நொடிக்கின்ற வருவாயில்
நாள்தோறும் வறுமை
கிடைக்கின்ற இடத்தில்
குடிசையில் குடும்பம்
இடிக்கின்றார் அத்தனையும்
எதனைத்தான் எடுப்பது
படிக்கின்ற அனன்யா
பாய்ந்தோடி எடுத்தாள்
புத்தகம் மட்டுமே
புத்தியில் நின்றது
இத்தரை மீதினில்
எதனையும் இடிக்கலாம்
மெத்தகு அறிவினை
நெருங்கவும் முடியுமா
கத்தியே ஓடினாள்
கையோடு மீட்டாள்
“எந்தன் நூல்களை
எரித்திட விடுவேனோ
தந்தை கட்டுவார்
எனக்கொரு வீட்டை
சிந்தை மகிழ்ந்திட
சிறப்பாய்ப் படிப்பேன்
முந்தியே நிற்பேன்
முகிழ்த்திடும் கல்வியால்”
சொன்னதைக் கண்டே
சொரிகிறேன் கண்ணீர்
உன்னத மகளே
உனக்கொன்று சொல்வேன்
என்னரும் தமிழகம்
ஏற்றமிகு நாடு
உன்குடும்பத்தோடு
வந்திங்கு உயர்க!