பெரியாரை, அண்ணாவைத் தொடர்ந்து போற்றும்
பெருமைமிகு தலைவர்நம் கலைஞர் ஆவார்!
நரியாரை வஞ்சகரை நடுங்கச் செய்தார்!
நஞ்சனைய சாதிமத வெறியும் நீங்க
விரிவாகத் தம்உரைகள் எழுத்தின் மூலம்
வேத, மனு (அ)தர்மத்தின் புரட்டை எல்லாம்
சரியாக மக்களுமே உணரச் செய்தார்!
சழக்கர்தம் முகத்திரைகள் கிழித்து வென்றார்!
முரசொலியில் ’உடன்பிறப்பு’ மடலின் மூலம்
முன்னேற்றக் கழகத்தை வழிந டத்தி
உரத்தநறுஞ் சிந்தனைகள் பகிர்ந்து வந்தார்!
உழைப்பாளர் மேன்மையினைத் திராவி டத்தின்
வரலாற்றுப் பெருமையினை, முன்னோர் காத்த
வாழ்வியலை, பண்பாட்டை நினைவு கூர்ந்தே
பரபரப்பாய் வெளிப்படுத்தி மடமை மாயப்
பகுத்தறிவின் ஒளிவெள்ளம் பரவச் செய்தார்!
அயர்வின்றித் தமிழ்நாடு தமிழர் மேன்மை
ஆய்ந்தறிந்தே அரும்பணிகள் ஆற்றி வந்தார்!
நயத்தக்க திட்டங்கள் பலவற் றாலே
நாட்டோரின் கவனத்தை நாளும் ஈர்த்தார்
வியக்கின்ற படைப்புகளால் வளங்கள் சேர்த்து
வீறுணர்ச்சி பொங்கிடவே தமிழைக் காத்தார்!
உயர்வான ‘செம்மொழியாம்’ தகுதி பெற்றே
ஒண்டமிழ்க்கு மாநாடும் நடத்த லானார்!
சென்னையிலே வள்ளுவர்க்குக் கோட்டம் கண்டார்!
சீர்குமரிக் கடலோரம் படிமம் வைத்தார்!
பெண்ணுரிமை காத்திட்டார்! முதன்மை தந்தார்!
பிறழாமல் இடஒதுக்கீட் டுரிமை பெற்றார்!
என்றென்றும் இருமொழியாம் கல்விக் கொள்கை
ஏற்றிட்டார்! இந்தியினை மறுத்தார்! மக்கள்
நன்மையெலாம் எய்திடவே ஆட்சி செய்தார்!
நாடு, மொழி இனம்வாழ உழைத்திட் டாரே! w