இனமானம் காத்திடவே எந்நாளும் கலைஞர் காப்பு!
சுணங்காரே துயருற்றும் துவளாத இரும்பின் மூப்பு!
உணர்வெல்லாம் மானமதை
உயிர்மேலாய்க் கொண்ட நோக்கு!
தமிழினத்தின் இனமானக் காவல்! – கலைஞர்
தமிழருக்காய்ப் பணிசெய்த ஏவல்!
கட்டைவிரல் வெட்டிநம்மின் கழுத்தறுத்த கயமை கண்டு
முட்டவரும் காளையென முரசொலித்தார் வலிமை கொண்டு!
பட்டதுயர் ஏற்றுநின்று பார்ப்பனீயப் பகையை வென்று
நீக்கிவஞ்சம் இதமளித்த தொண்டு! – கலைஞர்
நிமிரவைத்தார் முதுகுவடத் தண்டு!
பல்லாயி ரமாண்டாய்ப் படிக்காமல் தாழ்மை யுற்றோம்!
பள்ளிதனில் இலவசமாய்ப் படிக்கவைத்தார் மேன்மை யுற்றோம்!
அள்ளியள்ளி இடமொதுக்கி அளித்தாரே வேலை பெற்றோம்!
சூத்திரரின் இழிவுநீக்க வந்தார்! – கலைஞர்
சூரியனாய் இருளகற்றித் தந்தார்!
அண்ணாவின் அடியொற்றி அய்யாவைச் சிந்தை பூட்டிக்
கண்ணாகக் காத்துவந்தார் கழகத்தை வலிமை கூட்டி!
மண்ணாளும் முதல்வரென்றே மாநிலத்தின் உரிமை நாட்டித்
திராவிடத்தை ஆயுதமாய்க் கொண்டார்! – கலைஞர்
திண்ணமுடன் ஆரியத்தை வென்றார்!
தமிழ்காக்கத் தன்தலையைத் தந்திடவும் துணிந்தவர் தான்!
தமிழ்தன்னைச் செம்மொழியாய்த் தகுதிஒப்பம் பெற்றவர் தான்!
தமிழ்த்தாயைப் போற்றுதற்குத் தமிழ்வாழ்த்தைத் தந்தவர் தான்!
மூச்சாகும் தமிழவர்க்கு வாழ! – கலைஞர்
முன்னெடுத்தார் தமிழ்கொண்டு ஆள!
கலைத்தாயின் தலைமகனாய்க் கலைஞரெனும் பட்டம் கொண்டார்!
பழமைதன்னை மாற்றிடவே பகுத்தறிவை ஊட்டி வென்றார்!
நிலைபுகழை எழுத்தளிக்க நீள்பேச்சால் பகை முடித்தார்!
கூர்வாளாய்ப் பளபளக்கும் எழுத்து! – கலைஞர்
கூர்த்தமதிச் சுரப்பெடுத்து நிறைத்து!
தொய்வில்லா உறுதியினை சொல்லேற்றும் வித்தை கற்றார்!
பெய்கின்ற மழையெனவே பேசுகின்ற திறமை பெற்றார்!
எய்கின்ற அம்பாக எழுதுகின்ற வன்மை யுற்றார்!
காதெல்லாம் இனித்திடுமே கேட்க! – கலைஞர்
கரகரத்த குரலினிமை தாக்க!
சாதிக்கொரு தெருவுண்டு தாண்டவிடாச் சுவரு முண்டு!
சாதியினைப் புறம்வைத்தார் சமத்துவ புரத்தைக் கொண்டு!
போதிமரக் கலைஞர்கண்டு பொசுங்கியதே சாதி நண்டு!
சாதிவெறி சாய்க்கவந்த பெரியார்! – கலைஞர்
சமூகநீதி காத்துநின்றார் நெறியாய்!
வள்ளுவர்க்குக் குமரியிலே வானுயர்ந்த சிலை யமைத்தார்!
தெள்ளுதமிழ்க் குறளார்க்குச் சென்னையிலே கோட்டம் கண்டார்!
எல்லையெனத் தென்வடலாய் வள்ளுவரை இருத்தி வைத்தார்!
வள்ளுவரை அய்யனென விளித்தார்! – கலைஞர்
வள்ளுவத்தை அய்யமற விரித்தார்!
பெண்களுமே சொத்தினையே பெறுமுரிமை தந்து வந்தார்!
நன்முறையாய்க் கருவறையில் நம்மவரை நுழைய வைக்கத்
தன்மானத் தலைமகனாய்த் தக்கவொரு சட்டம் தந்தார்!
சனாதனத்தின் தோலுரித்த சாட்டை! – பெண்கள்
சமஉரிமை காத்துநின்ற கோட்டை!
அவசரநி லையெதிர்த்தே ஆட்சியினைப் பறிகொ டுத்தார்!
தவறென இடித்துரைத்தார்! தாழாத தலையு டைத்தார்!
கவலையுற்று வாடாமல் கடமையெனத் தொடர்ந்தெ திர்த்தார்!
கொண்டிருக்கும் கொள்கையது வேட்டி! – பதவி
துண்டெனவே தோளிருக்கும் மாட்டி!
தரணியவர் பேருரைக்கும் தமிழிருக்கும் நாள்வ ரைக்கும்!
திராவிடத்தின் சரித்திரமும் திரண்டுவந்து சீரு ரைக்கும்!
மறமுடைத்த தொண்டனைத்தும் மானிடமும் நினைத் திருக்கும்!
வாழ்வளித்தார் வந்தெமக்குக் கிழக்காய்! – கலைஞர்
வாழ்ந்திருப்பார் தமிழருள இருப்பாய்! w