‘குடிஅரசின்’ இக்கொள்கை கொண்ட உழைப்பானது மற்ற பெரும்பான்மையான பத்திரிகைகளின் உழைப்பைப் போல் பத்திராதிபரின் வாழ்வுக்கும், ஜீவனத்திற்கும் மாத்திரம் அனுகூலமாக்கிக் கொண்டு நாட்டைப் பாழ்படுத்திக்கொண்டோ அல்லது ஒரு பயனும் இல்லாமல் மக்களை மூட பக்தியிலும், குருட்டு நம்பிக்கையிலும் அழுத்திக் கொண்டோ அல்லது சோம்பேறி வேதாந்தம் கற்பித்துக்கொண்டோ அல்லது அர்த்தமற்ற சுயராஜ்யப் பேச்சோ, தேசியப் பேச்சோ பேசிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டோ இருந்துவராமல் மக்களுக்குள் ஒரு வித உணர்ச்சியையும் எழுச்சியையும் கொடுத்து அறிவை விளக்கி வந்திருக்கின்றது என்பதை பல நண்பர்கள் நமக்கு எடுத்துக் காட்டி இருப்பதையே நாம் இங்கு இது சமயம் சுட்டிக் காட்டுகின்றோம்.
‘குடிஅரசினால்’ தேசிய வாழ்வுக்காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும், புராணபிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக்கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம். ஆனாலும் அக்கூட்டத்தையும் அவர்களது கூச்சலையும் ஒரு கடுகளவும் லட்சியம் செய்யாமல் நாம் முனைந்து நிற்பதால் அவர்களால் நேரிடும் இடையூறுகள் யாவும் தூள் தூளாய் சின்னாபின்னப்பட்டு காற்றில் பறப்பதும் வாசகர்கள் நித்தமும் உணர்ந்ததேயாதலால் அதை பற்றி நாம் அதிகம் எழுத வரவில்லை.
உதாரணமாக, மோட்டார் வண்டிகள் தெருக்களில் வேகமாகச் செல்லும்போது தெருப்பொறுக்கும் சுணங்கன்கள் அவ்வண்டியின் நிலையறியாது அதை வழிமறித்து தடுத்து கடித்தெறிந்து விடலாம் என்கின்ற ஆவலுடன் குரைத்துக் கொண்டு சிறிது தூரம் வண்டியைத் தொடர்ந்து ஓடி காலும் வாயும் வலித்த உடன் எப்படி முணுமுணுத்துக்கொண்டு திரும்பிப்போய் விடுகின்றனவோ அது போல் ‘குடிஅரசின்’ வேகத்தினிடம் அநேகப் பத்திரிகைகளும் தனி நபர்களும் வெகு ஆத்திரமாக அதைத் தடுத்து நிறுத்தி விடுவதுபோல் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்துவிட்டுஅடங்கிப் போனவைகளும், சில மறைமுகமாய் விஷமம் செய்து கொண்டிருப்பதும் சில மானம் வெட்கமில்லாமல் நின்ற நிலையில் இருந்தே குரைத்துக்கொண்டிருப்பதுமான நிலையை தினமும் உணருகின்றவர்களுக்கு குடிஅரசின் வேகத்தைப் பற்றியோ தத்துவத்தைப் பற்றியோ அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைப் பற்றியோ அறிவிக்க வேண்டியதில்லை.
நிற்க, தமிழ்நாட்டின் நிலைமைகளும் வயிற்றுப் பிழைப்புத் தேசிய வாழ்வுக் காரர்களின் யோக்கியதைகளும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேறுபாடுகளும் வெளிமாகாணத்தாருக்கும், வெளி தேசத்தாருக்கும் தெரியப்படுத்த சுமார் 10,12 வருஷங்களாக பார்ப்பனரல்லாதார் இயக்கமும் ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகளும் எவ்வளவோ பாடுபட்டும் பார்ப்பனருடையவும் அவர்களது கூலிகளுடையவும் பலவித சூழ்ச்சிகளால் அதன்குரல் வெளியில் போகாமல் தடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்த விஷயமாகும். அவ்விதத் தடைகளை எல்லாம் தாண்டி இப்பொழுது வெளி மாகாணங்களுக்கும் மேல் நாடுகளுக்கும் கூட அவைகள் எட்டி இருப்பதற்கு நம்நாட்டு தேசியப் புரட்டும் பார்ப்பன சூழ்ச்சியும் பாமரர்கள் யாவரும் அறிந்திருப்பதற்கும் குடிஅரசின் தொண்டு ஒரு சிறிதாவது காரணமென்று சொல்வது மிகையாகாது.
* * *
இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப்பிரச்சாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும் தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே உறுதி கூறலாம்.
அன்றியும் ‘குடிஅரசை’யும் அதன் கொள்கை களையும் எதிர்ப்பதாகவோ வெளியில் எதிர்த்து பிரச்சாரம் செய்வதாகவோ வெளியில் வந்த யாரும் இதுவரை ‘குடிஅரசில்’ கண்ட விஷயங்களில் எதற்காகவாவது ஒன்றுக்கு யோக்கியமான சமாதானம் சொல்லவும் முன்வரவில்லை என்பதினாலும் உணரலாம்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 29.04.1928