எங்கள் குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் முடிவின்படி செய்யப்பட்ட ஏழு திருமண வாழ்க்கை மணமுறிவில் முடிந்துள்ளது. என்ன காரணம்?
கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. சொந்த அனுபவத்திலிருந்தே சிலவற்றைக் கூறியுள்ளேன். பொதுவாக நடப்பில் உள்ள முறையைப் பின்பற்றியே அந்த ஏழு திருமணங்களும் நடந்தன.
முதல் தகுதியாக ஜாதிப் பொருத்தம் பார்த்தனர். ஆணும், பெண்ணும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து அதன்படியே சொந்த ஜாதியிலே திருமணம் முடித்தனர்.
இரண்டாவது தகுதியாக ஜோதிடப் பொருத்தம் பார்த்தனர். இரண்டு மூன்று ஜோதிடர்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்கள் பொருத்தம் சரியாக இருக்கிறது என்று கூறிய பின்னரே திருமணம் செய்யப்பட்டது.
மூன்றாவதாக பொருளாதாரப் பொருத்தம். எவ்வளவு நிலம் உள்ளது; எவ்வளவு நகையுள்ளது; வீடு வசதியாக பெரிதாகவுள்ளதா? என்று எடை போடப்பட்டது. தகுதியான இடம் என்று முடிவு செய்யப்பட்டு திருமணங்கள் நடத்தப்பட்டன.
திருமணம் செய்து கொள்ளப்போகின்றவர்
களின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோரும், உறவினர்களுமே கலந்து பேசி, திருமணத்தை முடித்தனர்.
எனது நெருங்கிய உறவினர்களுக்குள் நடத்தப்பட்ட திருமணங்களில் ஏழு தம்பதியர் சில காலம் வாழ்ந்து, ஒத்துவராமல். மனம் வெறுத்து விலகி வாழ முடிவெடுத்து, மணிமுறிவு பெற்றுள்ளனர்.
காரணம் என்ன என்று ஆழச் சிந்தித்தபோது, பார்க்கவேண்டிய முக்கியமான பொருத்தத்தைப் பார்க்காது, பார்க்கத் தேவையில்லாத பொருத்தங்களைப் பார்த்ததுதான்.
திருமணம் செய்து கொண்டு வாழப் போகின்ற ஆண், பெண் இருவருடைய விருப்பம், நோக்கம், வாழ்க்கை முறை இவற்றைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் ஏற்ப முடிவு செய்து திருமணத்தை நடத்தியதுதான் மணமுறிவுக்கு முதன்மையான காரணம்.
பெற்றோர் கட்டாயப்படுத்துவதால் மறுத்துப் பேசமுடியாமல் விருப்பம் இல்லாமல் போனாலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஓரிரு மாதங்கள் செல்லச் செல்ல, இருவருக்கும் இடையே முரண், கருத்துமோதல், விருப்ப வேறுபாடு, இலக்கு வேறுபாடு என்று பல வரவே, வெறுப்பு, சலிப்பு, விலகிவிடலாம் என்ற முடிவின் விளைவு மணமுறிவு.
ஜாதிப் பொருத்தம், ஜோதிடப் பொருத்தமும் பார்த்தவர்கள், இருவருக்கும் மணப் பொருத்தம், உடல் பொருத்தம், விருப்பம் பொருத்தம், கொள்கைப் பொருத்தம் உள்ளதா என்று அறிந்து, புரிந்து திருமணத்தை நடத்தவில்லை.
சொந்த ஜாதியில் இருப்பதால் மணப் பொருத்தம் எப்படி வரும்? அவர்களுக்கு விருப்பமானவர் வேறு ஜாதியில் இருப்பதை அறியாமல், ஜாதியை மட்டும் அடிப்படையாக வைத்துத் திருமணம் நடத்தியதால், விருப்பம் இன்றி வாழ்க்கை அமையும் போது அது மணமுறிவுக்கு இட்டுச் சென்றது.
அடுத்து ஜோதிடப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதுதான் பலர் வாழ்வில் சிக்கலை உண்டாக்குகிறது. கிரகங்கள் பொருந்திவிட்டாலும், இவர்களுக்குள் பொருத்தம் இல்லாமல் வாழ்வு எப்படி இணக்கமாய் அமையும்?
ஜோதிடம் என்பது ஒரு மூடநம்பிக்கை. அது உண்மைக்கும், அறிவியலுக்கும் எதிரானது. ஒன்பது கிரகங்கள் என்பதே தப்பு. சூரியன் கிரகமே அல்ல. அது நட்சத்திரம். பூமி ஒரு கிரகம். ஆனால், அந்தப் பூமியை ஒன்பது கிரகத்திற்குள் சேர்க்கவே இல்லை. மாறாக, இல்லாத கிரகங்களான இராகு, கேது இவற்றைக் கிரகமாகக் கருதி ஜோதிடம் பார்க்கிறார்கள். நிலையாக இருக்கும் சூரியன் ஒவ்வொரு இடமாகப் பெயர்ந்து செல்கிறது என்று ஜோதிடம் கருதுகிறது. பொய்யான கருத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் ஜோதிடம் எப்படிச் சரியாகும்?
மனிதன் பூமியில் வாழ்கிறான். கிரகங்கள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளன. அந்தக் கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படித் தீர்மானிக்க முடியும்?
ஜோதிட நம்பிக்கையென்பது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. கடவுள் வகுத்த வழியின்படி வாழ்க்கை அமைகிறது என்று கடவுள் தத்துவம் கூறுகிறது. ஆனால், கிரகங்களின் அமைப்புப்படியே வாழ்க்கை என்று ஜோதிடம் சொல்கிறது. இது கடவுளை மறுப்பதாகாதா? அப்படியென்றால், கடவுளை நம்புகின்றவன, ஜாதியை நம்புகிறவன் ஜோதிடத்தை நம்பலாமா? கடவுள் நம்பிக்கைக்கே எதிரான ஜோதிட நம்பிக்கையை வைத்துப் பொருத்தம் பார்த்து இளம் தம்பதியின் வாழ்வைச் சீரழிக்கலாமா?
ஜோதிடக்காரன் கூறியது போல யாருக்காவது வாழ்க்கை அமைந்திருக்கிறதா? ஜோதிடத்தில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்று கூறப்பட்டவர், 40 வயதிலே இறந்து போகிறார். மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று ஜோதிடர் சொன்னவர் வாழ்க்கை மணமுறிவில் முடிகிறது. அப்படியிருக்க ஜோதிடம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? அதை வைத்துக் கணிக்கப்படும் வாழ்வு எப்படிச் சிறப்பாக அமையும்?
நான் மேலே சொன்ன ஏழு திருமண வாழ்விலும் ஜோதிடத்தை நன்கு கணித்து, பொருத்தம் சரி என்று சொன்னபின் திருமணங்கள் நடந்தன. ஆனால், அவர்கள் சிறப்பாக வாழாவிட்டாலும், சேர்ந்துகூட வாழவில்லையே! மணவிலக்குப் பெற்று பிரிந்துவிட்டார்களே!
எங்கள் குடும்பத்தில் இந்தச் சொந்த அனுபவங்களைக் கொண்டு இனி நம் குடும்பங்களில் ஜாதி பார்க்கக்கூடாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் யார் மீது விருப்பமோ அவர்களைத் திருமணம் செய்வது; ஜோதிடம் பார்க்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டோம். ஜோதிடக்காரர்கள் நல்ல பொருத்தமில்லாதவர்களைச் சேர்த்துவிடுவார்கள். எனவே, உடல் பொருத்தம், கல்விப் பொருத்தம், மணப் பொருத்தம் போன்றவையே பார்க்க வேண்டும்.
வாழ்க்கை நடத்தப் போகின்றவர்களின் விருப்பப்படி அவர்கள் வாழ்க்கை அமைத்துக் கொள்ள நாம் தடையாக இருக்கக் கூடாது.
நல்ல வசதியான குடும்பம் வேண்டும் என்று தேடியலையாமல், நல்ல நடத்தை, நல்ல நோக்கு, சுய முன்னேற்றம் உடையவர்களா என்பனவற்றைப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.
பிள்ளைகள் விருப்பம் என்ன என்று அறியாமல் பெரியவர்கள் சேர்ந்து முடிவெடுத்து திருமணத்தை நடத்தக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தோம்.
இப்படி நாங்கள் எடுத்த முடிவின்படியே இப்போது எங்கள் பேரப் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வருகிறோம்.
எங்கள் பெயர்த்திகள் இருவருக்கு 2023 மற்றும் 2024இல் திருமணம் செய்விக்கப்பட்டது. அத்திருமணங்கள் நடைபெறுவதற்கு முன் நாங்கள் அவர்களுக்குக் கூறிய அறிவுரை இதுதான்:
உங்கள் வாழ்விணையரை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்; ஜாதியைப் பார்க்காதீர்கள்; ஜாதகத்தைத் தூக்கி எறியுங்கள்; வசதியான குடும்பமா? சொத்து வருமா? நகை வருமா என்று எதிர்பார்க்காதீர்கள்; உங்கள் எதிர்பார்ப்புக்கும், உங்கள் இணையரின் எதிர்பார்ப்புக்கும் ஒத்துவருகிறதா? அவர்களது இயல்பு நம் இயல்புக்கு ஏற்றதா? அவர்களது நோக்கம் நம் நோக்கத்திற்குத் தடையாக இருக்குமா? இருக்காதா? என்பனவற்றைச் சீர்தூக்கித் தேர்வு செய்யுங்கள் என்றோம். அவர்களும் அப்படியே தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு, அயல் நாட்டில் பணிபுரிகிறார்கள்; சிறப்பாக வாழ்கிறார்கள்.
தங்கள் விருப்பப்படியே ஜாதி, ஜோதிடம் பாராமல் திருமணம் செய்து வாழும் போதும் சில சிக்கல்கள் வரலாம். ஆனால், அது ஜாதி, ஜோதிட பார்த்த திருமணத்தில் வரும் சிக்கல், பிரிவுகளைப் போல அதிகம் இருக்காது, மிக மிகக் குறைவாகவே இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். w