Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தகவல் களஞ்சியம்

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் இயக்கத் தலைவர், பத்திரிகையாசிரியர் என்ற எல்லையுடன் இயங்குபவர் அல்லர். அவர் பலதுறைகளிலும் அறிவு பெற்ற ஓர் அற்புத அறிவுக் களஞ்சியம்.

அயராது பல்துறை அறிவைத் திரட்டி தன்னுள் தயார் நிலையில் வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம். அவரோடு பேசுகின்ற எவரும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அவருடன் வாகனத்தில் பயணம் செய்யும்போது, பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.  ஒவ்வொரு பேச்சிலும் ஏதாவது ஒரு அரிய செய்தி கிடைக்கும். அத்தனையும் அரிய முத்துக்களாயும் இருக்கும்.

நான் 1979இல் இயக்கத்தில் இணைந்தேன். 1981 முதல் 2011 வரை ஆசிரியர் பணி. எனவே, அவரோடு பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு மிக அரிதாகவே கிடைத்தது. என்றாலும், அந்த சில வாய்ப்புகளில் நான் அறிந்தவை வாழ்நாள் எல்லாம் கடைப்பிடிக்க உகந்தவை; கடைப்பிடித்தும் வருகிறேன். அவற்றை இங்கே குறிப்பிடுவது அனைவருக்கும் நலம் பயக்கும் என்பதால் எழுதுகிறேன்.

சிதம்பரத்திலிருந்து நெய்வேலி நோக்கி தமிழர் தலைவருடன் பயணித்தேன். வடலூர் நெருங்கும்போது ஓர் உன்னதக் கருத்தைச் சொன்னார். படுத்து உறங்குவது சார்ந்து பேச்சு வந்தது. அப்போது தலைக்கு வைக்கும் தலையணை எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றிக் கூறினார். தலைக்கு வைக்கும் தலையணை அதிக தடிமன் இல்லாமல் 2 அங்குல உயரம் (தடிமன்) உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் கழுத்துக்கும், மூளைக்கும் நலம் தரும் என்றார்கள்.

அன்றையிலிருந்து 2 அங்குலத்தில் என் தலையணை மாற்றப்பட்டது. உண்மையில் அதன்பிறகு கழுத்துக்கும் மூளைக்கும் இதம், சுகம், நலம். அனுபவத்தில் என்னால் இப்பயன்களை அறிய முடிந்தது. சுமார் 33 ஆண்டுகள் நிம்மதியாய் தூங்குகிறேன். அதற்குமுன் தடித்த தலையணையைத் தேடியது அறியாமை என்பதையும் அறிந்தேன்.

அதே பயணத்தில் நெய்வேலியை நெருங்குவதற் குள் உண்பது சார்ந்து ஒரு செய்தி சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மாதுளை. அதுவும் வெள்ளை மாதுளை உண்பது மிகவும் சிறந்தது என்னும் குறிப்பைச் சொன்னார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மாதுளை உண்ண ஒருநாளும் நான் தவறுவது இல்லை. மாதுளை குடலுக்கு நல்லது;

மூலநோய் வராது; வயிற்றுக் கடுப்பு நீங்கும், குடல் புண் வரவே வராது. உண்மையாகச் சொல்கிறேன். 33 ஆண்டுகளில் எனக்கு வயிற்றுப் பிரச்னை வந்ததே இல்லை! மாதுளை ஓர் உயர்ந்த பழம். குடல், உடல் இரண்டுக் கும் நலம் பயக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். கிடைக்காத காலத்திலும் அதிக விலை கொடுத்தாவது மாதுளையை வாங்கிச் சாப்பிட நான் தவறுவதே இல்லை.
இன்னொரு முறை ஆசிரியருடன் பயணம் செய்தபோது, பப்பாளி பழம் பற்றிய பேச்சு வந்தது.

ஒவ்வொரு நாளும் பப்பாளியை உண்ண வேண்டியதன் அவசியத்தைச் சொன்னார்கள். இரவில் அளவோடு பப்பாளி பழத்தை உண்டு ஒரு டம்ளர் பால் பருகிவந்தால், மலச்சிக்கலே வராது; கண்ணின் மணி ஒளி பெறும், இதயத்திற்கு வலு சேர்க்கும் என்றார்கள். சுமார் 25 ஆண்டுகள் ஆசிரியர் கூறியபடி பப்பாளியும் தவறாது சாப்பிட்டு வருகிறேன். மலச்சிக்கல் இல்லை; இதயம் வலுவாகவுள்ளது; கண் சோதனையிலும் கண்ணின் பார்வைத் திறன் சிறப்பாகவுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியருடன் சிதம்பரத்தில் வேனில் சென்றேன். வேன் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் (எதிரில்) நின்றது. பேருந்து நிலைய கட்டட முகப்பு கோயில் கோபுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, மதச்சார்பற்ற அரசு இப்படி இந்துக் கோயில் சின்னத்தை வைக்கலாமா? நாம் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றேன்.

அதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எது முதன்மைப் பிரச்னையோ அதையே கையில் எடுக்க வேண்டும்.  பலவற்றை நாம் எதிர்க்க வேண்டிய நிலையில், எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால் நம்முடைய ஆற்றல் சிதறும். நம் ஆற்றலை முதன்மை இலக்கு நோக்கி குவிக்க வேண்டும். அதுதான் இயக்க போராட்ட அணுகுமுறை என்றார்கள்.

அன்று அவர் கொடுத்த அரிய கருத்து, தலைமையாசிரியராய், நிர்வாகியாய் நின்று ஒரு பெரும் கல்வி நிறுவனத்தை நடத்த எனக்கு மிகவும் பயன்பட்டது. ஒவ்வொரு நாளும் பல சிக்கல்கள், எதிர்ப்புகள், எதிர்க்க வேண்டியவைகள் வரும்போதெல்லாம், ஆசிரியர் வழிகாட்டலின்படி முதன்மையானதில் கவனத்தைச் செலுத்தி வெற்றியை எட்டினேன், எய்தினேன். நானும் பலருக்கும் இச்செய்திகளைச் சொன்னேன்.

1981இல் எனது திருமணத்தை நடத்திவைக்க ஆசிரியரிடம் தேதி கேட்டேன். உங்களுக்கு சிதம்பரம் பகுதியில் நிகழ்ச்சியிருக்கும்போது கொடுத்தால் போதும் என்றேன். செவ்வாய்கிழமை ஜூன் 1ஆம் தேதி கொடுத்தார்கள். திருமணம் 10 மணி முதல் 12 மணி வரை வைத்துக்கொள்ளலாம் என்றேன், ஆசிரியர் புறப்பட்டு வர வசதியாய் இருக்கும் என்பதால். வேண்டாம் காலை 7.30 முதல் 8.30க்குள் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, 10 மணிக்குள் திருமணத்தை முடித்துவிடுங்கள். மதியம் சாப்பாட்டுச் செலவை மிச்சப்படுத்தலாம் என்றார். உங்களுக்கு சிரமமாக இருக்குமே என்றேன். நான் இரவு பங்களாவில் தங்கிக் கொள்கிறேன். நெ.து. சுந்தரவடிவேலு அவர்களும் காலை 6 மணிக்கு வந்துவிடுவார். அவரையும் நேரத்தில் அனுப்பி விடலாம் என்றார்கள்.

ஆக, ஒரு நிகழ்வைத் திட்டமிடும்போது சிக்கனம், பலருக்கும் வசதி என்று பலவற்றைச் சிந்தித்து, தொண்டர் வீட்டு நிகழ்ச்சியையும் தன் வீட்டு நிகழ்வாக, நம் குடும்பத்து உறுப்பினரில் ஒருவராக நின்று சிந்தித்து ஆலோசனை வழங்கும் அரிய பண்பிற்குரியவர் ஆசிரியர் அவர்கள். அதனால்தான் அவர் தமிழர்களின் தலைவர்! தமிழ்க் குடும்பங்களுக்கெல்லாம் அவர்தான் ஆசான்! ஆம்; உண்மையான ஆசான்! காரணம், அவர் ஓர் அறிவுக் களஞ்சியம். தமிழர்கள் அக்களஞ்சியத்தில் எவ்வளவு பெறுகிறார்களோ அவ்வளவு உயரலாம்!

வாழ்க தமிழர் தலைவர்!

– மஞ்சை வசந்தன்