் தெளிவாக விளக்குகிறார். “ஜாதிய படிநிலையானது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றது. அது உழைப்பையும், மூலதனப் பெயர்வையும் தடுத்து விடுகின்றது. உற்பத்திக்கான தளத்தில் இந்த இடப்பெயர்வானது திறமையின்மை என்கின்ற கருத்துகளை நிறுவக் காரணமாக அமைகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையை அடைகிறது. சமூக மற்றும் தனிநபரின் திறன்களைப் பயன்படுத்தி ஒருவர் தமக்கு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வழிவகை செய்தல் வேண்டும். ஆனால், இந்த மனுதர்மக் கொள்கை ஜாதிய அமைப்பு முறையில் இவ்வழிவகை மீறப்படுகிறது. ஒருவரின் பிறப்பு அடிப்படையில் மரபு ரீதியான தொழிலில் மட்டும் ஒருவரைத் திணிக்கின்றது. பெற்றோரின் சமூகத் தகுதியின் அடிப்படையில் தொழில்முறை தீர்மானிக்கப்பட்டு விடுகிறது”. இவ்வகைத் தீர்மானங்கள் தான் ஜாதியை இறுகப் பற்றிக் கொள்வதற்கும், ஜாதியின் பெயரால் பெரும்பான்மை மக்கள் உழைத்துப் போடுவதற்கும், ஆதிக்கம் செலுத்தி அதன் மூலம் பயன் பெறுகிற மேல்ஜாதி சிறுபான்மையின மக்கள் மேலும் மேலும் தங்களின் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள முதலாளித்துவம் என்கின்ற பொறுப்பைக் கொடுத்திருக்கிறது பார்ப்பனியம்.

இதனால் கீழ்நிலை மக்கள் எப்போதும்  தொழிலாளர் நிலையிலிருந்தும், பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்கக் கூட அவர்களுக்கான உரிமை இல்லாத நிலையைத் திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ளது ஜாதி அமைப்பு முறை. இன்னார்க்கு இது தான் என்பதை வரையறுத்து வைத்ததன் மூலம் தொழிலாளர்கள் அதைத் தாண்டி யோசிப்பதே இல்லை. இந்த யோசனை எப்போதும் இவர்களுக்கு எட்டி விடக் கூடாது என்பதற்காகத்தான் பார்ப்பனியத்தால் படைக்கப்பட்ட கடவுள், ஜாதி, மதம், புராணம், இதிகாசம், போன்ற வேத நூல்கள் எல்லாம் என்பதைத் தொழிலாளர்கள் உணர்தல் வேண்டும்.

அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை என்பது பார்ப்பனியம், முதலாளித்துவம், அரசு சார்ந்தது மட்டுமல்ல. சமூக ரீதியில் மக்கள் பிரச்சனையை மய்யமாகக் கொண்ட ஆழமான சிந்தனையே அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை. அம்பேத்கரின் இத்தகைய சிந்தனைதான் தொழிலாளர்களின் உண்மை நிலையறிந்து ஒன்றுபடக்கூடிய செயல் திட்டமாக அமையும். மாற்றாக அரசியல், ஜாதி சார்ந்த சிந்தனை மட்டும் இருந்து, சமூகத்தின் மீதான பார்வை இல்லாமல் போவதும், சமூகத்தின் மீதான பார்வை இருந்து, பார்ப்பனிய, முதலாளித்துவம் ஆகியவற்றின் மீதான எதிர்த் தாக்குதல் இல்லாமல் போவதும் நமக்கு யார் எதிரி என்பதை நிலைநிறுத்தாமல் செல்வதற்கான வீண் செயலாகவே அமையும். மார்க்ஸ் கூறியவாறு, “மக்களுக்கான அரசை வர்க்கப் போராட்டத்தின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும்”. என்பதை உறுதியுடன் ஒப்புக்கொண்டாலும், புரட்சிகர மாற்றம் என்பது அரசு எனும் அமைப்பில் நிகழ்கிறபோதுதான் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளும் தொழிலாளர் ஒற்றுமையும் நடைமுறையில் சாத்தியமாகும் என்பதே உண்மை. அதற்கு நம்மிடையே பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் மீதான புரிதல் அவசியம், நம்மிடம்  ஒற்றுமையே அதிமுக்கியத்  தேவையாக இருக்கும்.

தொழிலாளர் தம் வறுமையிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் ஜாதி எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்திய அம்பேத்கர் அவர்கள், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மதம் மற்றும் ஜாதி அமைப்பு முறையை நாம் கண்டு கொள்வதில்லை என்பதையும் அறிவுறுத்துகிறார். பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி நம் கண் எதிரே நடப்பதால் அவற்றின் மூலங்களை நாம் கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை. ஆனால், இந்து மதத்தின் ஜாதியப் படிநிலையே நிலமுள்ளவன், நிலமற்றவன் இத்தொழிலை இவன் செய்ய வேண்டும்-இத்தொழிலை இன்னொருவன் தான் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது. இதன் மூலமே சமூகக் கட்டமைப்பில் அவரவர் ஜாதிக் குழுக்களை அந்தஸ்துடன் நடத்துவதும், பிறரை  இழிநிலையில் நடத்துவதும் என்ற சுயமரியாதையற்ற தன்மை வளர்ச்சி பெறுகிறது. இந்த எண்ணமே அவனிடம் பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கிறது.  பொருளாதார முன்னேற்றம் அடையாத ஏழை, தொழிலாளர், கீழ்நிலை சமூகத்தினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் மேலெழும்ப முடிவதில்லை. ஆனால், ஜாதியினால் உயர்ந்தவன் என்ற பொய்ம்மையின் மூலமே அவனுக்கு அனைத்து வாய்ப்பும் கிடைக்கப்படுகிறது. அவ்வாய்ப்பினால் பொருளாதார வளர்ச்சியில் இருப்பவன் மேலும் வளர்ச்சி பெறுகிறான் என்பதை நம்மால் உணர முடியும். இவ்வமைப்பு முறையைக் கருத்தில் கொள்ளாமல் மறுப்பதும், அல்லது ஒன்று திரளாமல் இருப்பதும் அவரவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

(தொடரும்)