Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் 92இன் ஆஸ்திரேலிய அசைவுகள் !- திருப்பத்தூர் ம.கவிதா

எந்த ஒரு புதிய இடத்திலும் ஆசிரியர் அவர்கள் பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே, அரங்கில் கூடியிருப்பவர்களுக்கும் அவருக்கும் ஒருவித நேர்மறை அலைகள் அங்கே ஊடுருவத் தொடங்கி நெருக்கத்தை உணர வைக்கும்!

15.3.2025 அன்று ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வென்ட்வொர்த் வில்லே அரங்கில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில், “படிக்கும் போது துணைப் பாடப் புத்தகத்தில் சோம.இலக்குவன் எழுதிய “ஆஸ்திரேலியாவைப் பார்” என்ற புத்தகத்தைப் படித்தேன்! அரை நூற்றாண்டு கழித்து இப்போது ஆஸ்திரேலியாவைப் பார்க்க வந்திருக்கிறேன்!” என்று சுவையாகத் தொடங்கி,

“நாங்கள் இங்கே விருந்தினர்களாக வரவில்லை உங்கள் உறவுக்காரர்களாக வந்திருக்கின்றோம். சுற்றுலாவிற்கு வரவில்லை கற்றுக் கொள்ள வந்திருக்கிறோம். தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இருக்கின்றன… தெரிவிக்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன… நோயிருந்தால் அதற்கு தந்தை பெரியார் என்ற மாமருந்தை ஊசியில் செலுத்தி நீங்கள் பயன் பெறுவதற்குக் கற்றுக் கொடுக்கவும் வந்திருக்கிறோம்.”

“இங்கே நான் வரும்போது ஒரு நண்பர் என்னிடம், அய்யா நான் உங்களைக் கொழும்புவில் சந்தித்திருக்கிறேன் என்றார். நான் கொழும்புவிற்குச் சென்றது 47 ஆண்டுகளுக்கு முன்னால். அதற்குப் பிறகு அந்த எண்ணத்தோடு இன்றைக்கு வருகிறார் என்றால் இதுதான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதாகும். எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு பல நாடுகளில் இருந்து வந்திருக்கக் கூடியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்… எல்லைகள் பிரிக்கலாம் கடவுள்கள், மதம் நம்மைப் பிரிக்கலாம், நம்முடைய பண்பாடு இணைக்கிறது, தமிழ் இணைக்கிறது, தன்மானம் நம்மை இணைக்கிறது, மனிதநேயம் நம்மை இணைக்கிறது” என்று அரங்கத்துடன் உறவு அணுக்கத்தை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பெண்ணியம் என்பதற்கான பெரியாரிய விளக்கத்தை இரு கூறுகளாகக் கொடுத்தார்…

ஆண் உரிமை, பெண் உரிமை என்பதெல்லாம் இல்லை. பெண்ணியம் என்பதைக் கூடப் பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிப்பட்ட ஒவ்வொரு மனித உயிரையும் தாழ்த்தி வைக்காமல் சமமாக நினைக்கிற மனிதநேயம் தான் அவர் வலியுறுத்தினார்‌.

இன்னொரு பக்கம், பெண்ணுரிமை என்பது அவர்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதே. பூனைகளால் ஒருபோதும் எலிகளுக்கு விடுதலை இல்லை என்பதால் இந்த விடுதலைச் சிந்தனை மகளிருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் வகையாக்கித் தந்தார்!

மகளிரை மேடையில் அமர வைத்து அழகு பார்ப்பது, அவர்களின் அறிவுத்திறனை – செயல் திறனைக் கூட்டுவது, எப்போதும் முந்திக் கொண்டு மகளிரைப் பாராட்டுவது என்பது ஆசிரியரின் தன்னிகரற்ற பண்பாகும்.

முன்னதாக, ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சியின் இளந்தலைவர்களில் ஒருவரும் வழக்குரைஞரும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியருமான துர்கா ஓவன், “எல்லா வசதி வாய்ப்புகளும் நமக்கு இங்குக் கிடைத்தாலும் என்ன பொண்ணு நீ, இப்படிப் பேசுற?” என்று சொல்வதும், பெண்கள் பல்வேறு பொறுப்புகளில் உறுப்பினர்களாக இருந்தாலும் கையெழுத்துப் போட மட்டும் அழைத்து வருவதும்தான் நடக்கிறது. ஒரு மேஜையில் ஒரு பெண் இருந்தால், “ஒரு பொறுப்பில் நாங்களெல்லாம் 30 ஆண்டுகாலமாக இருக்கிறோம். நீ என்ன இப்பத்தான் வந்திருக்கிறாய் என்று அவர்களைக் கீழே இறக்காமல் அவர்களை ஊக்குவித்தால் அந்த மேஜை நிறைய  விரைவில் பெண்களாக இருப்பார்கள்” என்று தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி மாற்றங்கள் வர வேண்டும்” என்று பேசியதைச் சுட்டிக்காட்டி “துர்கா அவர்கள் போர் முழக்கம் செய்தார்கள்! அதை வெறும் பேச்சு என்று சொல்ல மாட்டேன், அது ஓர் அறை கூவல்” என்றார். அவருக்குப் ‘பெரியார் ஃபெமினிசம்’ என்னும் நூலைப் பரிசளித்தார்.

மெல்போர்னில் பங்கேற்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் பெண்கள் என்பது இங்கே நடைபெறும் உலக மகளிர் நாள் நிகழ்வின் வெற்றி என்று குறிப்பிட்டு “61 மகளிர் பங்கேற்று இருக்கிறீர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்” என்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததைக் கண் குளிர அனைவரும் கண்டனர்.

ஊடகத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் திராவிடக் கொள்கைகளை இணைத்துப் பயணம் செய்யுங்கள் என்று பேசிய ரம்யாவை மிகவும் பாராட்டி பத்திரிகைத் துறையில் பெண்களைப் பார்ப்பது என்பதே பாலைவனத்துச் சோலை மாதிரி என்று குறிப்பிட்டார்.

“ஆண்கள் சமையல் வேலை செய்வது, பெண்களைத் தலைவர்களாகக் காட்டுவது, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஆண் பிள்ளை
களைத் தண்ணீர் கொடுக்கச் சொல்லுவது, பெண்களின் மேல் கோபமாகக் கையை ஓங்கும் காட்சிகளைத் தவிர்ப்பது இப்படிச் சிறிய சிறிய கதையோட்டத்தோடு கூடிய காட்சிகளைப் புகுத்த வேண்டும்” என்று திரைப்படத் துறையில் பெண்ணியம் என்பதைப் பற்றிப் பேசிய ரேணு அவர்களைப் பாராட்டினார்!

நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய ராதிகா அவர்களைப் பாராட்டி அடுத்த முறை வரும்போது ஏராளம் ராதிகாக்கள் இங்கே இருப்பார்கள் என வாழ்த்தி வழிகாட்டினார்.

பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள் அனைவரையும் உச்சி மோந்து பாராட்டியதோடு மிகச் சிறப்பாக நடத்திய அதன் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்ததோடு அத்தனைக்கும் அடிக்கட்டுமானமாக விளங்குகிற அவருடைய வாழ்விணையர் ராணி அவர்களையும் மேடைக்கு அழைத்து அவர் பாராட்டிய விதம் “மகளிர் போற்றும் மாண்பாளர்” என்பதைச் சொல்லாமல் சொல்லும்!

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் நடனக் கலைஞர் கலைமாமணி நர்த்தகி நடராஜ் அவர்கள் ஒரு திருநங்கை. இதுதான் திராவிட மாடல் அரசின் பாராட்டத்தக்க ‘இன்க்ளூசிவ் குரோத்’ என்பது!

நர்த்தகி நடராஜ் அவர்களுக்குப் ‘பத்மஸ்ரீ’ என்பதெல்லாம் பிற்பாடுதான், அவர்கள் தமிழ்க் கலைகளுக்கு ஆற்றியிருக்கிற தொண்டைப் பாராட்டி “மதிப்புறு முனைவர்” பட்டத்தை முன்பே அளித்தவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆசிரியர் என்றும் ஆசிரியரைப் பற்றி முத்தாய்ப்பாக வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் எடுத்துக்காட்டினார்! அவர் பிரிஸ்பேனில் உரையாற்றுகையில், மக்கள் கலெக்டர் மலையப்பன் வழக்கும் அதையொட்டிய பெரியார் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் என விவரங்களை எடுத்துரைத்து, இதைப்போல ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகளைச் சொல்லக்கூடிய ஒருவர் நம் ஆசிரியர் என்று புகழாரம் சூட்டினார்!

அதற்குக் கட்டியம் கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே வந்த ஆசிரியர் கீழ்க்கண்ட நிகழ்வையும் எடுத்துக் கூறினார்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் தீர்மானம் பெரியார் 1929இல் நிறைவேற்றியதையும் அம்பேத்கர் (1952)அதைச் சட்டமாக்க முடியாததாலேயே பதவியில் இருந்து விலகியதையும் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிசைப்படுத்துகையில் இந்தச் சமூகத்தில் ஏன் இத்தனை அடிமையாகப் பெண் இருக்கிறாள் என்று எண்ணியும் அல்லது எண்ணாமலும் இருப்பவர்களுக்கும் தெளிவைக் கொடுத்தார்.

‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற நூலில் அதன் ஆசிரியர் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மற்றும் சங்கராச்சாரியாருக்குள் நடந்த உரையாடலைத் தெரிவிக்கிறார்‌.

பெண்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது, எப்போதும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை ஆண்டாண்டு காலமாக ஸ்மிருதி வைத்திருந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் நேரு அறிவித்தார்… எல்லாருக்கும் சொத்துரிமை உண்டு, அதாவது பெண்களுக்கும் உண்டு  என்று…இந்த விசயம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு எட்டியது. உடனே புறப்பட்டுக் காஞ்சிபுரத்துக்கு வரவும் என்று தந்தி கொடுத்தார். நானும் புறப்பட்டு போனேன்…

என்ன சாமி? என்றேன். லோகமே அழியப் போறது ஓய், அழியப் போறது…

பேப்பரை எடுத்து என்னிடம் காட்டினார். படபடப்பாகப் பேசினார்;

இதைப் பார்த்தீரா? ஸ்த்ரீகளுக்குச் சொத்துல பாக்கியம் கொடுக்கப் போறாளாம், அவளுக்குச் சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஓடிப் போயிடுவா… அபாண்டமா அபச்சாரமா போயிடும் என்றார்.  நான் சிரித்தபடி,” எனக்கு நல்லதுதான் சுவாமி, என் மாமனாருக்கு நிறையச் சொத்துகள் இருக்கிறது. ஒருவேளை என் ஆத்துக்காரிக்குப் பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான் என்றேன்.

“அசட்டுத்தனமாகப் பேசாதீர் இந்தச் சட்டம் வந்தால் ஸ்ரீதர்மமே பாழாயிடும். அவர்களுக்குப் பாக்கியமோ சம்பாத்தியமோ இருக்கக் கூடாதுன்னு மனு ஸ்மிருதி சொல்லி இருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கிறது தான் ஸ்திரிக்கு அழகு‌… இதை நேரு நொறுக்கி விட்டார். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தணும்” என்று சொன்னார் என்ற வரலாற்றுச் செய்தியை ஊர் உலகம் அறிய உரக்கத் தந்தார்!

செல்லும் இடங்களில் எல்லாம் இது போல் ஏராளமான கருத்துகளைச் சொல்லக்கூடியவர் அன்றும் புதிதாக ஒன்றை இணைத்துச் சொன்னார்.

“துளசிதாஸ் ராமாயணத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றால் சூத்திரர்களும் பெண்களும் ஒரு மேளம் போன்றவர்கள் என்று உள்ளது. மேளம் என்றால் அதை அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோன்று சூத்திரர்களையும், பெண்களையும் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்; அவர்களை வளர விடக்கூடாது என்பதெல்லாம் உள்நோக்கம் கொண்டது‌. (பெண்களை எந்த அளவு கிள்ளுக் கீரைகளாக நினைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு) அதனைப் புனிதம் என்று ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் புனிதத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று ஆக்கினார்கள். ஆனால், இப்போது அதை மீறி பேசுவதால் தான் பெண்கள் வளர்ந்து முன்னேறி இருக்கிறார்கள்” என்று புனிதத்தைப் போட்டுடைத்துக் கட்டுடைத்தார்.

“உலக மகளிர் நாள் விழாவை இன்றைக்குக் கொண்டாடுகிறோம். சமத்துவம் என்று சொல்லும் போது பெண்களுக்குத் தனி அடையாளம் உண்டு. நான் என் துணைவியாரை அழைத்து அறிமுகப்படுத்தும்போது ”ஷீ இஸ் மிஸஸ் வீரமணி” என்று சொல்வது நியாயமா? அவருடைய தனித்தன்மையைப் பற்றிச் சொல்லாமல் மிஸஸ் வீரமணி என்று சொல்லலாமா? எங்களுடைய திராவிடர் கழகத்தில் பெண்களின் பெயரைச் சொல்லும் பொழுது அவர்களுடைய பெயரை மட்டும் தான் சொல்வார்கள். எல்லா நேரங்களிலும் கணவன்மார்களும் முன்னே உட்கார்ந்து கொள்கிறார்களே!” என்று  உலக மகளிர் நாளில் சிந்தனைத் தூண்டலைத் தமிழர் தலைவர் தந்தார்!

பெரியார் தோன்றினார்; தத்துவமாக வாழ்ந்து வழிநடத்துகிறார்! பெரியாரின் வாழ்நாள் மாணவராக ஓர் ஆசிரியர் தோன்றினார், இதோ கண் முன்னால் வாழ்ந்து அறிவுகூட்டும் பரிவாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்! அகிலமெங்கும் பெரியாரின் நீட்சி ஆகிறார்!