Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு 36 பெரியார் திரைப்படம் வெளியானது!

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 95 லட்சம் லிபர்டி கிரியேஷனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 17ஆம் தேதி இந்தத் தொகை நம் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. லிபர்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோ.சாமிதுரை வருமான வரி சட்ட ஆலோசகர் ராஜரத்தினம் ஆடிட்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நம்முடன் வருகை தந்து காசோலை பெற்றுக் கொண்டனர். தன் சொந்த படங்களுக்கு எடுத்த அக்கறையை விட அதிக அக்கறை எடுத்துக் கொண்டு ஆர்வமாக ஊக்குவித்த முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விரைவில் பெரியார் திரைப்படம் வெளிவரும் என்னும் தகவலைக் கூறிவிட்டு வந்தோம்.

 

‘பெரியார்’ திரைப்படத்திற்கு முதலமைச்சர் கலைஞர் நன்கொடை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்த தந்தை பெரியார் சிலையினை 22.4.2007 அன்று காலிகள் சிலர் சேதப்படுத்தியது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சேதப்படுத்திய குற்றவாளி இருவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு காவல்துறை செய்து வந்த நிலையில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனைகளைச் பெற்று தர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை வலியுறுத்தினோம். மேலும், தந்தை பெரியார் சிலையை அவமதித்த காரணத்தினால் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் இருப்பவர்களையும் அரசு கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்து கொண்டு வரப்பட்ட சட்டத்தினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பத்குமார், பி.கே.மிஸ்ரா ஆகியோர் கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சமூக நீதிக் கண்ணோட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பை வரவேற்று சமூக நீதி வரலாற்றில் மேலும் சிறப்பான முத்திரையைப் பதிப்பதற்குக் காரணமாக இருக்கும் தமிழ்நாட்டில் அவர்களுக்கும் உயர்கல்வித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுக்கும் கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் திராவிட கழகம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது என்று வெளியிட்டோம். இந்த வழக்கில் திராவிடர் கழகமும் இடை மனுதாரர்களாக இணைத்துக் கொண்டு வாதாடியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகி 50 ஆண்டு பொன்விழா காணும் கலைஞருக்கு வாழ்த்து

மக்களின் மகத்தான வரவேற்புகளுடன் ‘பெரியார்’ திரைப்படம் உழைப்பாளர்களின் உன்னத திருநாளாம் மே முதல் நாள் வெளி
யானது. ஞான ராஜசேகரன் அவர்
களின் இயக்கத்தில், லிபர்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியானது. திரைக்கலைஞர்கள் ஜோதிர்மயி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்
திருந்தனர். தங்கர்பச்சான் நேர்த்தியான ஒளிப்பதிவில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை
அப்படியே காட்டுவதுபோல் பதிவு செய்திருந்
தார். வித்யாசாகர் இசை, வைரமுத்து
வின் வைர வரிகள் என திரைப்படம் மிக நேர்த்தியாக வெளிவந்திருந்தது. மாநிலம் முழுவதும் தோழர்கள் தங்கள் சொந்த செலவில் பெரியார் பட விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 54 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் அமெரிக்கா
வின் தலைநகர் வாஷிங்டனில் மே 12, 13 ஆகிய நாட்களிலும் மலேசியா சிங்கப்பூரில் மே 5 அன்றும் வெளியிடப்பட்டது. பெரியார் திரைப்படம் வெளிவரும் முதல் நாளே ‘‘பெரியாரைக் காண வாரீர் வாரீர்’’ என்ற தலைப்பில் காலத்தால் அழியாத கவிதை கருவூலம் ஒன்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் தந்திருந்தார்.

‘‘திசையெட்டும் கிளர்ந்தெழுந்து முழங்கச் செய்த

பெரியார் வருகின்றார் மே திங்கள் முதல் நாள் என்று:

அறிவிப்புகளை அன்றாடம் ஏடுகளில் எல்லோரும் கண்டு எதிர்பார்த்து நிற்கின்றோம்!

எப்போது வருவார் என்ற ஆவல் ஒரு புறம்:

ஏன் வருகிறார் என்ற எரிச்சல் ஒரு புறம் இப்படியும் மனிதர்கள் இந்தத் தமிழ்நாட்டில் இருக்கின்றார்;”

என்று ஒரு கவினுறு கவிதையில் குறிப்பிட்டார்!

முதலமைச்சரின் இந்த கவிதை வரிகளுக்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கடும் எரிச்சலைக் காட்டி இருந்தது. இப்படத்தினைப் பள்ளி மாணவர்கள் பார்க்கச் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டு இருந்தது.

இதற்கிடையே உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தன்னையும் இடையிட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று மனு போடப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நாம் இட ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

மே ஆறாம் தேதி திருப்பூரில் காலை யாழ் வளாகத்தைத் திறந்து வைத்தோம். அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் பொன் விழா ஆண்டாக 2007ஆம் ஆண்டு அமைந்தது. 1957 இல் முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் ஒருமுறை கூட தோல்வியே அடையாமல் 50 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் பணியாற்றி வருவதை ஒட்டி சட்டப்பேரவையில் பாராட்டுத் தெரிவக்கப்பட்டது. அந்நிகழ்விற்கு நாமும் சட்டப் பேரவை மாடத்தில் அமர்ந்து பங்கேற்றோம். மேலும், சட்டப் பேரவையில் கலைஞர் பொன்விழா என்னும் தலைப்பில் தனி விழா சென்னை தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு 11.5.2007 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு இனமான பேராசிரியர் க.அன்பழகன் தலைமை வகித்தார். நாம் இதில் பங்கேற்று நெருப்பாறு எரிமலைகளைச் சந்தித்தவர் கலைஞர் என்பதை விளக்கி உரையாற்றினேன். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மேனாள் பிரதமர் அய்.கே.குஜ்ரால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் உள்ளிட்ட அனைத்திந்தியத் தலைவர்களும் ம.தி.மு.க. அவைத் தலைவர் எல்.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். மறுநாள் காலை கழகப் பொறுப்பாளர்களுடன் கலைஞர் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலை பண்பாட்டுப் புரட்சி விழா

இதற்கிடையே ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பேசப்பட்ட திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறி தமிழர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் சூழலில் ராமன் பாலம் என்று கூறி தடைகள் ஏற்படுத்தும் பா.ஜ.க. சங்பரிவார் கும்பலின் முயற்சியை கண்டித்து மே 8ஆம் தேதி அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு சக்திகளின் கலந்துரையாடல் கூட்டத்தினைப் பெரியார் திடலில் கூட்டினோம். அதில் சேது சமுத்திரத் திட்ட பாதுகாப்புக் குழு என்ற அனைத்துக் கட்சி குழு உருவாக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ”சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும்’’ என்னும் தலைப்பில் சென்னை அமைந்தகரையில் 16.05.2007 அன்று கலைஞர் அவர்களின் தலைமையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் சேது சமுத்திரத் திட்டம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்றும், நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தேசத்தின் எதிரிகளே, துரோகிகளே என்றும் முழக்கமிட்டார். இக்கூட்டத்தில் நம்மால் தொகுக்கப்பட்ட ‘‘சேதுக் கால்வாய்த் திட்டம்: ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்’’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்று உரையாற்றிய நாம் மனிதன் முதன் முதலில் எகிப்தில் தான் பாலம் கட்டினான் என்றும், அப்பாலம் கட்டப்பட்டு 4657 ஆண்டுகளே ஆகின்றன என்றும் விளக்கி, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏது பாலம் ஊரை உலகத்தை ஏமாற்றும் கோயபல்ஸ்களின் புளுகுகளே என்று விளக்கி உரையாற்றினோம். இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இதற்கிடையே 27 சதவிகித இட ஒதுக்கீடு தரும் சட்ட மசோதா குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்விக்கு உள்ளாக்கினார்கள். இந்த விவகாரத்தை எளிதில் தீர்க்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு நீதிபதிகள் அஜித் ரசாயத், பாண்டா ஆகியோர் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. கடந்த 57 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டவர்கள் ஏன் இன்னும் ஓராண்டு பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்பி அவரது கெட்ட விருப்பத்தை நிலை நிறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இத்தனைக்கும் தலைமை நீதிபதி விரைந்து முடிக்க ஆணையிட்ட நிலையில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட நாம் சட்டத்துறை அமைச்சராக பார்ப்பனர் இருக்கக் கூடாது என்றும், 27% இட ஒதுக்கீடு அமலுக்கு வர ஓர் அவசரச் சட்டம் தேவை என்றும், உச்ச நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளை உடனே நியமனம் செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

சென்னை செம்பியம் பெரவள்ளூர் சதுக்கத்தில் 17.05.2007 அன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தமிழர் பண்பாட்டுப் புரட்சி விழா நடைபெற்றது. அவ்வமயம் சிவக்குமார் இயக்கத்தில் அன்னை மணியம்மையார் கலைக்குழுவின் சார்பில் ‘‘வந்து பாருங்க தெரியும்’’ வீதி நாடகம் நடத்தப்பட்டது.

கவிஞர் மு.மேத்தா, பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் உரையாற்றியபின் நாம் நிறைவுரையாற்றினோம்.

பெரியார் பேருரையாளர் இறையன் திருமகள் ஆகியோரின் பேரனும் தஞ்சை கண்ணப்பன்-பண்பொளி ஆகியோரின் மகனுமான பொறியாளர் க.வீரமணி – திவாரி ஆகியோர் திருமணத்தைத் தஞ்சையில் 19.5.2007 அன்று நடத்தி வைத்தேன். வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லா, மேனாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராஜா, கழக பொருளாளர் கோ.சாமிதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். அன்று மாலை திருவாரூர் மாவட்டம் மேலவாசலில் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு, ஆர்.பி.சாரங்கன் நினைவு தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு, எமது பெயரில் நூலகம் திறப்பு. எமது எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்றன. பெரியார் சிலையை நாம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம்.

இதில் பங்கேற்று நம் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா அவர்கள் சட்ட ரீதியாக ஜாதியை ஒழிக்க துணை நிற்போம் என்றும் எதிர்த்துப் போராட்டம் தான் வேண்டுமென்றால், பதவிகளைத் தூக்கி எறியவும் தயங்க மாட்டோம் என்றும் முழக்கமிட்டார்.

மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு செயலவைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு துணைப் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், மாவட்ட செயலாளர் பெ. வீரையன் மன்னை ஒன்றியத் துணை கழகப் பொதுக்குழு கா.தனராசு முன்னிட்டு முன்னிலை வகித்தனர். உறுப்பினர்
இரா.கோபால் கழக பொருளாளர் கோ.சாமிதுரை பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மறுநாள் காலை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களின் மகள் வாலண்டினா – கு.கருணை ராஜ்பால் (தெலுங்கன் குடிக்காடு வளத்தான் தெரு குப்புசாமி கமலம் ஆகியோரின் மகன்) ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம். நிகழ்வில் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கழக செயலவைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு, கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மாநில வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம்.உபயத்துல்லா தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்
கு.வடுகநாதன், ஒரத்தநாடு திமுக பெருந்தலைவர் காந்தி, தஞ்சை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன், தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்ரமணியம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றிய நாம், ‘‘இது எங்கள் குடும்ப மணவிழா எங்கள் செல்வங்களுக்கு மணவிழா இங்கே ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார். ஆனாலும், நானும் ஒவ்வொருவரையும் வரவேற்கிறேன். ஒரத்தநாட்டில் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது. ஒரு மாநாடு போல் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே காலையில் திருமணம் மாலையில் ஒரு மாநாடு நடத்தியிருக்கலாம். அந்த அளவிற்கு தோழர்கள் வந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அன்று மாலை பேராவூரணியில் திராவிடர் இன எழுச்சி மாநாடு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். பின்னர் நடைபெற்ற மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் வை.சிதம்பரம் வரவேற்புரை ஆற்றினார். கழக செயலவைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு தலைமை வகித்தார். இன எழுச்சி மாநாட்டை ஒட்டி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’ எனும் தலைப்பில் வழக்கறிஞர் பூவை புலிகேசி அவர்களும் ‘ராமன் பாலம் பித்தலாட்டமே’ எனும் தலைப்பில் தஞ்சை இரா.பெரியார் அவர்களும், ‘‘இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்ட ஏன்? என்னும் தலைப்பில் அதிரடி க.அன்பழகன் அவர்களும் உரையாற்றினார். பின்னர் முக்கியத்துவம் பெற்ற 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராவூரணியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும்,தமிழக பள்ளி கல்லூரிகளில் தந்தை பெரியார் காமராஜர் ஆகியோரின் படங்களை இடம்பெறச் செய்ய வேண்டும், பேராவூரணி அண்ணா சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நாம் செய்து கால்வாய்த் திட்டம் இட ஒதுக்கீடு பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி உரையாற்றினோம்.

(நினைவுகள் நீளும்…)