Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’! 91ஆம் ஆண்டில் ‘விடுதலை’! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!-மஞ்சை வசந்தன்

சுயமரியாதை இயக்கத்தின் கால்கோள் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் நடைபெற்றது என்று கூறும் அளவிற்கு குறிப்பிடும் அளவிற்கு – சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமாக ‘குடிஅரசு’ ஏடு அமைந்தது.

‘குடிஅரசு’ ஏட்டின் முதல் இதழ் 02.05.1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் சமூகநீதிக்காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும் மிகக் கடுமையாக,  முனைப்புடன் செயல்பட்டு வந்தார் பெரியார்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை, இலக்கு இவற்றைக் கூறும் ஏடாக ‘குடிஅரசு’ அமைந்தது. நாட்டு மக்களுக்கு சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கவேண்டும் என்ற இலக்குடன் இவ்வேடு தொடங்கப்பட்டதால், ஏடு தொடங்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து, 23.08.1925 இதழ் முதல் தலையங்கத் தலைப்பில்,

‘‘அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யெவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறொன்றுண்டோ

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகும்தானே.’’

என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஏடு தொடங்கப்படும் செய்தியறிந்து, திரு.வி.க. அவர்களும், வரதராஜுலு நாயுடு அவர்களும் மிகவும் மகிழ்ந்தார்கள். ஆனால் இச்செய்தியை ராஜகோபாலாச்சாரியிடம் பெரியார் கூறியதும், ‘‘இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும், மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டுவிட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. அதனால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது’’ என்றார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகை வெளியிடுவது பற்றிக் கேட்கையில்,

‘‘அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும், அவை தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்களுக்கு உள்ளது. உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம்’’ என்று பெரியார் கூறினார். அதைக் கேட்டு அகம்மகிழ்ந்த ஞானியார் அடிகள், ‘குடிஅரசு’ அலுவலகத்தைத் திறந்துவைக்கும்போது,

‘‘நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்று கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை’’

‘‘உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும். ‘குடிஅரசு’ ஏட்டின் கருத்தும் இதுவே என நான் அறிந்துகொண்டேன்.

சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்கவேண்டும். இவை ‘குடிஅரசு’ ஏட்டின் முதல் கொள்கையாய் இருக்கவேண்டும். இப்பத்திரிகையில் சிறீமான் நாயக்கருக்கு (பெரியாருக்கு) எவ்வளவு சிரத்தையுண்டே அவ்வளவு எனக்கும் உண்டு’’ என்று கூறி வாழ்த்தினார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஆசிரியராய்ப் பெரியார் இருந்த நிலையில் இணையாசிரியராக திரு.தங்கபெருமாள் 6 மாதகாலம் இருந்தார். ‘குடிஅரசு’ ஏட்டில் இறை சம்பந்தப்பட்டவை இடம் பெற்றிருந்ததற்கு அவரே காரணம். பெரியாரின் முழுப்பொறுப்பில் (ஒரே ஆசிரியர் என்ற நிலை) வந்தபின் அதுபோன்ற கருத்துகள் இடம் பெறவில்லை.

‘குடிஅரசு’ ஏடு தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் அதைப் பாராட்டி சுமார் 400 கடிதங்களும், எதிர்த்து 4 கடிதங்களும் வந்தன.

‘‘குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய், உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும்’’ என்று விமர்சனங்களுக்கு விடையாய் பெரியார் தம் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு தலையங்கத்தில் பெரியார், தாம் கண்டித்து எழுதியவை பற்றிக் குறிப்பிட்டார். என்னால் கண்டிக்கப்படாதவை எவை என்று பார்த்தால் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கண்டித்திருக்கிறேன்.

அரசியம், மதம், கோயில், கடவுள், சடங்கு, வேதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பனியம், ஜாதி, நீதிமன்றம், அலுவலகம், தேர்தல், கல்வி, காங்கிரஸ் ஆட்சியென்று அவர் கண்டித்தவற்றின் பட்டியல் நீள்கிறது.

‘‘ஒரு பொருள் அல்லது ஒரு கருத்து எவ்வளவு பழைமை உடையது என்று சொல்கிறோமோ, அந்த அளவிற்கு அது சீர்திருத்தப்பட வேண்டியதாகும்’’ என்ற தன் வலுவான கருத்தின் அடிப்படையில்தான்அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்டிக்க வேண்டியவற்றைக் கண்டித்தார். திருத்த வேண்டியவற்றைத் திருத்தினார். பெரியார் உலகியலைப் பேசினார்; உலகியலையே எழுதினார். கண்டித்தாலும், பாராட்டினாலும் அது உலகு, உலக மக்கள் நன்மை இவற்றின் அடிப்படையிலேதான் செய்தார். மக்களுக்குப் புரியும் சொற்களில் பேசினார், எழுதினார். புலமையை, திறமையை கவர்ச்சியைக் காட்டும் வகையில் அவர் பேச்சோ எழுத்தோ அமையவில்லை.

தான் கூறுவதை அப்படியே ஏற்காமல், சிந்தித்து சரியானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். எதிர்ப்புக்கும், கண்டனங்களுக்கும், தாக்குதலுக்கும் அஞ்சாது, கலங்காது, பின்வாங்காது, துணிவுடன், எதிர்கொண்டு தன் கருத்துகளைப் பரப்பினார்.

பதவி நாட்டம். புகழ் நாட்டம், பணநாட்டம் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவருக்கும் அனைத்தும் என்பதற்காகவே பாடுபட்டார்.

எனவே தான் ஜெர்மனி தத்துவஞானி வால்டர்ரூபன் என்பவர், ‘‘தந்தை பெரியார் இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமை!’’ – என்றார்.

சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைபெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் ‘‘வால்டர் ரூபன்’’ இந்தியாவைப் பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர்.

மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இன்னும் சில இந்திய அறிஞர்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு ‘‘கேள்வியை’’ முன்வைக்கிறார்.

இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத ‘‘மகத்தான மானுட ஆளுமையுடையவர்’’ யார் தெரியுமா? (Who is the unprecedented Human personality of the present India?)

திகைத்துப் போனவர்கள் காந்தி பெயரைத் தயக்கத்துடன் சொல்ல, காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.சிலர் நேரு பெயரைச் சொல்ல, அவருக்கு முன் உதாரணம் அசோகர் எனச் சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.

நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல, தான் எழுப்பிய வரலாற்றுப் புதிர் கேள்விக்குரிய பதிலைச் சொன்னார். இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை ‘‘பெரியார் ஈ.வெ.ரா தான்’’ என்றார். இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.

இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம், மனுதர்மம், வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக சமூகத்தளத்தில் போராடுகிறார். அதனால்தான் என்றார். இந்தச் செய்தியை சாகித்திய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவர்கள் 25.11.2011 அன்று ஆற்றிய ஒரு உரையில் கூறியிருக்கிறார்.

‘குடிஅரசு’ ஏட்டின் ஒவ்வொரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும்போதும் மக்களுக்கு தம் கருத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. ‘குடிஅரசு’ இதழின் நிலை, சமுதாய நிலை இரண்டைப் பற்றியும் ஒளிவு மறைவு இன்றி தம் கருத்தை வெளிப்படுத்தினார்.

‘குடிஅரசு’ ஒவ்வோர் ஆண்டைக் கடக்கும் போதும் அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான சவால்களும் தொடர்ந்தன. மதவாதிகள், பக்தர்கள், பார்ப்பனர்கள், அவர்களின் கையாளர்கள் என்று பல தரப்பு கண்டனங்களும், எதிர்ப்புகளும் இருந்தன; தொடர்ந்தன.

‘‘உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்புகள் குடிஅரசின் தலைமீது விழுந்து கிடக்கிறது என்பதை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, வருணாசிரமக்காரர்களும், சனாதனதர்மிகளும் உறுமும் உறுமலைப் பார்த்தாலே தெரியவரும்’’ என்று பெரியாரே குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனர்கள் ‘குடிஅரசு’ ஏட்டின் பிரச்சாரம், அந்த ஏட்டைப் படித்துவிட்டு தொண்டர்கள் செய்யும் பிரச்சாரம் இரண்டும் சேர்ந்து, ஆரிய பார்ப்பன ஆதிக்க அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கியதால் அவர்களின் எதிர்ப்பும் வலுவாக இருந்தது.

மேலும் ‘குடிஅரசு’ பெற்றுள்ள மக்கள் ஆதரவையும் பெறவேண்டிய ஆதரவையும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

‘குடிஅரசு’ ‘முதல் வருஷ’த்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும் இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர்களையும் மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பை பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ‘குடிஅரசே’  அதிகமான சந்தாதாரர்களையும் வாசகர்களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானாலும் இனியும் அது அடைய வேண்டிய உயர்ந்த எண்ணிக்கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.

சற்றேறக்குறைய, 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில்  ‘குடிஅரசு’ 7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் ‘குடிஅரசு’ மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும், அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும் படியான தெய்வத்தின் பேராலும், மோட்சத்தின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப்பட்டிருக்கின்றதாலும், ஆதலால்தான் ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.

மற்றபடி இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப்பிரசாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும், தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத்தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டார்கள். இவைகளினாலெல்லாம் குடிஅரசின் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிநிதிகள் உயர்வதிலும் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே  உறுதி கூறலாம்.

‘குடிஅரசு’வின் வாயிலாகப் பெரியார் ஆற்றிய குமுகாயத் தொண்டின் தாக்கம் பற்றிக் கோவை அய்யாமுத்து அவர்கள்,

‘‘கிடைத்ததை உண்டு, சுகத்தைத் துறந்து, போகம் மறந்து. அயர்வறியாது அல்லும் பகலும் காங்கிரசில் உழைத்து வந்தது போலவே, பெரியார் ‘குடிஅரசு தொடங்கிச் சுயமரியாதைப் பிரசாரம் செய்த காலத்தும் அன்பும் அறிவும் ஆவேச உணர்வும் பொங்கிட உழைத்தார். அய்ம்பது ஆண்டுகளில் செயற்கரிய காரியத்தை அவர் அய்ந்தே ஆண்டுகளில் செய்து முடித்தது கண்டு வியப்படையாதோர் இலர்!’’

இச்சான்றுரைகள் யாவும் மிகையானவை அன்று; மெய்யானவை!

ஆக ‘குடிஅரசு’ என்பது வெறும் இதழாக இல்லாமல் ஓர் இயக்கமாக விளங்கிற்று. சுயமரியாதை இயக்கந்தான் ‘குடிஅரசு’ இயக்கம்; ‘குடிஅரசு’ இயக்கந்தான் சுயமரியாதை இயக்கம். இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றுப் பெயராக இலங்கின.

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரே ‘குடிஅரசு இயக்கம்’ என்று குறிப்பிட நேர்ந்தது.

‘‘என் கருத்துகளை வரும் தலைமுறையினர்க்கு விட்டுச் செல்ல வேண்டியது என்னுடைய கடமை’’ என்னும் உறுதிப்பாட்டுடன் ‘குடிஅரசு’ ஏட்டை ஈன்ற பெரியார், அதைப் பேணி வளர்ப்பதற்கான முறைகளைச் செம்மையாகக் கையாண்டார்.

‘குடிஅரசு’ முதல் இதழின் முதற்பக்கத்தில், ‘‘சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா’’ ரூபாய் மூன்றுதான் என்பதோடு, ‘‘தமிழ் மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால், இதனை ஆதரிக்க வேண்டுவது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்’’ என்றும் பெரிய எழுத்துகளில் பொறித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இதழியல் வரலாற்றில் இணையில்லாப் பெருமை படைத்த ‘குடிஅரசு’ ஏட்டை அறிமுகம் செய்தார் பெரியார். கடந்த மே மாதத்துடன் இந்த இதழ் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன.

‘‘விடுதலை’’ ஏடு நீதிக்கட்சியென்று அழைக்கப்படும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினரால் 01.06.1935ஆம் நாள் அன்று தொடங்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டு, விளைவுகளை விடிவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஏடு தொடங்கப்பட்ட போது பெரியார் அவர்கள், அதை வரவேற்றுப் பாராட்டி ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்.

தற்போது அண்ணாசாலை என்று அழைக்கப்படும் மவுண்ட்ரோட்டில் 14ஆம் எண்ணுள்ள கட்டடத்திலிருநது வெளிவந்தது. அதன்பின் 1937 ஆண்டு முதல் பெரியாரே ஏற்று நடத்தினார். 01.01.1937 முதல் ‘விடுதலை’ நாளேடாக ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடக்க காலத்தில் ‘விடுதலை’ ஏட்டின் விலை காலணா.

சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இவ்வேடு பரப்பிக்கொண்டிருக்கிறது. வருணபேதம், ஜாதி, மதம், பெண்ணடிமை, மூடநம்பிக்கை, வேத, சாஸ்திரம், புராணங்களை மறுத்தல், எதிர்த்தல், ஒழித்தல் இதன் முதன்மை இலக்காக இருந்து வருகிறது. சமூகநீதி, சமத்துவம், அறிவியல், பொதுவுடைமை கல்வி உரிமை, பெண்ணுரிமை, ஆதிக்க ஒழிப்பு, தமிழை அறிவியல் மொழியாக்கல் போன்றவற்றைச் செய்வதை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது. எனவே இது செய்தி ஏடல்ல, இயக்கக் கொள்கைகளை வென்றெடுக்க, மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வழிகாட்டும் ஏடு. இன்றைக்கு வீடு தோறும் ‘விடுதலை’ என்பது இலக்காகக் கொள்ளப்பட்டு பரப்பப்படுவதோடு, இணையதளத்திலும் இலவசமாய்ப் படிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

‘விடுதலை’ ஏடு வாரம் இருமுறையாகத் தொடங்கப்பட்டு அதன்பின் நாளேடாக ஆக்கப்பட்டது. இதன் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் அவர்கள். இவர் 01.06.1935 முதல் 06.05.1936 வரை அப்பொறுப்பில் பணியாற்றினார். இவர் தந்தை பெரியார் 1940இல் மும்பை சென்று அம்பேத்கரைச் சந்தித்துபோது உடன் சென்றவர். ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்கள் 04.11.1936 முதல் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1936 ஜனவரி 7ஆம் நாள் வரை அப்பொறுப்பிலிருந்தார்.

நீதிக்கட்சியால் தொடர்ந்து ‘விடுதலை’ ஏட்டை நடத்த முடியாமல் பெரியாரிடம் ஒப்படைத்தது. 29.051935 நீதிக்கட்சியால் நிறுத்தப்பட்ட ‘விடுதலை’ ஏடு மீண்டும் 01.07.1937 முதல் பெரியாரால் நாளிதழாக நடத்தப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது.

நீதிக்கட்சி ‘விடுதலை’ ஏட்டை நடத்தியபோது,

‘‘பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

பரவரோடு குறவருக்கு மறவருக்கும் விடுதலை!’’

என்ற பாரதியார் பாடல் இடம் பெற்றிருந்தது. பெரியாரிடம் ‘விடுதலை’ வந்தபின் 01.07.1937 முதல் அப்பாடல் இடம் பெறவில்லை.

1937இல் துறையூரில் முசிறி தாலுகா சுயமரியாதை மாநாட்டில் அண்ணா பங்கேற்றார். அண்ணா முதன்முதலில் தலைமையேற்ற மாநாடு இதுதான். துறையூரில் நடந்த மாநாடு குறித்து 1937 ஆகஸ்ட் 23ஆம் தேதி பெரியார் விடுதலையில் தலையங்கம் எழுதினார். நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பை துல்லியமாக அதில் கூறியிருந்தார்.

சுயமரியாதை இயக்கம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் ஜஸ்டிஸ் கட்சி ஆழப்புதைக்கப்பட்டு, சத்தியமூர்த்தியின் ஆசை நிறைவேறியிருக்கும் என்ற வரலாற்று உண்மையையும் கூறியிருந்தார். ஜஸ்டிஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பும் சுயமரியாதைக்காரர்களின் தலையிலே இறக்கப்பட்டது என்றும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சிக்கு இருந்த செலவாக்குக்கு காரணம் சுயமரியாதை இயக்கமே என்றும் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்கவேண்டியதாயிற்று. அறவே அழியும் நிலையிலிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிய பெரியார், ‘விடுதலை’ ஏட்டையும் பொறுப்பேற்று நடத்தினார்.

ஜஸ்டிஸ் கட்சி சார்பில் ‘விடுதலை’ கடைசியாக வெளிவந்தது 29.05.1937 அன்றுதான்.

‘விடுதலை’ ஏட்டை பெரியார் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றினார். 01.07.1937 முதல் விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. பெரியார் பொறுப்பில் விடுதலை வந்தபின் அதன் ஆசிரியராக பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை பொறுப்பேற்றார். வெளியிடுபவராக ஈ.வெ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டில் வருணாசிரம தர்மத்திற்கும், முதலாளிகள் ஆட்சிக்கு எதிராகப் பத்திரிகை நடத்துவது கஷ்டமும், நஷ்டமும், தொல்லையுமான காரியமாகும் என்ற கசப்பான  உண்மையையும் பெரியார் சரியாகக் கூறினார்.

விடுதலைப் பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரை அரசு விரோதம், வகுப்பு துவேஷம் ஊட்டுகின்றன என்று கூறி வழக்குத் தொடுத்து,  நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பண்டித முத்துசாமி பிள்ளையும் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

09.01.1939 அன்று பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று 13.02.1942 வரை பணியாற்றினார். 14.02.1942 முதல் 18.09.1943 வரை ‘விடுதலை’யின் ஆசிரியராக என்.கரிவரதசாமி பணியாற்றினார்.

18.09.1943 இதழோடு ‘விடுதலை’ நிறுத்தப்பட்டு யுத்தப் பிரச்சார ஏடாக வெளிவந்தது. 19.09.1943 முதல் 05.06.1966 வரை ‘விடுதலை’ பெரியார் பொறுப்பில் இல்லை. அக்காலகட்டத்தில் வெளிவந்த ‘விடுதலை’ ‘‘புது விடுதலை’’ என்ற பெயரில் வந்தது.

தனக்கு நெருக்கடி தந்த அரசாங்கத்திற்கு போர்க் காலம் என்பதால் அரசுக்கு துணை நிற்றல் என்ற அடிப்படையில் பெரியார் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். பத்திரிகை முழுக்க போர்ச் செய்திகளே அச்சிடப்பட்டிருந்தன. அப்போது சீர்திருத்த எழுத்தும் தவிர்க்கப்பட்டது.

1943 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ‘விடுதலை’ இதழ்கள் பெரியார் பொறுப்பில் இல்லை. அதுபோல் 1944 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டு காலமும் அவர் பொறுப்பில் ‘விடுதலை’ வெளிவந்தது. கே.ஏ. மணி(மணியம்மையார்) 07.06.1946 முதல் 06.09.1949 வரை விடுதலை ஆசிரியராகப் பொறுப்பில்  இருந்தார். 1949 செப்டம்பர் 7ஆம் தேதி கே.ஏ.மணி என்னும் பெயர் ஈ.வெ.ரா.மணியம்மை என்று மாற்றப்பட்டு இதழ் வெளிவந்தது. (பெரியார் மணியம்மையார் திருமணம் 09.07.1949ல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.

07.09.1949 முதல் 16.03.1978 வரை ஈ.வெ.ரா. மணியம்மை அவர்கள் ‘விடுதலை’ ஏட்டின் அதிகார பூர்வ ஆசிரியராய்ப் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு ‘விடுதலை’ இதழுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வேறு எந்தப் பத்திரிகைக்கும் இவ்வளவு தொகை கேட்கப்படவில்லை என்பது மிக முக்கியமான செய்தியாகும்.

ஆரிய பார்ப்பனர்கள், எப்படியாவது விடுதலையை முடக்கி, அதன் பிரச்சாரத்தை, அதன்மூலம் மக்கள் பெறும் விழிப்பைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே, அரசின் மூலம் இச்செயலைச் செய்தனர்.

அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் தங்கள் கருத்துகளை ‘விடுதலை’யில் எழுதி மக்களைக் கவர்ந்தனர், விழிப்பூட்டி எழுச்சிபெறச் செய்தனர்.

அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் தி.மு.க. தொடங்கப்பட்டபின், குத்தூசி குருசாமி நிருவாக ஆசிரியராக ‘விடுதலை’யில் சிறப்பாக எழுதி வந்தார். குத்தூசி குருசாமி தந்தை பெரியாருடன் முரண்பட்டு நின்றதால் விலக்கப்பட்டார்.

அந்நிலையில் விடுதலையைத் தொடர்ந்து நடத்துவதில் சரியான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி பெரியாருக்கு ஏற்பட்டது. அச்சூழலில் பெரியார் தேர்வு செய்தது. கடலூரில்  வழக்கறிஞராகப் பணியாற்றிய கி.வீரமணியவர்களைத்தான்.

பெரியாரின் அன்புக் கட்டளையை ஏற்று கி.வீரமணியவர்கள் 21.08.1962 முதல் ‘விடுதலை’க்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் ‘விடுதலை’ தொடர்ந்து வெளிவர துணை நின்றார்.

மணியம்மையார் மறைவிற்குப்பின் ‘விடுதலை’யின் முழுப் பொறுப்பையும் ஏற்று, விடுதலையை விரிவாக்கி, சந்தாக்களைப் பெருக்கி, திருச்சியிலும் ஒரு பதிப்பை உருவாக்கி சிறப்புடன் நடத்தி வருகிறார். ‘விடுதலை’ தமிழக வரலாற்றில் பல சாதனைகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

‘விடுதலை’ பற்றி அண்ணா

‘‘கீழ்த்தர ஜாதியாய் – நான்காம் அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் – உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டுவிட்டாய் – பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டுவிட்டாய் – கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய் – அரசியலிலோ, பிறதுறைகளிலோ கேவலம்  கீழ்த்தர சிப்பந்தியாய்ச் சீர்க்குலைக்கப்பட்டுவிட்டாய்’ என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியும் வாழக்கைத்துறையில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது’’ என்று ‘விடுதலை’யின் அளப்பரிய பணியைக் கூறினார்.

கலைஞர் கருத்து

‘‘‘விடுதலை’ என் வழிகாட்டி, திசைகாட்டி, ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் தவறாது படித்து என்னை நான் சீர்செய்து கொள்கிறேன்; நேர் செய்து கொள்கிறேன் என்று ‘விடுதலை’யைப் பெருமையாக நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

சமூகநீதி, இடஒதுக்கீடு, ஆட்சியாளர்களை நெறிப்படுத்தல், போராட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’ ஏட்டின் பங்கு இணையற்றது.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதில் இவ்வேடு வரலாற்று சாதனை செய்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் அரசுக்கும், மக்களுக்கும், அலுவலர்களுக்கும், தொண்டு பணி செய்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தேவையான கருத்துகளை அறிக்கையாக எழுதி வழிநடத்துகின்ற, தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற பணியை ‘விடுதலை’ செய்து வருகிறது. தொலைக்காட்சிகளின் அன்றாட விவாதங்களின் கருப்பொருளை ‘விடுதலை’யே வழங்குகிறது என்றால் அது மிகையன்று.

இத்தகு சிறப்புக்குரிய பழைய ‘குடிஅரசு’ ஏட்டையும் ‘விடுதலை’ ஏட்டையும் இன்றைய தலைமுறை படிப்பதோடு, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘The
Modern Rationalist’ போன்ற ஏடுகளைத் தவறராது படித்து, விழிப்பும், தெளிவும் பெற்று, கல்வி, சமூக நீதி, சமத்துவம், சமஉரிமை பெற வேண்டும், அனைவரும் பெறத்தொண்டாற்ற வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே காப்பாற்றப்பட,  இந்திய மக்கள் உரிமையும் உயர்வும் பெற அதுவே வழி! சுயமரியாதைச் சுடரொளிதான் இந்தியா எங்கும் வெளிச்சமும், விழிப்பும் தருகிறது என்பதே இன்றைய யதார்த்த நிலை! தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம்! w