Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் தொகுப்பு – ஒரு பார்வை- புலவர் பா.வீரமணி

சமதர்மத்தில் நம்பிக்கை கொண்ட நேருவே சமதர்மத்தைக் குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருப்பதையும் இந்நூலில் எடுத்துக்காட்டுகிறார். ஒருமுறை நேரு அவர்களின் சமதர்ம விளக்கப் பேச்சினைக் கேட்ட பம்பாய் முதலாளிகள், நேருவைச் சினந்து கருத்துத் தெரிவித்ததும், நேரு பம்பாய்க்குச் சென்று அவர்களை நேரில் கண்டு, தான் பேசிய அர்த்தம் வேறு என்று சமாதானம் படுத்தியுள்ளதையும் எடுத்துக்காட்டி அதனைப் பெரியார் கண்டித்துள்ளார். இக்கட்டுரைகளுக்கு முன்னர் ‘ஜவஹர்லாலும் பொதுவுடைமையும்’ எனும் தலைப்பில் மற்றொரு கட்டுரை உள்ளது. பல அரிய விளக்கங்களைக் கொண்ட கட்டுரையாக அது உள்ளது. இவற்றை எல்லாம் ஒருங்கு நோக்கின், பொதுவுடைமையின் மீது தந்தை பெரியார் கொண்ட உண்மையும், உறுதியும், தீவிரமும் எத்தகையது என்பதை நன்கு உணரலாம். இக்கட்டுரைகளில் பலரின் எதிரும் புதிருமான செய்திகள் உள்ளன. அவையாவும் நம்மால் அறியத்தக்கனவாகும். தாகூர், நேரு, திரு.வி.க., சத்தியமூர்த்தி ஆகியோரின் கருத்துகளைக் கேள்விகளுக்கு உட்படுத்திப் பெரியார் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுப்பில் தொழிலாளர்களைப் பற்றிய கட்டுரைகளே எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளன. பொதுவுடைமையைப் பற்றிச் சிந்திக்கும்போது தொழிலாளர்களைப் பற்றி மிகுதியாகச் சிந்தனைகள் தோன்றுவது இயல்பானதேயாகும். தொழிற்சங்கங்கள் குறித்தும், தொழிற்சங்கத் தலைவர்கள் குறித்தும், தந்தை பெரியார் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறியுள்ளார். தொழிலாளர் நலன் குறித்துப் பல கோணங்களில் அவர் சிந்தித்துள்ளார். அவை யாவும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. சில கருத்துகள் பொதுவுடைமைக்குச் சற்று வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், தொகுப்பை முழுவதும் படித்தால் அக்குறை நீங்கி விடும். இத்தொகுப்பில் தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை, தொழிலாளர் இயக்கம்தான் திராவிடர் கழகம், திராவிடர் கழகமே தொழிலாளர் ஸ்தாபனம் எனும் தலைப்புகளைப் பார்த்தாலே தொழிலாளர்களின்மீது தந்தை பெரியார் கொண்ட அக்கறையையும் உறவையும் உணரலாம்.

மற்றும், தொழிலாளர்கள் ஜாதி – மத மூடநம்பிக்கைகளை முழுமையாக விட்டொழிக்க வேண்டுமென்று வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் கூறியுள்ளார். இது மிக முக்கியமானது. இதில் தந்தை பெரியார் பொதுவுடைமையாளரைக் காட்டிலும் தீவிரம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்திலேயே சீனத் தொழிலாளர் குறித்தும்
எழுதியுள்ளார். உலகத் தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். “உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள்” என்று மார்க்ஸ் கூறியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. மற்றும், முன்பின் யோசனையின்றி, தொழிலாளர்கள் அவசர கதியில் வேலை நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடாதென்பதையும் அறிவுறுத்தியுள்ளார். பல வேலை நிறுத்தங்களில் பங்கேற்ற அவர், நாகை – ரயில்வே வேலை நிறுத்தத்தில் சிறை சென்றவர் என்பது உளங்கொளத் தக்கது. இங்கு மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்;

குறிப்பாக, ரயில்வே பணிமனைகளில் உள்ள உணவு விடுதிகளில், பார்ப்பனர்களுக்குத் தனியிடத்தை ஒதுக்கியும், மற்றச் சமூகத்தினருக்கும், கிறிஸ்துவர், முகமதியருக்கும் வேறொரு இடத்தை ஒதுக்கியும் உணவுண்ண வைத்துள்ளனர். அதுவும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் முக்கால் பகுதியைப் பார்ப்பனர்க்கும், கால்பகுதியை மற்றச் சமூகத்தினருக்கும் ஒதுக்கியுள்ளனர். அந்தக் கால் பகுதியில், உண்ட இலைகளைப் போடும் குப்பைத் தொட்டியையும் வைத்திருந்துள்ளனர். இந்த அநியாயத்தைத் தந்தை பெரியார்தான் தட்டிக் கேட்டு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ஒரு வாதத்தை எழுப்பியுள்ளார். அது மிக முக்கியமானது. அதாவது ரயில்களில் டிக்கெட் வாங்கிப் பயணம் செய்வோர்களில் 97% பார்ப்பனர் அல்லாத மக்களேயாவர். அவர்களால் அதிக வருவாய் ரயில்வே துறைக்குக் கிடைக்கும்போது, அவர்களுக்கு உணவுவிடுதிகளில் சிறு இடத்தை – அதுவும் குப்பைத் தொட்டியுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பது என்ன மனித நீதியாகும் என்று வினவியுள்ளார். இதன் பின்னர் சில போராட்டங்கள் நடந்த பின்னரே அந்நிலை மாற்றப்பட்டுள்ளது. மனுநீதி ஆதிக்கம் செய்த இடத்தை மனித நீதி ஆட்சி செய்யப் பெரியார் வழிவகுத்துள்ளார். அவர்தாம் பெரியார்!

“பொதுவுடைமையர் எல்லா நாடுகளிலும் எல்லோரையும் முன்னோக்கி உந்தித்தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்”

(காரல்மார்க்ஸ் – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பக் – 64)

என்று மார்க்ஸ் கூறியதைப் பெரியாரின் செயலோடு ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும்.

‘பொதுவுடைமைச் சிந்தனைகள்’ எனும் தொகுப்பில் பெண்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெறலாமா? எனச் சிலர் வினவலாம் அப்படி வினவுபவர்கள் அத்தத்துவத்தைச் சரியாக அறியாதவரே ஆவர். ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போன்று, பொதுவுடைமையின் இருபக்கத்தினர் தொழிலாளரும் பெண்களுமே ஆவர். மனிதச் சமூகத்தால் தொழிலாளர்களுக்கு முன்பே, சுரண்டலுக்கு உட்பட்டவர்கள் பெண்களேயாவர். அவர்கள் மனிதச் சமூகத்தில் சரி  பாதியினர். அதாவது, தொழிலாளர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை கொண்டோர் என்பதை மறந்துவிடக்கூடாது.

சம தேவையும், சம உரிமையும் உள்ளடக்கியதே பொதுவுடைமை. தொழிலாளர் முதலாளித்துவத்தால், சுரண்டப் படுகின்றனர். பெண்கள் ஆணாதிக்கத்தாலும், முதலாளித்
துவத்தாலும் சுரண்டப்படுகின்றனர். இங்கு இரட்டைச் சுரண்டல்கள் உள்ளன. தொழிலாளர், கண்ணுக்குத் தெரிந்த வர்க்கத்தினர். பெண்கள் பார்வைக்குத் தெரியாத வாழ்நாள் தொழிலாளர்  இனத்தினர். வெளியே தெரியாதவாறு அவர்கள் பண்பாடு என்கிற கட்டமைப்பில் மறைவாகக் கட்டப்பட்டுச் சுரண்டப்பட்ட இனத்தினர். அதனால்தான் தந்தை பெரியார் பெண்களைக் குறித்துச் சமரசமற்ற கடும் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இப்போராட்டத்தில் அவருக்கு ஈடிணையாக எவரையும் கூற முடியாது.

முதல் சுரண்டலுக்குப் பெண்கள் உட்பட்டதால்தான், பெண்களைப் பற்றிய சிந்தனைகளும், இத்தொகுப்பில் தவிர்க்க முடியாதவாறு இணைக்கப்பட்டுள்ளன. மற்றொன்றும் இங்குக் குறிப்பிடத்தக்கது. பொருளாதார ஏற்றத்தாழ்வினை உருவாக்கி, அதனை நிலை நிறுத்தும் முதலாளித்துவம் இருக்கும் வரை, பெண் ஒரு பொருளாக அதுவும், விபசாரப் பொருளாகவுமே ஆக்கப்படுவாள் என்று மார்க்ஸ் கூறியதும் (பார்க்க…. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை) இங்கு நினைவு கூரத்தக்கது.

இத்தொகுப்பில் தொழிலாளர்க்கு அடுத்து, எண்ணிக்கையில் கூடுதலாக உள்ள கட்டுரைகள்பெண்கள் பற்றியனவேயாகும். இக்கட்டுரைகளில் தந்தை பெரியாரின் ஆழமான சிந்தனைகள்இருப்பன போன்று, சில அதிர்ச்சி தரும் தகவல்களும் உள்ளன. அவை நாம் அறியாதவை. இப்போதைய தலைமுறைக்கு அவை பேரதிர்ச்சியைத் தரும் என்பதில் அய்யமில்லை. அவற்றில் ஒன்றிரண்டை நோக்குவது ஏற்றது. கேரளாவில் நம்பூதிரியின் குடும்பத்திலுள்ள மூத்த மகன், அதே சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மட்டுமே மணக்க வேண்டுமாம். மற்ற மகன்கள் நாயர் ஜாதியைச் சேர்ந்த பெண்ணையோ, கீழான ஜாதியைச் சேர்ந்த பெண்ணையோ மணக்க வேண்டுமாம். கீழ்ஜாதிப் பெண் பெற்றெடுத்த பிள்ளைகளுக்குச் சொத்துரிமை இல்லையாம்! மற்றும், வேறொரு சமூகத்தில்,

18 வயதுடைய பெண்ணை 6 வயதுடைய பையனுக்குத் திருமணம் செய்வார்களாம். அந்தப் பையன் பருவம் அடையும் வயதில், அந்தப் பெண் சில குழந்தைகளுக்குத் தாயாக இருப்பாளாம். மற்றொரு சமூகத்தில் மூத்த மகனுக்குத் திருமணம் செய்விக்கப்பட்ட பெண், அக்குடும்பத்தின் மற்ற ஆண் பிள்ளைகளுக்கும், மாமனாருக்கும்கூட மனைவியாக இருப்பாளாம்! பெண்களுக்கு எத்தனை அநியாயம் பாருங்கள்! இவற்றை ஒழிக்க வேண்டாமா? இவற்றை ஒழிக்கவெகுண்டு எழுந்தவர்தான் பெரியார். ‘பெண்களின் அடிமை நீங்குமா?’ எனும் கட்டுரையில், மெக்டாக்கல்என்னும் பெண் அதிகாரி, பெண்கள் சங்கத்தில் பேசும்போது, பெண்களுக்கு உயர்கல்வி எல்லாம் தேவையில்லை என்றும், அவர்களுக்கு ஓரளவு கல்வி அளித்து வீட்டுக்கு வேண்டியவர்களாக ஆக்குவதே சிறந்தது என்றும், அவர்களுக்குக் கிறிஸ்துவ நல்லொழுக்கப் போதனைகளைக் கற்றுத் தந்தால் போதும் என்றும் கூறியுள்ளார். இதனைப் பார்த்த பெரியார், அவரைக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பதுடன், அப்பெண்மணி கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்காகவே அவ்வாறு கூறியுள்ளார் என்பதைச் சரியாகக் கணித்துள்ளார். இப்படிப் பல சிந்தனைத் தெறிப்புகள் இத்தொகுப்பில் உள்ளன.

‘இந்தியப் பெண்களுக்கு இடம்’ எனும் கட்டுரையில், பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் தனித்தனிப் பள்ளிகள் இருக்க வேண்டுமென்றும், குறிப்பாகப் பெண்களுக்குக் கோலாட்டம், கும்மி, பின்னல், வீட்டுப் பராமரிப்புப் போன்றவற்றைக் கற்றுத்தருவதே ஏற்றதெனத் தீர்மானம் போட்டுள்ளனர். தந்தை பெரியார் இதனை மறுத்து அரிய சிந்தனையுடன் கட்டுரையை எழுதியிருப்பதுடன், பெண்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் வண்ணம், உலகில் பல துறைகளில் பல பெண்கள் முன்னணியில் இருப்பதை எடுத்துக்காட்டி விளக்கியிருப்பது சிறப்பாக உள்ளது. மேலும், ‘பெண்களின் நாடு’ என்னும் கட்டுரையில் ‘பாலித் தீவு’ எனும் கடற்கரை ஊரில், எல்லா வேலைகளையும் பெண்களே செய்கிறார்கள் என்றும், அவர்களே குடும்பத்தை நிருவாகம் செய்கிறார்கள் என்றும், ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லையாம்! இவைபோன்ற பற்பல செய்திகளும், சிந்தனைகளும் இதுபோன்ற கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன. ‘எல்லா இந்திய மாதர் மாநாடு’ என்னும் கட்டுரை அளவிலும், பொருண்மையிலும் சிறந்த கட்டுரையாக உள்ளது. பெண்களைப் பற்றிய தந்தை பெரியாரின் அக்கறைக்கும், முற்போக்குச் சிந்தனைக்கும் இந்தவொரு கட்டுரையே பெருஞ் சான்றாகும். பெண்களைப் பற்றிய கட்டுரைகளைப் படித்தால், பெரியார் நிகழ்த்திய கருத்துப் போரின் உண்மையை உள்ளவாறு உணரலாம். பெண் மக்களின் விடுதலையும், சமத்துவமும் எந்நிலையிலும் தவிர்க்கக் கூடியதன்று என்பதால்தான் மார்க்ஸ், முதலாளிகளைப் பற்றியும் முதலாளித்துவத்தைப் பற்றியும் கீழ்வருமாறு கூறினார்.

“முதலாளிகள் சாதாரண விபசாரிகளிடம் உறவு கொள்வதுடன், தமது பிடியிலுள்ள தொழிலாளர்களின் மனைவியரையும், பெண்டிரையும் சூறையாடுவதுடன், மற்ற முதலாளிகளின் மனைவிமார்களையும் காமத்திற்கு உள்ளாக்குகிறார்கள்….

முதலாளித்துவப் பொருள் உற்பத்தி ஒழிக்கப்படும்போதுதான் அந்த அமைப்பிலிருந்து தோன்றும் பொதுப்பெண்டிர் முறையும் அதாவது வெளிப்படையான விபசாரமும், ரகசிய விபசாரமும் கூடவே ஒழிந்தாக வேண்டும் என்பது உறுதி.”

(பார்க்க-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, பக்.73)

இம்மேற்கோளை நோக்கினால், பெண் முன்னேற்றத்திற்கும், பொதுவுடைமைக்கும் உள்ள உறவை உணரலாம். மேலும் பகத்சிங், சக்லத்வாலா, ட்ராட்ஸ்கி ஆகியோரைப் பற்றிய
கட்டுரைகள் நல்ல செய்திகளைக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக, சக்லத்வாலா, ட்ராட்ஸ்கி ஆகியோரின் படங்கள் இதில் இடம்பெற்றிருப்பது முக்கியமானது. தமிழர் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்கள், அரிய அணிந்துரையை வழங்கியதையும் ஒரு பேறாகக் கருதுகிறேன். சுரங்கத்தின் உள்ளே செல்லுங்கள்; அறிவு மணிகளை அள்ளி வாருங்கள். அவற்றைப் பிறருக்கும் காட்டுங்கள்; பரப்புங்கள்.