Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் கனிமொழி கணினியைத் திறந்து தேடினாள்.

வெற்றி!

இளம் அறிவியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

அவள் மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அதில் பங்கு பெற அங்கு யாருமே இல்லை.

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவள். நல்ல வேளையாக அவளுடைய பெற்றோர் அவளுக்கு விட்டுச் சென்ற பெரிய சொத்து அவள் அண்ணன் முகிலன்தான்.

அதைத் தவிர மூன்று சென்ட் இடத்தில் மிகச்சிறிய வீடு. முகிலன் பள்ளிப் படிப்பை முடித்தபின் குடும்ப பாரத்தைச் சுமக்கும் பொறுப்புக்கு வந்துவிட்டான்.

ஆனால், பள்ளியில் படிக்கும் காலத்தில், தான் ஜாதி சார்ந்த அமைப்பில் தீவிரமாக இருந்தான்.

பெரும்பாலான நாள்களில் வீட்டில் இருக்க
மாட்டான். ஜாதிக் கூட்டத்திற்குச் சென்று விடுவான்.

“எங்கள் குலத் தங்கம் வாழ்க, வாழ்க”, என்று தனது தலைவரை வாழ்த்தி அனைவரும் முழக்கம் எழுப்பும்போது இவன் குரல் மட்டும் மற்ற குரல்களை விட ஓங்கி ஒலிக்கும். தலைவருக்கு நிதி திரட்ட ஊர் ஊராகச் செல்வான். குறிப்பாக கோயில் கட்ட அதிகமாக நிதி திரட்டுவான். நம் ஜாதிக்கான சாமிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று தலைவர் சொன்னவுடன் அதற்கான வசூல் வேட்டையில் இவனும் இறங்கினான்.

அன்றாட வாழ்விற்கு அவன் பெற்றோர் விட்டுச் சென்ற பல பொருட்களைச் சிறுகச் சிறுக விற்று செலவு செய்தான்.

அவனது போக்கைக் கண்டு மிகவும் வருந்தினாள் கனிமொழி. ஆனால், அவள் பட்டப் படிப்பில் சேர்ந்தபோது அவனுக்குப் பட்டறிவு ஏற்பட்டது. அதன் பயனாக அவன் கூலி வேலைக்குச் சென்றான். பணத்தைத் தங்கையிடம் கொடுத்தான். சிறுத் தொகையாக இருந்தாலும் நோட்டுப் புத்தகங்கள் வாங்க அது பயன்பட்டது.

அவளுக்கென்று ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவை அவள் நனவாக்க
விரும்பினாள். தனியொருத்தியாகப் போராட
வேண்டுமே!

அண்ணனும் தற்போது குடும்பப் பொறுப்பை உணர்ந்துவிட்டான்.

நியாய விலைக்கடை அரிசி பசிப்பிணியைப் போக்கியது. பெண் பிள்ளைகளுக்கான அரசின் கல்வி உதவித் தொகை அவளின் கல்விக்கு கைகொடுத்தது.

தமிழ் வழிக் கல்வியில் தொடர்ந்து பயின்று வரும் அவள் அரசு அளித்து வரும் சலுகைகளை நன்கு அறிந்து கொண்டாள்.

இப்போது பட்டப் படிப்பையும் முடித்து
விட்டாள்.

அவள் மகிழ்ச்சியில் பங்கு பெற அங்கு யாருமே இல்லை. பாராட்டவும், வாழ்த்தவும் ஆளில்லை.

காரணம் அவளது ஏழ்மை.

யாரோ வீட்டிற்குள் வரும் காலடியோசை கேட்டது.

அவள் அண்ணன் முகிலன்தான் வந்தான். அவன் முகம் வாடியிருந்தது.

அவன் எவ்வளவு தவறு செய்தாலும், சொன்ன பேச்சைக் கேட்கவில்லையென்றாலும் அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள். அதுமட்டுமல்லாமல் தற்போது அவன் தனது பொறுப்பை உணர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டும் இருக்கிறான்.

“ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று கேட்டாள் கனிமொழி.

“ஒண்ணுமில்ல. நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான் முகிலன்.

“இன்னும் இல்லை. நீ வர மட்டும் காத்திருந்
தேன். நான் பி.எஸ்.ஸி., முதல் வகுப்பில் பாஸ் பண்ணிட்டேன்,” என்று சொன்ன கனிமொழி அவனை ஏறிட்டு நோக்கினாள்.

அவன் முகத்தில் மகிழ்ச்சி தோன்றி உடன் மறைந்தது.

“நீ பாஸ் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். உன்னைப் பாராட்டவோ, வாழ்த்து சொல்லவோ யாரும் இல்லை. நீதான் நம்ம வீட்டின் முதல் பட்டதாரி. என்னால படிக்க முடியல. பட்டம் வாங்க முடியல. ஆனா நீ பட்டம் வாங்கியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனாலும், நீ மேலும் படிக்கணுமே. அதுதான் எனக்குக் கவலையா இருக்கு.”

“நீ கவலைப்படாதே. எனக்கு ஓர் இலட்சியம் இருக்கு. நமக்கு ஆதரவு கொடுக்க யாருமே முன்வரல. ஊரை விட்டு ஒதுக்கினது போல் இருக்கோம். நீயும்தான் ஜாதி, ஜாதின்னு அலைஞ்சிக்கிட்டு இருந்துட்ட. இப்பத்தான் அந்தக் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க. இப்படியே இரு. வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சு உன்னோட எதிர்காலத்துக்குச் சேர்த்து வைச்சுக்க. எனக்குப் புத்தகம் மட்டும் வேணும். எப்படியாவது படிச்சி நான் கலெக்டர் ஆகியே தீருவேன்.”

தங்கையின் மன உறுதியைப் பற்றி அவன்
நன்கு அறிவான். அவளின் ஆசை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகவேண்டும் என்பது. அதற்காக அவளுக்கு உதவ எந்தத் தியாகத்தை
யும் செய்ய வேண்டுமென முடிவு செய்தான். அந்தப் படிப்பு பற்றியும், தேர்வு பற்றியும் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

“சும்மா வீட்டிலேயிருந்து படிச்சா பாஸ் பண்ண முடியாதாம். சென்னையில் அதுக்காக நிறைய ‘கோச்சிங் சென்டர்கள்’ இருக்காம். அங்கே போய் படிக்கணும். அப்பத்தான் பாஸ் பண்ண முடியும்” என்று ஒருவர் சொன்னார்.

“நீதான் ஜாதி, ஜாதின்னு அலைவாயே; உன் தலைவர்கிட்ட போய் உதவி கேளேன். அவரே அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க வேணும்னு அப்போதெல்லாம் அடிக்கடி சொல்வாரே! அவரைப் போய் பார்”, என்று மற்றொருவர் முகிலனுக்கு யோசனை சொன்னார்.

“உன் தங்கச்சியைக் கோச்சிங் சென்டரில் சேர்த்துவிடு. அய்ந்து லட்ச ரூபாய்தான் செலவாகும். நல்லா படிச்சா பாஸ் பண்ணிடலாம். அப்புறம் உன் தங்கச்சி கலெக்டர்தான்” என்று ஒருவன் கிண்டலாகவும் சொன்னான்.

எல்லாவற்றையும் அமைதியாக காதில் வாங்கிக் கொண்டான் முகிலன்.

“கோச்சிங் சென்டரில் சேர்ந்தால்தான் பாஸ் பண்ண முடியுமாம். அதுக்கு அய்ந்து லட்ச ரூபாய் செலவாகுமாம். என்ன செய்யறது”, என்று ஒரு நாள் கனிமொழியிடம் சொன்னான் முகிலன்.

“பணத்துக்கு நாம் எங்கே போறது? அதெல்
லாம் நடக்கிற காரியமா? நீ கவலைப்படாதே. நான்
வீட்டிலிருந்தே படிக்
கிறேன். பாஸ் பண்ணி
காட்டுவேன். புத்தகங்கள்
மட்டும் எனக்கு வேணும்”,
என்றாள் கனிமொழி.

அவள் படித்து வெற்றி பெறுவாள்
என்ற நம்பிக்கை முகிலனுக்கு இருந்தது.

இருந்தாலும் கோச்சிங் சென்டரில் சேர தனது ஜாதித் தலைவரிடம் உதவி கேட்டால் என்னவென்று அவனுக்குத் தோன்றியது.

இந்த எண்ணத்துடன் ஒருநாள் தன் ஜாதித் தலைவரைப் பார்க்க சென்னை வந்தான்.

முன்பெல்லாம் சரளமாக வீட்டிற்குள் சென்று தலைவரைப் பார்ப்பான். ஆனால், இப்போது அவன் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டு தலைவரின் அனுமதி கிடைத்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டான்.

உள்ளே நுழைந்து வீட்டைப் பார்த்ததும் அப்படியே பிரமித்து நின்றான்.

வீடு உருத் தெரியாமல் மாறிப்போயிருந்தது. அரண்மனை போல் காட்சியளித்தது.

தலைவரைச் சந்தித்தான். தலைவர் பிடி கொடுக்கவில்லை.

“இலவசமாக அய்.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் என்பதும் நம்ம கோஷங்களில் ஒன்றாக இருந்ததே”, என்று கேட்டான் முகிலன்.

“ம்…ம்…செய்வோம், செய்வோம்” காலம் கனியட்டும்”, என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார் தலைவர்.

நீதான் ஜாதி, ஜாதின்னு அலைவாயே; உன் தலைவர்கிட்ட போய் உதவி கேளேன். அவரே அய்..எஸ்., அய்.பி.எஸ்., கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க வேணும்னு அப்போதெல்லாம் அடிக்கடி சொல்வாரே! அவரைப் போய் பார்

 

ஜாதித் தலைவர்கள், தான் சார்ந்த இனமக்களை அறிவார்ந்த மக்களாக உயர்த்தினால் நல்லது. ஆனால், அவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துவது மிகவும் கொடியது. இதை நன்றாக உணர்ந்தான் முகிலன்.

அதன்பின் கிடைத்த வேலையைச் செய்தான் முகிலன். கனிமொழி படிப்பதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தான்.

சில நாட்களில் மிகவும் விலை கூடுதலான புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்தான்.

அதைப் படித்து அதிலுள்ள முக்கியச் செய்திகளையெல்லாம்  குறிப்பெடுத்துக் கொண்டாள் கனிமொழி.

படித்து முடித்த புத்தகங்களை மீண்டும் எடுத்துச் சென்று விடுவான் முகிலன்.

தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சரியாகச் சாப்பிடாமல் தான் பட்டினி கிடந்
தாலும்  கனிமொழிக்குச் சத்தான உணவுகளை வாங்கிக் கொடுத்தான்.

தேர்வு எழுதினாள் கனிமொழி.

தேர்வு முடிவுகள் வெளியாயின.

கனிமொழி தேர்ச்சி பெற்றுவிட்டாள்.

முகிலன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“கனிமொழி, நீ இப்ப ஒரு கலெக்டர்”, என்று பெருமையுடன் சொன்னான் முகிலன்.

“ஆமாம். உன் தங்கச்சி ஒரு கலெக்டர்தான்” என்று அவளும் மகிழ்ச்சியுடன் சொன்
னாள்.

இனி அடுத்து செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபட
லானாள் கனிமொழி.

அடுத்த சில நாட்கள் கழித்து சிலர் கனிமொழியைத் தேடி வந்தனர்.

சால்வை அணிவிக்க
வந்த அவர்களிடம் கனிமொழி பேசினாள்.

“நீங்கள் யாரென்றே எனக்குத் தெரிய
வில்லையே” என்றாள்.

“என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க. நாமெல்லாம் ஒரே ஜாதி. நீங்க பாஸ் பண்ணினது நம்ம ஜாதிக்கே பெருமை”, என்றார் வந்தவரில் ஒருவர்.

“நம்ம தலைவரும் உங்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்த விரும்புகிறார்”, என்றார் மற்றொருவர்.

மேலும் சிலர் இதேபோல பேசியதைக் கேட்ட கனிமொழி மிகவும் வேதனைப்பட்டாள்.

முகிலனும் மிகவும் கோபப்பட்டான்.

“என் தங்கைக்கு யாருமே எந்த உதவியும் செய்யல. ஆனா அவள் பாஸ் பண்ணின பிறகு இப்படி ஜாதியைச் சொல்லி வருவது சரியல்ல” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

“பொங்குன சோற்றில் மாங்காய் வைப்பது”, என்பது இதுதானோ என அவன் எண்ணினான்.

பிறகு நாள்தோறும் அவளைப் பார்க்க பலர் வந்து சென்றனர். ஜாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் கனிமொழியிடம் சொன்னது அவளை மிகவும் கோபம் கொள்ள வைத்தது.

“நீங்க கலெக்டர் ஆன பிறகு நம்ம ஜாதிக்கு நிறைய செய்யணும். நம்ம ஜாதி ஜனங்களுக்குச் சப்போர்ட்டா இருக்கணும்”, என்றார் அவர்.

“நான் சுயமரியாதைக்காரி. பகுத்தறிவுடன் செயல்படுவேன். யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டேன். ஜாதி, மதம் பார்த்து ஒரு போதும் செயல்பட மாட்டேன்”, என்று அவருக்குப் பதில் சொல்லி அனுப்பி வைத்தாள் கனிமொழி.

அடுத்தடுத்து ஜாதியைச் சொல்லி வந்தவர்களைப் பார்க்காமல் தவிர்த்தாள் கனிமொழி.

ஒருநாள் முகிலன் தயங்கியபடியே ஒரு செய்தியைக் கனிமொழியிடம் சொன்னான்.

“கனிமொழி, உனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க கொடுத்தேன் அல்லவா! அதை யாரிடமிருந்து வாங்கி வந்தேன் என்று உனக்குத் தெரியுமா?” என்றான்.

“தெரியுமே”, என்று பதில் சொன்னாள் கனிமொழி இதைக் கேட்டு முகிலன் மிகவும் வியப்படைந்தான்.

“எப்படித்தெரியும்?” என்று கேட்டான்.

“இந்தப் படிப்பு படிக்கும் எனக்கு இதைக் கண்டுபிடிக்கத் தெரியாதா? கண்டு பிடிச்சுட்டேன். அன்புக்கரசன் என்பவரிடமிருந்துதானே! அவரும் இந்தத் தேர்வை எழுதி பாஸ் பண்ணிட்டார்”, என்று கனிமொழி சொன்னதைக் கேட்டு மிகவும் வியப்படைந்தான் முகிலன்.

அன்புக்கரசன் தன்னிடமுள்ள புத்த கத்தையும், நூல் நிலையத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களையும் முகிலனிடம் கொடுத்து கனிமொழி படித்தபின் வாங்கிக் கொள்வான். இப்போது அவனும் தேர்வெழுதி வெற்றி பெற்றுவிட்டான்.

“கனிமொழி, அவர் உன்னைப் பார்க்க விரும்புகிறார். அழைச்சிக்கிட்டு வரவா?” என்று  ஒருநாள் கேட்டான் முகிலன்.

“இதுக்கு ஏன் அனுமதி? அழைச்சிக்
கிட்டுவா”, என்றாள் ஆவலுடன்,

“ஆனா அவர் ஜாதி…” என இழுத்தான் முகிலன்.

“நம்மைப் போல் உழைக்கும் ஜாதிதான். உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் நாம் பார்க்கவே கூடாது. மனித நேயம்தான் முக்கியம். உடனே நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்”, என்று மிகுந்த விருப்பத்துடன் சொன்னாள் கனிமொழி. w